கேரளாவில் பாடசாலை விழாவில் பங்கேற்க வந்த அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டியை,
இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அவரை பெயர் சொல்லி அழைத்த சம்பவம்
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயர் சொல்லி அழைத்த மாணவியை பாராட்டியதோடு,
அந்த மாணவியின் கோரிக்கையையும் நிறைவேற்றினார் உம்மன் சாண்டி.
கோழிக்கோடு மாவட்டம் நடைக்காவு பகுதியில், அரசு ஆசிரியர் பயிற்சி மைய அடிக்கல்
நாட்டும் விழாவில் உம்மன் சாண்டி கலந்து கொண்டார். அடிக்கல் நட்டு விட்டு மேடையை
நோக்கி நடந்து சென்றார். அப்போது மழலை குரலில் ‘உம்மன் சாண்டி' என்ற குரல் கேட்டது.
பள்ளிக் குழந்தைகள் நின்றிருந்த பகுதியில் இருந்துதான் அந்த குரல் வந்தது. தன்னை
யார் பெயர் சொல்லி அழைத்தது என்று உம்மன் சாண்டி பார்வையால் தேடினார். அப்போது நான்
தான் கூப்பிட்டேன் என்கிற தொனியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அவரிடம் கையை
உயர்த்திக் காட்டினாள்.
இதைப் பார்த்து உம்மன் சாண்டி, மாணவியை தன் பக்கமாக அழைத்தார். தன்னை ஷிவானி என்று
அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மாணவி, தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற
மாணவனின் பெற்றோர் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குடியிருக்க வீடு இல்லாமல்
அவதிப்படுவதாகவும், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தாள்.
இதைக் கேட்ட முதல்வர், பாடசாலை தலைமை ஆசிரியரை அழைத்து, மாணவி கூறுவது உண்மையா என்று
கேட்டறிந்தார். அது உண்மை என்று சொன்னதும், அது குறித்து கோரிக்கை மனுகொடுக்கும்படி
கேட்டார். அந்த மனுவில் உடனடியாக வீடு கட்ட ரூ. 3 இலட்சத்தை ஒதுக்கி
கையெழுத்திட்டார்.
விழாவில் பேசிய உம்மன் சாண்டி, தன்னை பெயர் சொல்லி அழைத்த மாணவியை வெகுவாகப்
பாராட்டினார்.
முதல்வரை தைரியாமாக பெயர் சொல்லி அழைத்ததோடு மட்டுமில்லாமல், ஒரு குடும்பத்தின்
பிரச்சினையையும் எடுத்துக் கூறி உதவி பெற்றுத் தந்த அந்த சிறுமியை அனைவரும்
பாராட்டினர்.
இதுவே தமிழ்நாடாக அல்லது எமது நாடாக இருந்தால் இப்படி பெயர் சொல்லி அழைக்க முடியுமா?