பறவைகள் பாடிக்களித்தன. காகங்களும் பாடி ஆரவாரமிட்டபடியிருந்தன! சேவல்களும் கூவி
விழித்தெழ, உற்சாகமூட்ட வைத்தன!... மாதவன் துயில் நீங்கினார். இந்தப் பறவை
பட்சிகளின் ஆரவாரமான இசைச்சாம்பார் கேட்டே கண் மலர்வார் அவர்!
இன்று கண் மலர்ந்ததும் வழமை போல் கொட்டாவி விட்டு சோம்பல் முறித்து நோவுகள் உளைவுகளை
சரிக்கட்டி எழுந்து போவது போல் இன்று அவர் இல்லை! அப்படியே கிடந்தார்; இயற்கையின்
கான ஒலிகளைக் கேட்டபடி!... விடியப் போகிறது என்று உணர்ந்தவுடனே இந்தப் பறவை பட்சிகள்
எல்லாம் எவ்வளவு உற்சாகமாக பாட்டுப் பாடி வரவேற்கின்றன! அன்றைய பொழுதை – வாழ்வை
எதிர்கொள்கின்றன! எந்த மனிதனால் இல்லை தலைவனால் முடியக் கூடும் இது!... மனிதனுக்கு
மட்டும் மனதை கொடுத்ததன் பயனா இது!... இந்த சிந்தனை வந்த பின் கட்டிலை விட்டு எழ
மனமில்லாமல் அப்படியே கிடந்தார் வழமைக்கு மாறாக. பறவைகள் போல இவர் நினைவலைகள்
கானமிசைத்துப் பறந்தது. ஆனால் சோக கானங்கள்!
எவ்வளவு நேரம்தான் இப்படியே கிடக்க முடியும்? வாழ்வின் நியதிக்கு கட்டுப்பட்டுத்தானே
ஆக வேண்டும். அவர் எழுந்து போனார். தன் சிரம பரிகாரங்களை முடித்துக் கொண்டார்.
முருகனின் திரு உருவத்துக்கு முன்னால் நின்றார். இப்படி வேண்டினார்: “அப்பனே முருகா!
இன்றையப் பொழுது யாதொரு பழுதுமில்லாமல் எல்லாம் நல்ல படியாக நடந்தேற அருள் புரிவாய்
அப்பனே!” இது வழமையான வேண்டுதல்தான். இன்று கொஞ்சம் பிந்திவிட்டது.
படுக்கையறையிலேயே இருந்த மேசை முன்னால் அமர்ந்து குறிப்புப் புத்தகத்தில் அன்றைய
சிந்தனையை எழுதினார்:
“மனிதனுக்கு மட்டும்; பகுத்தறிவை கொடுத்ததால் முன்னேற்றமா பின்னேற்றமா, நன்மையா
தீமையா, இன்பமா துன்பமா, சந்தோமா கஷ்டம் கவலையா அதிகரித்தது?!” விடை காணமுடியாத
இந்தக் கேள்வியை எழுதி வைத்தார்.
மேசையின் முன்னால் இருந்த புத்தக மொன்றை எடுத்து வாசனையில் ஆழ்ந்தார். அப்போது
அறையுள் உள்ளிட்டாள் மனைவி ராயேஸ்வரி. கையில் தேனீர்க் கோப்பை இருந்தது: ஆவி பறந்தது.
மேசையில் தேனீர்க் கோப்பையை வைத்தாள். புருசனை ஓரக்கண்ணால் ஒருதரம் பார்த்தாள்;!
வயது ஐம்பத்தி ஐந்தையும் தாண்டிவிட்டது. இப்போதும் கடைக்கண்பார்வை நாயகன் மீது! சூடு
ஆறிப் போச்சு; தெண்டு இரண்டாம் முறையாகவும் சுட வைச்சுக் கொண்டு வாறன்!... ஏன்
இண்டைக்கு எழும்பப் பிந்தினது?’ என்று அவரிடம் சொல்ல வேண்டியதை தனக்குள்ளே
முணுமுணுத்துக் கொண்டாள்!
அவள் போய் விட்டாள். இவர் தேனீரை எடுத்து உறிஞ்சினார். இஞ்சியும் இனிப்பும்
கணக்காகப் போட்டிருந்தது இவருக்கு திருப்தியாக இரு ந்தது. “இண்டைக்கு எல்லாம் அளவு
கணக்காக இருந்ததுக்கு நன்றி. இதே மாதிரி தொடர்ந்து பின்பற்றினால் நல்லா இருக்கும்!’
அவர் இப்படிச் சொன்னார் நாவால் அல்ல மனதால்!
மீண்டும் நூலில் கண்புதைத்தார். ஆழந்து படிக்க முடியவில்லை: இரசிக்கவில்லை;
தொடர்ந்து படிக்க இயலவில்லை! அப்படியே தூக்கி வைத்துவிட்டார்! போன வாரம் தான் ஒரு
இளம் வாலிபன் வீட்டுக்கு வந்து தன் புத்தக வெளியீட்டுக்கு வருமாறு வினயமாக அழைத்தான்.
