மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03
SUNDAY MARCH 13, 2016

Print

 
புலம்பெயர் சமூகம் ஈழத்தமிழருக்கு பலமான ஆயுதம்; பாவிப்பது அவர்களது திறமை

புலம்பெயர் சமூகம் ஈழத்தமிழருக்கு பலமான ஆயுதம்; பாவிப்பது அவர்களது திறமை

இலங்கை வந்துள்ள TNA யின் லண்டன் கிளை ஐ.தி. சம்பந்தன்

புலம்பெயர் தமிழர்கள் ஈழத் தமிழருக்கு பலமான ஆயுதம். அவர்களின் பலத்தை பாவிப்பதும் அதனூடாக சாதிப்பதும் இங்குள்ளவர்களின் திறமையிலேயே தங்கியுள்ளது. அரசியல் தீர்வைக்காண வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்தவர்கள் உறுதியாகவுள்ளனர். புலம்பெயர் மக்களின் கருத்துக்கள் எவ்வாறு காணப்படினும் உள்ளுரில் இருக்கும் மக்களே இறுதி முடிவெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை ஒருங்கிணைப்பாளர் ஐ. தி. சம்பந்தன் தெரிவித்தார்.

உள்ளூரில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவு புலம்பெயர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியாக முதலீடுகளை மேற்கொண்டு உள்ளூரில் சிறப்பான உட்கட்டமைப்பு அபிவிருத்தியை மேற்கொள்வார்கள் என்பது நிச்சயமானது. புலம்பெயர்ந்த நாடுகளில் பல தமிழ் மக்கள்சார் அமைப்புக்கள் காணப்படுகின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் சில அமைப்புக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகத்தமிழர் பேரவை சிறந்ததொரு செயற்பாட்டை முன்னெடுத்திருந்தது. அதாவது இலங்கையின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து அறுபது அமைப்புக்கள் மீதான தடையை நீக்குமாறு கோரியிருந்தது. அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெளிநாட்டு மூலதனங்களை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய அமைப்புக்கள் சிலவற்றின் மனோநிலையில் மாற்றமில்லாத நிலைமையும் நீடிக்கின்றது. ஏனென்றால் நீண்டகாலமாக விடுதலைப்போராட்டத்தை ஆதரித்து தனியலகு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் அந்தப்பிடியிலிருந்தும் விடுபடாதவர்கள் தற்போதும் உள்ளனர். எனவே, புலம்பெயர் மக்களின் மனதை மாற்றுகின்ற ஆற்றலும் திறமையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கவேண்டும். அடிக்கடி புலம்பெயர் மக்களை சந்திக்கவேண்டும். அவர்களின் ஐயங்களை போக்கும் வகையில் செயற்படவேண்டும்.

புலம்பெயர் நாடுகளிலிருந்து நாம் வலிந்து நிதி உட்பட்ட உதவிகளை வழங்கி வருகின்ற நிலையில் மக்கள் ஆணைபெற்றவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு தலைமையும் அதுகுறித்து அதீத கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பெரும்பான்மை அரசியல் தலைமைகளிடம் அடிப்படைக்கொள்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. இருப்பினும் ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு, சமஷ்டி பிரிவினைக்கு வித்திடும், வடக்கு கிழக்கை இணைக்கமுடியாது என்பதிலிருந்து அவர்கள் விடுபடாத சூழலும் காணப்படுகிறது. த.தே.கூவின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுவது போன்று இந்தாண்டு இறுதிக்குள் தீர்வை எட்டமுடியுமா என்றும் நம்பிக்கையாகக் சூற முடியாதுள்ளது.

இந்த விடயம் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. பலரும் பல கருத்துக்களையும் முன்வைக்கின்றார்கள். புலம்பெயர்ந்தவர்களும் இவ்விடயம் தொடர்பில் ஐயப்பாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையிலேயே நாம் இங்கு வருகை தந்து எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தனுடன் மிக நீண்டநேரம் விரிவாக கலந்துரையாடியிருந்தோம்.

அதன்போது அவர் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக, நல்லாட்சியாளர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் தேர்தல் காலத்திற்கு முன்னர் இணக்கப்பாடொன்று எட்டப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் உயர் அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை தான் அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. உயர் அதிகாரப்பகிர்வு என்பது இணைந்த வடகிழக்கில் அதியுச்ச சமஷ்டிக்கு நிகரானதாகவே காணப்படும்.

மீண்டும் மீண்டும் சமஷ்டியைக்கோருகின்றோமெனக் கூறுவது பெருத்தமற்றது. அத்துடன் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுபவர்களையும் தட்டியெழுப்பிவிடும் என்ற நிலையும் உள்ளது. ஆதனால் காலக்கிரமத்தில் அனைத்து விடயங்களும் செவ்வனே நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் அதிக பிரசாரமின்றி இருக்க வேண்டியுள்ளது.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]