மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
பி. சுசீலாவிற்கு விருது பிரதமர் வழங்கி கௌரவிப்பு

கம்பன் விழாவில் இன்று

பி. சுசீலாவிற்கு விருது பிரதமர் வழங்கி கௌரவிப்பு

கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா கடந்த 24ஆம் திகதி ஆரம்பமானது. இன்று 27ஆம் திகதி வரை காலை, மாலை நிகழ்வுகளாக கொழும்பு கம்பன்கழக பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன், தலைவர் தெ.ஈஸ்வரன் ஆகியோரின் தலைமையில் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில் தமிழக பின்னணிப் பாடகி பத்மபூஷண் பி. சுசிலா கலந்து கொள்கிறார். இவர் 2016 ஆம் ஆண்டுக்கான கம்பன் புகழ் விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறார். இந்நிகழ்வில் பிரதமர் விக்கிரமசிங்க கலந்து இவருக்கான விருதை வழங்குவார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் நான்காம் நாள் நிகழ்வில் சோபி ரவல்ஸ் அதிபர் ஏ.தங்கராசா தம்பதியர் மங்கல விளக்கேற்றவுள்ளதுடன், செல்வி வைஷாலி யோகராஜா தமிழ் வாழ்த்திசைப்பார்.

இதனைத் தொடர்ந்து வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலர்ஸ் அதிபர் ஏ. பி. ஜெயராசா தலைமையுரையும், புதுவைக்கம்பன் கழக செயலர் வி. பி. சிவக்கொழுந்து தொடக்கவுரையையும் ஆற்றுவார்.

மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம விருந்தினராகவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராகவும் மேல் மாகாண சபை ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில், தேவி ஜுவலர்ஸ் அதிபர் என்.வாசு தம்பதியர் மங்கல விளக்கேற்றவுள்ளதுடன், திருமதி தாரணி ராஜ்குமார் கடவுள் வாழ்த்திசைப்பார்.

சிறப்புரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்குவார். வழக்காடு மன்றமும், கம்பன் புகழ் விருது ஆன்றோர் கௌரவமும் இடம்பெறவுள்ளது.

இலங்கை திறந்த பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் உமா குமாரசாமி, கட்புல அரங்காற்றுகைப் பல்கலைக்கழக விரிவுரை யாளர் கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் திருமதி அனுஷியா சிவராஜா, சித்ரசேன வஜிரா நாட்டிய பள்ளி நிர்வாக இயக்குனர் வஜிரா சித்ரசேன, ஐ.நா.சபை முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ராதிகா குமாரசாமி, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் கே. வி. ஹஜர்ஜான் மன்சூர் ஆகியோர் கௌரவம் பெறவுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]