கவிஞன் மாறனாம்! கட்டாயம் போய்த் தான் தீர வேண்டியிருந்தது. ஏனென்றால் மாத வனின்
நூல் வெளியீட்டுக்கு முன்னணியில் நின்று செயல்பட்டவன்! நன்றிக்கடன். அன்பளிப்பு
கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து வாசித்தால், உப்புச்சப்பு ஒன்றுமே இல்லை!... ஏன்தான்
இதை வாசி த்தேன்: ஏன் தான் இதை எழுதினான், என்றிருக்கிறது! வாசனை அறிவு போதாமல்,
அறிவு ஞானம் காணமால், எழுத்துப் பயிற்சி, கைவராமல், அனுபவ அறிவும் இல்லாமல், வெறும்
பாலுணர்வு உந்தலால் புகழாசையால் ஈர்க்கப்பட்டு எழுதினால் இப்படித்தான் இருக்கும்!
எழுதி எழுதி பயிற்சி பெற்று ஆற்றலை அபிவிருத்தி செய்து முதிர் நிலையில்த்தான் நூல்
ஆக்கப் படைப்புக் போக வேண்டும் என்று இளம் படைப்பாளிகளைப் பார்த்து கூறியிருக்கிறார்.
யாருமே செவிமடுப்பதாயில்லை!
கதவைத் திறந்து கொண்டு முன்றிலுக்கு வந்தார். மலர்கள் பூத்துச் சிரித்தன. அவை
தன்னைப் பார்த்து பரிகசிப்பது போல் இருந்தது இவருக்கு! இந்த அழுமூஞ்சியைப் பார்த்து
பரிகாசம் புரிகின்றனவா!... வீட்டு பின்புறம் போனார். அங்கே சிறிதாக ஒரு காய்கறித்
தோட்டம். இவரின் சிறுமுயற்சியால் விளைந்து நிற்கிறது. இன்றும் வரிந்து கட்டிக்
கொண்டு அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றலானார். கொத்தினார்;
பசளையிட்டார்; நீர் பாய்ச்சினார். வாழைகளுக்கும் இறைத்தார். பயன் வீட்டுத் தேவைக்கு
தாராளம். மிஞ்சியதை அயலுக்கும் கொடுத்து நிறைவு காண்பார்.
வேலை சூடு கண்டிருக்கையில், ராயேஸ்வரி சூடாக கிண்ணத்தில் ஏதோ கொண்டு வந்தாள். அவர்
குந்தியிருந்த கல்லுக்கு பக்கமாக வைத்தாள். இவர் வேலையில் தீவிரமாக ஈடுபடுவது
போலியிருந்தாலும், மனையாள் கையில் ஏந்திக் கொண்டு வருவது, அருகில் வைப்பது எல்லாம்
ஓரக்கண்ணுக்கு, உள் உணர்வுக்கு தெ ரிந்தபடிதான். ஆனாலும் தெரியாத பாவனை யில் தொழில்
இன்னும் வேகம் பெற்றது!... அவள் ஓரக்கண்ணால் பார்த்தாவாறே சொன்னாள்: “உங்களுக்காக
மூண்டு நாலு மாவகைகள் எல்லாம் போட்டுக் கரைச்சு கொண்டு வந்திருக்கிறன்! களைச்சுப்
போயிருப்பீங்க, சூடு ஆறு முன்னம் கெதியா எடுத்துக் குடியுங்க!” என்ற வாயால்
கூறவில்லை, சத்தமின்றி இரங்கலோசiயில் அவள் (மனதால்) அறிக்கையிட்டாள்! இப்படியான
எத்தனையோ சந்தற்பங்களில் அவள் வாய்விட்டுக் கூறி வந்திருக்கிறாள் என்பதால் அவள்
உள்ளத்தின் குரலை அவர் கிரகித்துக் கொண்டார்.
கழுவித் துடைத்துக் கொண்டு காலைச் சாப்பட்டுக்காக மேசைமுன் அமர்ந்தார் மாதவன்.
சாப்பாடு, மூடி தயாராகவே இருந்தது. திறந்து பார்த்தார்: சினம் சினமாக வந்தது
அவருக்கு! “புட்டு புட்டாக அவிச்சுக் கொட்டத்தான் தெரியும் இவவுக்கு! இலேசான வேலை
பார்க்கிறாள்! நெடுக புட்டும் சம்பலும் திண்டு மூலம் எரியுது எனக்கு!” முன்ன
ரென்றால இப்படி வாய்விட்டு தத்தி ஏற்ற நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால் இன்று இதயக்
குமுறலோடு சாப்பிட்டார்! வேண்டுமென்றே மிச்சம் விட்டு மனைவிக்குச் தெரியும் படியாக
நாய்க்குக் கொட்டிக் காட்டினார்!... அது பலன் கொடுத்தது. அடுத்த நாள் தோசையும்
சாம்பாரும் இருந்தது!
