புத். 68 இல. 13

மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17

SUNDAY MARCH 27, 2016

 

 
அரசியலாக்க வேண்டாம்

ஒரு சிறு கிடுகுக் கொட்டில் வீடுகூட கட்டித் தர முன்வராதோரின் செயலுக்கு கண்டனம்:

65,000 வீட்டுத் திட்டம்

அரசியலாக்க வேண்டாம்

எதிரும் புதிருமாக அறிக்கைவிடும் அரசியல்வாதிகளிடம் பயனாளிகள் மன்றாட்டம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுச் சொத்துக்களை இழந்து இருக்க இடமில்லாது ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து அலைந்து திரியும் தமக்கு அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் கட்டித்தர ஏற்பாடு செய்துள்ள 65,000 வீட்டுத் திட்டத்தில் தேவையற்ற விதத்தில் மூக்கை நுழைத்து உங்களது அரசியல் இருப்பிற்காக அதனை அரசியலாக்கி கிடைப்பதைக் கிடைக்கவிடாது செய்துவிட வேண்டாம் என இந்த வீட்டுத் திட்டத்தினால் நன்மை பெறவுள்ள பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் மழையிலும், வெய்யிலிலும் குழந்தைகளுடனும் வயோதிபர்களுடனும் இருக்க இடமில்லாது அகதி முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் இருந்துவரும் தமக்கு இதுவரை காலமும் ஒரு சிறு கிடுகுக் கொட்டில் வீடு கூடக் கட்டித்தர முன்வராதோரே இன்று கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் எமக்காக் குரல் கொடுக்க முன்வந்துள்ளனர். இது போலியான நடிப்பு. அரசியல் இலாபம் தேடும் ஆதாயத்திற்கான வேடம் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, எமது தேவையறிந்து எமக்கு இரண்டு நாட்டு அரசாங்கங்களும் சிறிய வீடுகளை அமைத்துத் தர முன்வந்துள்ளன. இப்போதுள்ள எமது அவசரத் தேவைக்கு அவை எமக்குப் போதுமானது. எதிர்காலத் தேவை குறித்து நாம் பின்னர் பார்க்கலாம். இந்த வீட்டுத் திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதனைப் பெரிதுபடுத்திப் பார்க்க இது நேரமல்ல. எமக்கு இப்போது எமது குழந்தைகளுடன் இருக்க ஒரு வீடே தேவையாக உள்ளது. இந்நிலையில் நாம் மாளிகையை எதிர் பார்க்க முடியாது. முதலில் கிடைப்பதைப் பெற்றுக் கொண்டு எமது முயற்சியின் மூலமாக அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த அரசாங்கத்தின் காலத்தில்கூட இது தொடர்பாகச் சில விடயங்கள் முன்னெடுக்கப்பட்டபோதும் உள்ளுர் அரசியல்வாதிகள் சிலரின் தேவையற்ற விவாதங்களினால் கிடைக்க வேண்டிய வீட்டுத் திட்டங்கள் கிடைக்காது போயின. எனவே, இனியாவது யுத்தத்தினால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட எமக்கு இன்றைய நல்லாட்சியிலாவது வீடுகள் கிடைப்பதைத் தடுக்க வேண்டாம் எனவும் பயனாளிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் அதிகாரிகளுடன் இணைந்து சரியான முறையில் செயற்பட்டு வருகிறார். இதனைக் குழப்ப எவரும் முயற்சிக்கக் கூடாது. எம்மீது என்றுமில்லாத அக்கறை ஜே.வி.பி யினருக்குத் திடீரென ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசியலுக்காக எம்மைப் பாவிக்க முனைந்துள்ளனர். எனவே, தயவுசெய்து எமக்காக எதிரும் புதிருமாக அறிக்கை விடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் எனவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.