மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
5Kg ஹெரோயினுடன் பொலிஸாரிடம் சிக்கினார்

தென்னிலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலிசரயில் கைது

5Kg ஹெரோயினுடன் பொலிஸாரிடம் சிக்கினார்

தெற்கில் செயற்பட்ட போதைப்பொருள் கடத்தல் மன்னர் ஒருவருடன் சேர்த்து இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.இராகம, வெலிசர பிரதேசத்தில் ஐந்து கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றில் இவற்றை கொண்டு செல்லும் போது பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று முன்தினமிரவு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை இலங்கையின் தென்பகுதியில் செயற்பட்டு வந்த பாரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசித்து வந்த வசந்த மெண்டிஸ் என்ற குறித்த பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில்,வெளிநாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அதன்படி நேற்று சனி அதிகாலை அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

2013ம் ஆண்டு சுங்க அதிகாரிகளினால் 30 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் லைபீரிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெற்கில் செயற்பட்டு வந்த பாரிய போதைப் பொருள் கடத்தல் வர்த்தகம் சம்பந்தமாக தெரிய வந்துள்ளது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளில் பிரதான சந்தேக நபரான வசந்த மெண்டிஸ் தொடர்பான தகவல்கள் வௌியாகியிருந்த நிலையில் அவர் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]