சற்று நேரத்தின் பின் வெளிக்கிடுக்கிடுவதற்குத் தயார் நிலையில் நின்றார். கையில் ஒரு
பன்பையும் இருந்தது. இராயேஸ்வரி ஒரு துண்டை அவரிடம் நீட்டினாள். அவர் வேண்டி
கண்ணோட்டமிட்டார். அன்றைய சீவியப் பாட்டுக்கு வேண்ட வேண்டியவை பட்டியலிட்டிருந்தன.
புறப்பட எத்தனிக்கையில், “கேட்டகாசக்குடுத்து வாங்கிவராம மலிவாகக் கேட்டு வாங்குங்க.
புதுக் கீரையா மரக்கறியா பார்த்து வாங்குங்க. வாடல் வதங்கல தந்து ஏமாத்திப்
போடுவானுகள் அறுவானுகள்! நேற்று வாங்கின தேங்காயும் சரியில்ல, இளசுகள வெயிலுக்க
காயவிட்டுப் போட்டு விற்பானுகள்! தும்பக் கிளப்பிப் பார்க்க வேணும்; கிலுக்கிப்
பார்க்க வேணும்! முந்தநாள் வாங்கின மீனும் சரியில்ல, நாறல்மீன்! அதுக்கு முதல் நாள்
வேண்டியதும் சரியில்ல, ஐஸ்சில போட்டது! தொட்டுப் பார்த்து அமத்திப் பார்த்து, பூ
நாடக் கிளப்பிப் பார்த்தெல்லே வேண்ட வேணும்!...” இப்படியெல்லாம் சந்தைக்கு
வெளிக்கிடும் சமயம் உளறிக் கொட்டுவாள். அனால் இன்று அப்படிப் பேச்சு வரவில்லை
என்றாலும், முன்னர் கேட்டவை அவர் ஞாபகத்துக்கு வந்தது!
இந்த மௌன கீதம் இருவருக்கும் இடையில் ஒரு மாதத்துக்கு மேலும் நீடித்து வந்தது!
ராயேஸ்வரியால் அதிக காலம் இதற்கு தாக்குப்பிடிக்க இயலவில்லை! அடுத்துவரும்
காட்சிகளில் அவள் இரங்கல் குரலில் மெல்ல குரல் கொடுக்கலா னாள்''
“நேரம் மூண்டு மணியாகப் போகுதெல்லே! இன்னும் பிறகு சாப்பிட்டால் இந்த உடம்பு
என்னத்துக்கு ஆகும்! எழுதினது போதும், எழும்பிச் சாப்பிடுங்கோ! எப்பவோ போட்டு
ஆறிக்கிடக்கு!” இயலுமானவரை நயவுரையாய் இரங்கலுரையாய் சொன்னாள்!... ஆனாலும், அவரின்
முகத்தில் கடுகடுப்பு கடுகளவும் போகவில்லை! என்றாலும் எழும்பிப் போய்ச் சாப்பிட்டார்''
அவரின் ஆதரவு இல்லாமையால் இந்த மௌன நாடகம் இன்னும் தொடரும் போலும்!
மாதவன் இப்படித்தான், சற்றும் ஏறுமாறாய் இல்லாள் நடந்தால், சந்நியாசம் போகமாட்டார்,
அடிதடியிலும் இறங்கமாட்டார்: அவர் மனைவி க்குக் கொடுக்கும் தண்டனை, மௌன யுத்தம்தான்!
இது ராயேஸ்வரியை மட்டுமல்ல, எந்தக்குடும்பப் பெண்ணையும் ஆட்டம் காணவே வைக்கும்! (ஆனாலும்
இதுவும் தற்காலிகமாகவே பலன் செய்யும்!) ஆனாலும்; ராயேஸ்வரியைப் பொறுத்தவரையில்
கணவனைத் தவிர வேறுகுடும்ப உறுப்பினர் யாரும் வீட்டில் இல்லை! அவரும் வாய் பேசாமல்
இருந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா?... இவர்களின் இந்த மன வேறுபாட்டுக்கு, மறுப்பு
வெறுப்பு நடவடிக்கைகளுக்கு கால் கோலாய் அமைந்து விட்டது என்ன?...
அன்று மாதவன் கூடத்தில் இருந்து எழுதிக் கொண்டிருந்தார். சிறுகதை நாவல்கள் எழுதி
கொஞ்சம் பேரேடுத்து வருகிறவர் அவர். அன்றும் நாவல் ஒன்றை விறுவிறுப்பாக
சுறுசுறுப்பாக எழுதிக் கொண்டிருந்தார். அது இவரின் கூடப்பி றந்த தம்பியின் கதைதான்!
