மன்மத வருடம் பங்குனி மாதம் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜுமாதல் ஆகிரா பிறை 17
SUNDAY MARCH 27, 2016

Print

 
ராஜஸ்தானில் புரட்சி செய்த ஒரு பெண் விடுதலைப் போராளி!

ராஜஸ்தானில் புரட்சி செய்த ஒரு பெண் விடுதலைப் போராளி!

பன்வாரிதேவியென்ற பெயர் இந்தியாவிலுள்ள சமூகசேவை நிறுவனங்கள் மற்றும் பெண்ணுரிமைக்கான அமைப்புகள் மத்தியில் வெகுபிரசித்தமானது. இவரது மனித உரிமைப் போராட்டங்களை உலகமெங்கும் பரப்பியதில் ஊடகங்கள் பலவற்றிக்கும் பிரதான பங்குண்டு. இவரது பெயரைத் தெரிந்திருக்கிற அளவுக்கு இவரது பின்னணி பலருக்கும் தெரிந்திருக்காது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 22 ஆண்டுகளுக்கு முன்நிகழ்ந்த கொடூரம் அனைத்து இந்தியாவையுமே உலுக்கியெடுத்தது. சாதி, மேலாதிக்க மற்றும் ஆணாதிக்க வெறிமிகுந்த ஐவர் கொண்ட காடையர் கும்பலொன்றால் இவர் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அதுவும் அவரது கணவன் கண்முன்னாலேயே!

அன்று தனக்கு நடந்த அந்தக் கொடுமைக்கு நீதி கேட்டு இன்றுவரை போராடிவரும் பன்வாரிதேவி, இன்று இந்தியாவின் முக்கியமான பெண்ணுரிமைப் போராளிகளுள் ஒருவராகத் திகழ்கிறார். ஆண்களுக்கு நிகராக எல்லாப் பணிகளிலும் இன்று போட்டி போட்டுக் கொண்டு முன்னேறிவரும் பெண்களுக்கு அவர்களது பணியிடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் எதிரான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரக் காரணமானது. புதுடில்லியின் மருத்துவக் கல்லூரி மாணவி விசாகா மீது காடையர் கும்பபொன்று புரிந்த பாலியல் வன்கொடுமையும் வன்கொலையுமாகும். அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்ததோடு, அந்த மிருகத்தனத்துக் கெதிராக நாடெங்கிலும் ஊருக்கு ஊர். வீதிக்கு வீதி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் வேலை நிறுத்தங்களும் நடத்தக் காரணமாயிருந்த போராளிகளில் முக்கியமானவர் இந்தப் பன்வாரியும் அவரது அமைப்பும்தான்.

சென்னையில் சமூக நல அமைப்புகளும் ஊடகங்களும் ஏற்பாடு செய்திருந்த மரண தண்டனைக் கெதிரான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வந்திருந்த பன்வாரியிடம் “இந்து” பத்திரிகை நடத்திய நேர்காணலின் போது அவர் தெரிந்ததாவது,

எனது சொந்த ஊர் ஜெய்ப்பூரிலிருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள பாட்டேரி. அது ஒரு பின் தங்கிய குக்கிராமம். நான் கும்ஹர் என்ற ஒடுக்கப்பட்ட சமூக அடிமட்டக் குடும்பமொன்றைச் சேர்ந்தவள். ராஜஸ்தான் மாநில அரசு பெண்களின் முன்னேற்றத் திட்டத்தை முதன்முதலாக ஆரம்பித்தபோது “சாத்தின்” என்ற தொண்டு நிறுவனத்தில் 1985இல் ஒரு சாதாரண ஊக்குவிப்பாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்நிறுவனத்தின் இணைப்பாளராயிருந்த வெள்ளைக்காரப் பெண்மணி எனக்கு நிறைய விடங்களைக் கற்றுக் கொடுத்தார். இதனால் ஊர்ப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். குடிநீர்த் தட்டுப்பாடு, கல்விமறுப்பு, சுகாதாரக்கேடு, பெண்களுக்குக் கூலி குறைவாகக் கொடுத்தல் போன்ற எல்லாப் பிரச்சினைகளையும் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டி சாத்வீக கவனஈர்ப்பு போராட்ட ரீதியில் எதிர்த்துக்கேட்டேன்.

