புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
கொன்றிடப்பாவம் தின்றிடப் போகும்...?

கொன்றிடப்பாவம் தின்றிடப் போகும்...?

கொன்றிடப்பாவம் தின்றிடப்போகும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. நாம் எமது உணவுத் தேவைக்காக உயிரினங்களைக் கொல்லும் பாவத்தினை அவற்றை உண்பதால் தீர்ப்பது என்பதாய் அமைகின்றது அது. விலங்கினங்களின் உரிமைக்காக போராடும் அமைப்புகளோ உணவுத் தேவைக்காகக் கூட விலங்குகளை கொல்லாதே என்கின்றது.

இயற்கையின் அமைப்பில் சிறியனவெல்லாம் பெரியனவற்றுக்கு இரையாகின்றன. அவ்வாறே மனிதனும் தனது உணவுத் தேவைக்காக விலங்குகளை உண்கின்றான். புலால் உண்ண வேண்டாம் என மதங்கள் பேதிக்கின்றனவேயன்றி தமது உணவத் தேவைக்காக மக்கள் விலங்குகளைக் கொல்லக்கூடாது என எந்த சட்டமும் சொல்வதில்லை.ஆனால் அவை கொல்லப்படும் விதம் குறித்த கட்டுப்பாடுகள் எல்லா நாடுகளிலுமே காணப்படுகின்றன. அது மாத்திரமல்ல சில அருகி வரும் உயிரினங்களைக் கொல்வதற்கான தடைகள் அனேக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையிலேயே அண்மையில் கழுகொன்று உயிருடன் தோலுரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரபாகப் பேசப்படுகின்றது.

'கழுகு ஒன்றை பலர் சேர்ந்து உயிருடன் தோலுரித்து கொல்லும்' படங்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவியதுடன், சில செய்திதாள்களும் இக்கொடூரச் செயலை குறித்ததான செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துசெய்தி வெளியிட்டிருந்தன. அநேகரின் பார்வையைத் தன் பக்கமாக திருப்பி, அநேகரின் பேசுபொருளாகவும் கண்டனக் குரல்களும் வெளிவந்தன. கடந்த காலங்களில் இலங்கையில் பசுவதைக்கு எதிராக பல அமைப்புக்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை தெரிந்ததே.

விசேடமாக முஸ்லிம் மக்கள் ஹஜ் கடமைக்காக ஆடு மாடு அறுப்பதற்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டது வந்தன. போயா தினத்தன்று மிருகவதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் உணவுக்கான இறைச்சி விற்பனை நிலையமும் மூடப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மிருகங்களை வதைப்பதை எந்த மதமும் அனுமதிக்காததால் கோவில்களில் மிருக பலி கொடுப்பதற்கும் தடை விதிக்கும்படி கோரியது. இவ்வாறு மிருகவதைக்கு எதிராக அடிக்கடி குரல் கொடுக்கும் எம் போன்ற நாடுகளில் சில கல் இதயம் படைத்த சிலர் 'கழுகு ஒன்றை உயிருடன் தோலுரித்த சம்பவம்' ஒன்று மின் ஊடகம் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக விலங்கின பாதுகாவலர்கள் கண்டனக் குரல் எழும்பினர். 'இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்று குரல் எழுப்பி, 2009 இல.22 சட்ட ஷரத்தின்படி, விலங்குகளை கொடுமைபடுத்தும் சட்டத்தில் கீழ் இந்த நபர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என Freedom Sri Lanka Foundation மற்றும் Let Them Live அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன. இதன் நிமித்தம் பொலிஸாரின் அவதானமும் இந்நபர்கள் மீது பாயதவறவில்லை.

மக்களின் உயிரே மதிப்பற்றதாய் போகும் இந்நாட்களில் பறவையொன்றைக் கொல்வது யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லைபோலும் அதிலும் மிக இழிவாக ஒரு கழுகின் கால்களை வெட்டிவிட்டு. அதன் தோலை உரித்து, வெட்டிக்கொல்ல முயலும் புகைப்படத்திலிருந்த இருவரை காலி, வஞ்சாவல பிரதேசத்தில் தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக ஹபராதுவப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கைதான நபர்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் பலரை கைது செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களின் வாக்குமூலத்திற்கு அமைய தாம் உண்பதற்காகவே குறித்த கழுகை கொன்றதாகவும், இதன்போது கழுகின் வயிற்றில் நச்சு பாம்பு ஒன்று இருந்ததால் தாம் அதை உண்ணவில்லை என்றும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 40 வயதானவர்கள் என்பதோடு இருவரும் மீனவர்கள் என்று தெரிவித்துள்ள பொலிஸார் கழுகை கொன்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் மது அருந்தியிருந்தமை தெரியவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இச்செயலை கடுமையாக விமர்சித்துள்ள வன ஜீவராசிகள் நிறுவனங்களான ‘சுதந்திர இலங்கை அறக்கட்டளை’ (Freedom Sri Lanka Foundation) மற்றும் ‘அவர்களை வாழவிடு’ (Let them live) ஆகியன தாவரங்கள் மற்றும் விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது இரக்கமில்லாத விலங்குக் கொலைக் குற்றஞ்சாட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளன.

‘இந்தப் படத்தில் ஐந்து நபர்கள் உள்ளனர். இவர்கள், காலி – வஞ்சவல எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்த மனிதத் தன்மையற்ற செயலில் சுவாரஷ்யத்துடன் ஈடுபட்டுள்ளனர். 'கழுகு அழியும் நிலையில் உள்ள ஒரு பறவை இனம். இதைக் கொல்லவோ விற்கவோ முடியாது’ என வன ஜீவராசிகள் செயற்பாட்டாளரான ஷஷிகலன ரத்வத்தே குறிப்பிட்டார்.

இந்தக் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் தாம் கேட்டுள்ளதாக அவர் கூறினார். இக்குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்படின் ஐந்து வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட முடியுமென வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வகையான இழிவான மனிதத் தன்மையற்றசெயல்கள் இடம்பெறாத வண்ணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தன்னார்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

​ேபால் வில்சன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.