தம்பியார் ஓர் இயக்கத்தில் பிரதான பாகம் வகித்தவர்! பிரதான இயக்கமொன்றின் பிடியில்
சிக்கி சித்திரைவதை செய்து சாகடிக்கப்பட்டார்!... மாதவனின் நெஞ்சை நீண்ட காலமாக
உறுத்திக் கொண்டிருக்கும் சம்பவமிது! அதைத்தான் ஒரு குறு நாவலாக எழுதி ஆறுதல் பெற
வேண்டும் என்று எழுதிக் கொண்டு வருகிறார். இன்றும் அப்படித்தான் விட்ட குறை தொட்ட
குறையில் இருந்து, விடுபட்டதையும் சேர்த்து கோர்த்து தீவரமாக எழுதிக் கொண்டிருந்தார்.
இவர் எந்தப் பணியானாலும் ஒரு தவமாகவே மேற்கொண்டு வருவார்! அதிலும் எழுதுப்பணியில்
ஈடுபாட்டால் கேட்கவே வேண்டாம்! தன்னையே ஏன் இந்த உலகையே மறந்து விடுவார்!
எத்தனையோ மாமுனிவர்களை தேவ அணங்குகள் வந்து அவர்கள் தவத்தை கெடுத்திரு க்கின்றன
அல்லவா!.... தீடீரென்று வெட்டுக்குத்து சத்தம்; அழுகுரல்; ஆடல்பாடல் பேரோலி எழுந்து
வந்து இவர் ஒரு முகப்பட்ட சிந்தனை குழப்பிவிட்டது! விஸ்வா மித்திரன் போல்
வெகுண்டெழுந்தார்!...அன்று ஞாயிறு தினம். தொலைக் காட்சியில் அன்றைய தினம் நல்ல
நிகழ்வுகள் நடைபெறும். அவசர அவசரமாக அடுக்களை வேலைகளை முடித்துக் கொண்டு தொலைக்
காட்சியை இயக்கிய போதுதான், இவரின் மண்டையியே இடித்தது! மாதவன் விறைப்பான குரலில்
சத்தமிட்டார். “எருமமாட்டுப் பிறவியே, எத்தனை தரம் சொல்லியிருப்பன்' நான் எழுதிக்
கொண்டிருக்கும் போது ரீ.விய பெரிய சத்தத்தில போடக் கூடாதென்று, கேட்டால்தானே!”
அவளுக்கும் ஆத்திரம் வந்து விட்டது! தொலையின் சத்தத்தை குறைக்கவில்லை: அப்படியே
நிறுத்தி விட்டு, விறைப் போடு வீறு நடை போட்டுக் கொண்டு போய் அறைக்குள் போய்
படுத்துக் கொண்டாள்! இப்படியான ஏறுமாறுகள் இவர்களுக்கிடையில் இடைக்கிடை நடப்பது
சர்வ சாதாரணம். கொஞ்ச நேரத்தின் பின்னால் நடந்ததுவே முக்கியமானது''
வீட்டுத் தொலைபேசி பெரிய சத்தத்தில் அலறியது. கோபத்தில் வீம்புக்கு படுத்துக்
கிடந்த ராயேஸ்வரி வேகநடை நடந்து போய் அதை விரலால் அழுத்த ஒலிபெருக்கியில் பெரிதாய்
சத்தம் கேட்டது! “கலோ, ஆர்பேசுறீங்க?... “நான் தானணை, சுவிசில் இருந்து உன்ர மகன்
கண்ணன் பேசுறன்!”
“எப்பிடி மோனே, சுகமா இருக்கிறியோ?”
“சுகமா இருக்கிறம் எண்டு பேர்தான். ஆனா இஞ்ச எத்தினையோ சுகக் கேடுகளோடதான் வாழ்றம்!
எத்தனையோ சுகங்கள இழந்து போட்டுத்தான் இங்க வந்து நிற்கிறம்!” “ஏன் ராசா அப்பிடிச்
சொல்லுறாய்? ” “பின்ன எப்பிடிச் சொல்லுறது! எங்கட யாழ்ப்பாணத்து மண்வாசனையுள்ள
சாப்பாடுகள உன்ர கைப்பக்குவத்தால செய்து தந்து திண்டு சுவைச்சது போல வருமா? சுவீ
சென்ன, சொர்க்கலோகம் போனாலும் வருமோ?”
“ஏன் மோனே அப்பிடிச் சொல்லுறாய்? சுவீஸ் நாடுதானே திறமான இடம் எண்டு இங்க
சொல்லுகினம்! நீ இப்பிடிச் சொல்லுறாய்! “எல்லாம், அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை
மாதிரி த்தான். உடுப்புக் மேல உடுப்பாய்ப் போட்டு, எடுப்பானவன் மாதிரி காட்டிக்
கொண்டு, இட்டுமுட்டாகக் கிடந்து சுதந்திரமா சுகமா திரிய எலாம நாங்க படுகிற அவதி
அங்க இருக்கிறவங்களுக்கு எங்க தெரியபோகுது!... சும்மா ஐஸ்சில கிடந்ததையும்
பக்கற்றில அடைச்சதையும் திண்டு திண்டு அலுத்துப் போச்சுது!....சரி சரி சுகமில்லாததை
சுகமெண்டு போலி நடிப்பு நடிச்சுக் கொண்டு திரியிற எத்தினையோ பேரோட நானும்
இருந்துற்றுப் போறன்!.. அதுசரி, இப்ப நீங்க எப்பிடி இருக்குறீங்க? சுகமா
இருக்குறீங்களோ?”