ராஜஸ்தானில் அதிலும் எங்கள் பிரதேசங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடக்கும். ஒருமுறை ஒன்பதுமாதப்பெண் குழந்தைக்கும் அதே ஒன்பது மாத ஆண் குழந்தைக்கும் திருமணம் நடத்த முயற்சித்தார்கள். எனது நிறுவனத்தின் மூலம் நான் அதனைத் தடுத்தேன். அதிலிருந்தே பிரச்சினைகள் ஆரம்பமாயின. இதனால் ஆத்திரமடைந்த குஜ்ஜார் என்ற மேல் ஜாதிக்காரர்கள் ஐவர் என் கணவரை அடித்துக் கட்டிப்போட்டு விட்டு, அவர் கண்ணெதிரிலேயே நான் கதறக்கதற ஆள் மாறி ஆள் வன்புணர்வு செய்தனர். உடனடியாக நான் பொலிஸில் சென்று புகார் கொடுத்தேன். என் முறைபபாட்டை ஏற்ற அவர்கள் என்னை அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பெண் டாக்டர் இல்லையென்று கூறி என்னைப் பரிசோதனைக்கு உட்படுத்த மறுத்துவிட்டனர்.

பிறகு அங்கிருந்து ஜெய்ப்பூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியொன்றுக்குப் போனால், அங்கே நீதிபதியின் உத்தரவில்லாமல் எந்தப் பரிசோதனையும் பண்ண முடியாதென்று கூறிவிட்டனர். இதனால் நீதிபதியின் வீட்டுக்கு அலைந்ததில் உடற்பரிசோதனை செய்ய இரண்டு நாட்களாகிவிட்டன. பரிசோதனை அறிக்கைப் பார்த்து விட்டு நீதிபதி சொன்ன தீர்ப்பு என்னை வெகுவாய்ப்பாதித்தது.

ஒரு தாழ்ந்த சாதிப் பெண்ணை ஒரு மேல்சாதிக்காரன் எக்காரணம் கொண்டும் நெருங்குவதில்லையென்பது நடைமுறை வழக்கிமாகும். ஆகையால் தன்னைத் தீண்டி கற்பழித்ததாகவும் இப்பெண் கூறும் முறைப்பாட்டை நம்பமுடியாது என்று நீதிமன்றில் வைத்து அந்த நீதிபதி தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பை எதிர்த்து நான் உயர்நீதிமன்றில் வழக்குப் போட்டேன். அது தவணை தவணையாக நீண்டு இன்று 22 வருடங்காகிவிட்டன. இன்னமும் வழக்கும் முடியவில்லை. குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் கிடைத்த பாடில்லையென்பது பெரிய வருத்தமாக இருக்கிறது என்று கூறும் பன்வாரிதேவிக்கு, இவ்விதம் மேல்சாதிக்காரர்களுக்கு எதிராக வழக்குப் போட்டதுக்காக பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. வழக்கை வாபஸ் பெறுமாறு மேல் சாதித் தலைவர்கள் பலர் இவரோடு பேசிய பேரங்கள் எதற்கும் இவர் இணங்காததால் அந்த சாதிக்காரர்களோடு இவரது சாதிக்காரர்களும் பன்வாரியை ஊரைவிட்டே விலக்கி வைத்தனர். இவரைப் பெற்றதாய் இறந்த போது கூட சென்று பார்க்க இவரை அனுமதிக்கவில்லை!

இச்சம்பவத்திற்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடம் ஆரம்பித்தார் பன்வாரி. குறிப்பாக குழந்தைத் திருமணங்’களுக்கு எதிராக குரல் கொடுத்தார். பெண்ணிய அமைப்புகள் சிலவற்றையும் சேர்த்துக் கொண்டு பொது இடங்களில் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தினார்.

அதன் பயனாக இப்போது அவரது கிராமத்திலும் அதன் சுற்றுவிட்ட கிராமங்களிலும் குழந்தைத் திருமணங்கள் நடப்பதில்லை. அங்கெல்லாம் மூடிமுக்காடிட்டு கட்டுப் பெட்டிகளாக வீடுகளுக்குள்ளே வைத்து வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகளெல்லாம் இப்போது பள்ளி சென்று படிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கெல்லாம் தொண்டு நிறுவனங்கள் பலவற்றின் உதவிகளோடும், அரசாங்கத்திடம் உதவிகள் பெற்றும் நிறைய உதவி பெற்றுக் கொடுத்து ஊக்குவித்து வருகிறார். இவருக்கு இரு ஆண்களும் இருபெண்களுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களெல்லாம் நன்கு படித்து பட்டங்கள் பெற்று கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]