“அதை ஏன் கேக்குறாய் ராசா!... நீ அனுப்பின காசு முடிஞ்சு கொண்டு வருகுதாம் எண்டு,
செலவுக்கு ஒறுத்துத்தான் காசுதாறார்!... நானும் வருத்தக் காரியாப் போனன்: உடம்பு
பலவீனப் பட்டுப் போகுது! நல்ல சத்துள்ள மாப்பாலுகள வேண்டித் தாங்கோ எண்டால்
இதெல்லாம் வீண் செலவு: பிரயோசனமில்லாத வேல எண்டுறார்!... நல்லா நட் குனிஞ்சி
தேகாப்பியாசம் செய்; கண்டதையும் தின்னாத ஒத்துக் கொள்ளுறது ஒத்துவராதது பார்த்துச்
சாப்பிட வேணும். எண்டு இப்பிடியே என்னனென்னவோ சொல்லி என்னப் பேச்சியாக்கி
முட்டாள்பட்டம் கட்டி என்னப் போட்டு படாத பாடு படுத்துறார்! நான் என்ன செய்ய?”
இந்தப் பேச்சைக் கேட்டதும் கண்ணனின் பேச்சில் சூடுபிறந்தது! “எணை, இப்ப கிட்டடியில்
தானே காசு அனுப்பின நான்! அதுக்கிடையில முடிஞ்சு போய்ச்சுதா? இங்க சுவீசில இருந்து
பழுத்த மாங்கா ஆயற மாதிரியா காசு அனுப்புறம் எண்டா இந்த அப்பா நினைச்சுக் கொண்டார்!
வீட்டு வாடகையே எத்தின இலட்சம் தெரியுமா? வருமானவரி பாதுகாப்பு வரி எண்டு எத்தின
வரியிறுப்புகள் தெரியுமா? தண்ணி வாறதுக்கும் காசு போறதுக்கும் காசுகள் தெரியுமா?
சமைச்சு சாப்பிடுறதுக்கே சரியான காசு! பிள்ளைகள பராமரிக்கிறத்துக்கும் பிரத்தியேக
செலவு மேலதிக பிள்ளைக்கு வரி!...அதுமட்டுமா? எங்கட தமிழ் அமைப்புகள் அன்பளிப்பு
எண்டு அடிக்கடி வருவாங்க! எங்கட இன சனங்கள் கொண்டாட்டமெண்டு அழைப்பிதழ் தருவாங்க!
அட இதச் சொல்ல மறந்துற்றன், ஒவ்வொரு பிள்ளப் பிரசவத்துக்கும் எத்தன மைல் தூரம் ஓட
வேணும் தெரியுமா? பிரசவ செலவே எத்தின இலட்சம் ஆகும் தெரியுமா? எனக்கு இப்ப இரண்டு
பேர் சாமத்தியப் பட்டுற்றினம்! இளையவளும் அந்தா இந்தா எண்டு இருக்கு! இனி இதுகள
படிப்பிக்க வேணும்; ஆளாக்க வேணும்; ஒரு வாழ்க்கையைக் குடுக்கவேணும்; இதுக்கெல்லாம்
எவ்வளவோ தேட வேணும்! அது மட்டுமா? “என்ன, உங்கட தாய் தகப்பனுக்குத் தான் நெடுக
அனுப்பிக் கொண்டிருக்குறிங்க! எங்கட பெற்றோர் எவ்வளவு கஸ்ரப்படுகிறாங்க தெரியுமா?
‘எண்டு கேட்டு என்னோட முரண்டு பண்ணுறாள் மனைவி!... இப்படியெல்லாம் நாங்கள்,
தொல்லைபட்டு அல்லாடிக் கொண்டு இருந்தும் உங்களுக்கு காசு அனுப்பி வாறன்! நீங்கள்
என்னடா எண்டால், கண்ட பாட்டுக்கு காச செலவழிச்சுப் போட்டு கெதியா அனுப்பு எண்டு
தொண்டையப் புடிச்சால் நான் என்ன செய்யலாம் உங்கள சொல்லு பாhப்பம்,”
அவன் மூசசுவிடாமல் மூசி மூசி கதை த்தான்! மாதவனும் இஸ்தம்பித்து போய் அவன் பேசுவதைக்
கேட்டுக் கொண்டிருந்தார் இருவரும் சேர்ந்து தனக்கெதிராகத்தான் வியூகம் போட்டு பாணம்
விடுகின்றனர் என்று உணர்ந்து கொண்டே மேலும் கவனமாக காது கொடுத்து கேட்டார்.
“அது ஏன் கேக்கிறாய் ராசா, அப்பற்ற திருக் கூத்தையும் திருகுதாளங்களையும்! நானே
காசுகள் செலவழிக்கிறன்? அவர்தான் செலவு செய்யுறார். வேண்டித்தாறார். நான் சமைச்சுக்
குடுத்துப் போட்டு இருக்கிறன்!... அவர்தான் பேங்குக்குப் போறார்; காசெடுக்கிறார்;
தன்ர பாட்டுக்கு செலவு செய்யுறார். எல்லாம் வீண் செலவுதான்! நாங்க
வெளயிநாட்டுக்காரர் எண்ட தால, இஞ்ச கிடக்கிற பரதேசிகள் மூதேசிகள் பஞ்சத்தாண்டிகள்
எல்லாம் வந்து நிக்குங்கள்! அதை இதை சாட்டி, அழுமூஞ்சியக் காட்டி கெஞ்சிக் கொண்டு
நிக்குங்கள்! இவருக்கும் தான் பெரிய கொடை வள்ளல் எண்ட நினைப்பு இரவல் குடை
பிடிச்சுக் கொண்டு தான் பெரிய கொடை வள்ளலாம்!... கேட்டுக் கேள்வி இல்லாமல்
கேக்கிறவனுக்குக் கெல்லாம் தூக்கிக் குடுத்துப் போட்டு நிற்பார்!.... அது மட்டுமா,
எத்தின பேப்பருகள் புத்தகங்கள் தபாலில வருகுது தெரியுமா! இதெல்லாம் காசுகட்டாமலா
வருகுது?.... இன்னும் கேள் கதைய அடிக்கடி சால்வ போட்ட துரைமார்கள் வந்தபடி ஏதோ
எழுத்தாளராம் கவிஞராம் கதாசிரியராம் ஆசிரியராம்; தங்கட வெளியீடாம் என்டு வந்து
நிற்பாங்கள். உதவி செய்யச் சொல்லி அழாக்குறையா கேப்பாங்கள்! இவரும் சிரிச்ச
முகத்தோட எல்லாருக்கும் தாராளமாக குடுப்பார்! அழைப்பிதழ் குடுப்பாங்கள் தங்கட
புத்தக வெளியீட்டுக்கு வரச்சொல்லி இல்லாட்டி ஆருக்கோ கௌரவி ப்புச் செய்ய வேணுமாம்,
நிதியுதவி செய்ய ட்டாம் எண்டுவாங்கள். எல்லாத்துக்கும் முதலாளாய் வெளிக்கிட்டு போய்
நிற்பார்!... இன்னும் இருக்கு, இவன் எழுதுற கதைகளை ரைப்படிக்க தபால்ல அனுப்ப எவ்வளவு
செலவாகுது தெரியுமா!... இவ்வளவு பாடுபட்டு எழுதி அனுப்புறார்,
பிரசுரிக்கிறாங்கள்தான், ஒருவரும் ஒருசதமும் அனுப்புற இல்ல!...இன்னும் கிடக்கு கேள்:
கெட்ட கேட்டுக்கு முட்டையும் சோறாம் எண்டு தானும் புத்தகம் வெளியிடப் போறாராம்!
இதுக்கு எத்தின ஆயிரம் முடியும் தெரியுமே!.... போனமுறை வெளியீடு செய்த புத்தகமே
இன்னும் வித்து முடியல்ல, அறையெல்லாம் கிடக்கு!” இப்பிடியெல்லாம் செலவு செய்யுறவர்,
நான் பைப்ப திறந்தா லைற்ற கூட எரிச்சாக் காணும் எரிஞ்சு விழுந்து கொண்டிருப்பார்.
ராயேஸ்வரி தன் மனதை அரித்துக் கொண்டீருந்த ஆத்திரங்களை எல்லாம் தீர்க்க சந்தர்ப்பம்
வாய்ந்து விட்டது; கொட்டித்தீர்த்தாள்!
கண்ணனுக்கு குளவி கொட்டியது போல் கடுப்பேறியது! “உன்ர கதையைக் கேக்க எனக்கு மண்ட
வெடிக்குமாப் போல இருக்கு! நாங்கள் இரண்டு பேரும் வேலைக்குப் போறம்: சாப்பிட
நித்திரை கொள்ள நேரமில்லாமல் உழைக்கிறம்: எவ்வளவோ செலவுகள தாங்கிக் கொண்டு மிச்சம்
பிடிச்சி அனுப்புறம்! இதப்புரிஞ்சி கொள்ளாத மனுசனா இருந்து காசக் கண்ட பாட்டுக்குச்
செலவழிக்கிறாரே அப்பா!... தான் பெரிய எழுத்தாள ராம் எண்டு பேரேடுக்கவேணுமாம்:
பரிசுகளும் விருதுகளும் வாங்கி கழுத்தில போட்டுக் கொண்டு பெரிய மனுசனாத்திரிய
வேணுமாம் எண்டு எங்களப் போட்டு வருத்துறாரே!... எங்க அப்பா? கூப்பிடு அவர!”
“அவர் இங்கபக்கத்திலதான் இருக்கிறார். நீ பேசுறத எல்லாம் கேட்டுக் கொண்டுதான்
இருக்கிறார்! நல்லாச் சொல்லு; அவர மண்டையில உறைக்கட்டும்! இண்டுமுழுக்க நான்
கத்தினாலும் காதில வாங்கமாட்டார்!”
“அப்பாவுந்தான் அம்மாவும்தான் இரண்டு பேருக்கும்தான் நான் சொல்லுறன் கவனமாக கேட்டுக்
கொள்ளுங்க: முந்தி மாதிரி தாராளமா அனுப்ப இனி என்னால ஏலாது!... நான் என்ர பிள்ளைகள
பார்க்க வேணும்: குடும்பத்தப் பார்க்க வேணும்: அதுகள நல்லாக்கி வைக்கிற வழியப்
பார்க்கவேணும்!... உங்கட தேவையில்லாத ஒரு பிரயோசனமும் இல்லாததுகளுக்கெல்லாம் இனி
என்னால காசு அனுப்ப ஏலாது!...சாப்பாட்டுக்கு மட்டாத்தான் இனிக் காசு அனுப்புவன்!
எப்பிடியோ உயிர் வாழுற வழிய மட்டும் பாருங்கோ! வயது போனா அதுக்கேற்ற மாதிரி நடவுங்கோ!
இரவல் சேலையில இது நல்ல கொய்தகந்தான் எண்ட மாதிரி நடக்காதையுங்கோ!” அவன் பேச்சை
முடித்துக் கொண்டான். முந்திமாதிரி ‘பாயும்’ ‘காயும்’ சொல்லவில்லை!
இந்தப் பேச்சின் பின்னர்தான் மாதவன் மனமுடைந்து போனார்! மனைவியை பார்க்க பேச
பிடிக்கவில்லை அவருக்கு! மௌன நாடகம் தொடர்ந்தது இதன் பின்னர்தான்
தாயும் மகனும் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்களை – சொல்லம் புகளை இரைமீட்டுப்
பார்த்தார். அவர் இதயம் இப்படியாக புலம்பியது. (அது தன்னை மீள்பரிசீலனை செய்வதாகவும்
இருந்தது)
“வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு என்ன தெரியும்? இது ஒரு யுத்த பூமி! யுத்தம்
முடிந்தாலும், அதன் தாக்கம்: அதன் நோக்கம் எல்லாம் இப்பவும் அப்படியேதான் இருக்கிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலமும் அப்படியேதான் இருக்கிறது: இன்னும்
தீர்ந்த பாடில்லை!... அயலில், நெருங்கிய சொந்த பந்தங்களில் வருத்தப்பட்டவர்
வாதைப்பட்டவர் இரங்கிக் கொண்டு வந்தால் வசதிப்பட்டவர் கொஞ்சமாகிலும்
உதவிவிட்டதுதப்பா?... ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியமில்லை உயிரக்கு’ என்ற
வள்ளுவர் வாக்கை சிறிதேனும் கடைப்பிடி த்தால் அதுதவறா? கஸ்டப்படுவர்க்கு உதவுவதும்
புகழ்பெற வாழ்வதையும் விட உயிர்வாழ்க்கைக்கு ஆதாரபூர்வமானது வேறொன்றும் இல்லை, என்று
இதன் பொருளை எத்தனை தரம் எடுத்துச் சொல்லியிருப்பேன். கருத்திலே சிறிதும் எடுக்காத
இவர்கள் எனக்கு கதைவிடுகிறார்கள்! சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்நதியைக்
காக்குமென்று சொல்லவார்கள். நான் செய்த புண்ணிய கருமங்களால்த்தான் என் குடும்பம்,
மகன் பிள்ளைகள் அல்லுத் தொல்லை இல்லாமல் சீவிக்கிறார்கள்! இதை உணர வேண்டியவர்கள்
உணர மறுக்கிறார்கள்! தவறான வழியில் என்னையும் இழுக்கிறார்கள்: இழுத்தேவிட்டார்கள்!....
இனி நானும் கதவை இறுக்கி மூடிவிட்டு வாயைத் திறந்து சாப்பிட வேண்டியதுதான்!...
பெற்ற மகன், அதுவும் நான் எவ்வளவு பாடுபட்டு வெளிநாட்டுக்கு அனுப்புன மகன்
சொல்லுறான், நான் இரவல் சேலையில கொய்தகம் வைக்கிறனாம்!
சரி அதுதான் போகட்டும். எனது உயிர்மூலத்திலேயே கைவைத்து விட்hர்களே!.... சொல்லடி
சிவசக்தி எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்! வல்லமை தாராயோ இந்த மானிலம்
பயனுறவாழ்வதற்கே.’ என்று பாரதியார் பாடியதை அடியொற்றி வாழ்பவன் நான்! ஞானமும்
கல்வியும், சுடர்மிகும் அறிவும் எல்லோருக்கும் வாய்க்காது. மருத்திலும் அரிதாக ஒரு
சிலருக்குத்தான் கிடைக்கும் கடவுளின் கொடை அது!.... மனதை ஒரு நிலைப்படுத்தி
தியானிப்பதாலோ என்னமோ, அரிய உண்மைகள் கருத்துக்கள் என் கருவூலத்தில் உதயமாகிக்
கொண்டே இருக்கிறது! அவற்றைக் குறித்து வைத்து மக்கள் பயன்பெற எழுதிவருகிறேன். பேரும்
புகழும் கிடைக்கும் கிடைக்காமல் போகட்டும். என் கடமையாக பணியாகஇதை செய்து வருகிறேன்:
இதனால் ஒரு ஆத்மதிருப்தியை கண்டுணர்ந்து வருகிறேன்!....... இதற்கும் ஆப்பு
வைக்கிறார்களே!
இந்தப் பணியை வீட்hருக்கு பாதிப்பு இல்லாமல் செய்து முடிப்போம் என்றால் கடிதான
காரியமாகவே இருக்கிறதே!........... புத்தக வெளியீடு செய்யப் போனால், ஆயிரம் பேருக்கு
அழைப்புக் கொடுத்தால் ஐம்பது பேரும் வருகிறார்கள் இல்லை! அதுவும் வந்திருப்பவர்கள்
யாவரும் எழுத்தாளர்கள் கதாசிரியர்கள் கவிஞர்கள்தாம்! முன்னர் நூல் வெளியீடு செய்து
நான் அன்பளிப்பு கொடுத்தவர்கள்தான். நன்றிக்கடன் தீர்க்க வந்திருக்கிறார்கள்! வேறு
வாசகர்கள் இரசி கர்கள் என்று ஒருவரையும் காணணோம்! இவர்களிலும் ஐம்பது நூறையோ, வெறும்
கவரையோ பெயரில்லாமல் போட்டுவிட்டு நூலைப் பெற்றுச் சென்றாரும் உண்டு!
ஒரு நூலை தயாரித்து வெளியீடு செய்ய இப்பொ ஒரு இலட்சத்தை எட்டும்! ஆனால் பலனாகக்
கிடைப்பதோ கால்வாசியும் இல்லை. இந்நிலையில் அடுத்த புத்த வெளியீட்டுக்கு அடுக்குப்
பண்ணுவது எவ்வாறு! வீட்டாரின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருப்பது என்னவென்று!....
எனது பழைய இலக்கிய நண்பரை தேடி அவர் வீட்டுக்குப் போய் எனது நூலை கையளித்தேன். அவர்
வரவேற்று உபசரித்து இலக்கியம் பற்றி விரிவுரை ஆற்றி தனது புத்தகத்தை அன்பளிப்புச்
செய்து அனுப்பி விட்டார் என்னை!
எனது நூல் வெளியீட்டுக்காக அயலில் உள்ளவர்கள், சொந்தப்பந்தங்கள், நண்பர்கள்,
அறிந்தவர் தெரிந்தவர் என்று எவ்வளவு பேருக்கு விடு தேடிப்போய் இன்முகம் கூறி அழைப்பு
விடுத்தேன், எனது தள்ளாமை, இயலாமையையும் பொருட்டுப்படுத்தாமல்,. ஆனால் இவர்களில்
ஒன்றிரெண்டே வந்தார்கள்!
அடுத்து வாரம் எங்கள் அயலில் உறவினர் வீட்டில் பிறந்த நாள் கொண்டிhடினார்கள்
ஒருவயதுக் குழந்தைக்கு, நானும் போயிருந்தேன். எவ்வளவுசனம் அன்பளிப்புகளோடு திரண்டு
நின்றார்கள்! இப்போதெல்லாம் கைபேசி தொலைபேசி கணனிகளோடு காலம் தள்ளுகிறார்கள்: தங்கள்
ஆசைகள் தேவகைளை எல்லாம் நிறை வேற்றிக் கொள்கிறார்கள்! அவர்களுக்கெல்லாம் எம்
போன்றவர்களின் ஆக்கங்கள் வேண்டாத ஒன்று!
வீட்டுக்கோ நாட்டுக்கோ வேண்டாத ஒன்றை விழலுக்கு இறைத்த நீராய் விழல் வேலை ஏன்
பார்ப்பான் என்றே தோன்றுகிறது!.......... மகன் சொல்வது போல மரணம் வரும் வரைக்கும்
உயிர் வாழ்ந்தால் போதும் என்று இருக்க வேண்டியதுதான்!