புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
எதிர்கால இளம் முஸ்லிம் தலைவர்களின் உருவாக்கம்

எதிர்கால இளம் முஸ்லிம் தலைவர்களின் உருவாக்கம்

மலேசிய நல்லெண்ண விஜயத்தின் புதிய அனுபவங்கள்

சமூகத்தில் தலைமைத்துவப் பண்புகள் குறைந்து வருகின்றன. சிறந்த தலைமைத்துவம் இன்மையினால் சமுதாய உயர்ச்சி, முன்னேற்றம், எதிர்காலம் எல்லாம் தடைபடுகின்றன. தாமதம் அடைகின்றன.

இதனைக் கருத்திற் கொண்ட அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை மலேசியாவில் இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் அநுசரனையோடு (International Institute of Islamic Thoughts ) கல்வி, நல்லெண்ணம் சுற்றுலா, மற்றும் இளம் தலைமைத்துவப்பயிற்சி நெறி ஒன்றை கடந்த பெப்ரவரி 16 முதல் 22ஆம் திகதி வரை மலேசியாவின் செலங்கொரில் ஏற்பாடு செய்திருந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தெரிவான 16 இளம் ஆண்களும் பெண்களும் இந்த நல்லெண்ண விஜயத்தில் பங்கேற்று தமது தலைமைத்துவ ஆளுமைகளை விருத்தி செய்து கொண்டனர்.

ஏற்கனவே இத்தகைய நான்கு நல்லெண்ண விஜயங்களை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து சிறந்த தலைமைத்துவத்துக்கு இளம் பரம்பரையினரை இஸ்லாமியச் சூழலில் பழக்கிய மகத்தான இயக்கமாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை அமைந்துள்ளது. இது ஐந்தாவது நல்லெண்ண விஜயமாகும்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் முன்னாள் தலைவர் காலித் எம்.பாரூக், தூதுக்குழுவின் தலைவர் முன்னாள் தேசியத் தலைவர்களான எம்.சுபைர் ஹஸன், ஹலீம் ஏ. அஸீஸ் ஆகியோர் குழுவின் உப தலைவர்கள் ஆவர். தேசிய பொது பொருளாளரான எம்.எஸ்.எம்.ரிஸ்மி மற்றும் கண்டி நகர் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் , ஜனாபா ஜன்னதுல் ஷுரபா ஷஹீட் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

புத்ரஜாயாவில் மலேசிய உயர்கல்வி அமைச்சில் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

IIUM ( Institute of Islamic Understanding Malaysia ) கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி வலீத் பஃரி “இஸ்லாத்தில் தலைமைத்துவத்துக்கான இன்றியமையாதவைகள்” ( Essentials on Leadership in Islam ) என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மலேசியாவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு மஸ்ஜித்களையும், பழைமை வாய்ந்த மஸ்ஜிதையும் பார்வையிட்டோம். மனதுக்கு இதமாக அமைந்தது.

ஷாஹ் அலமில் யுனிசெல் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி முஹம்மத் நூர் நவவி “ தேச நிர்மாணப்பணியில் இளைஞரின் பங்கு” (Roles of Youth in Nation Building) என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தினார்.

மலேசியாவில் கோலாலம்பூரின் அழகை பறைசாற்றும் இரட்டைக் கோபுரத்தை ( Twins Tower ) பார்த்ததும் நாம் பிரமித்துப் போனோம்.

அம்பாங்கில் மலேசிய இளைஞர் கவுன்சில் உறுப்பினருடன் இராப்போசன விருந்தும் கலந்துரையாடலும் இஸ்தானா மூங்கில் உணவகத்தில் இடம்பெற்றது.

IKIM கல்வி நிறுவனத்தின் இணைப்பாளர் ஐனி ஸுஹரா “உள்ளக நம்பிக்கையும் கலப்பு கலாசார சமூகத்தில் முஸ்லிம்களும”் ( Interfaith and Muslims in Multicultural Society) என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். குழுவினர் இஸ்லாமிய நூலகத்தினையும் பார்வையிட்டனர்.

ABIM எனும் நிறுவனத்தில்் விரிவுரையாளர் ஷாயா உதுமானினால் நடாத்தப்பட்ட Mappix: Technique to be Genius எனும் தலைப்பிலான செயலமர்வு மிகவும் பலன்மிக்கதாக அமைந்தது. அப்துல்ஹமீத் அபுூசுலைமான் எழுதிய The Qur’anic Worldview எனும் நூல் அன்பளிப்பாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஒவ்வொரு விஜயத்திலும் தொழுகைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நேரத்துக்கு நேரம் ஒவ்வொரு “வக்து” தொழுகைகளிலும் சகலரும் பங்குபற்றினர். இஸ்லாம் ஆன்மீக , உலோகாயதப் பண்புகளுக்கு அளித்துள்ள இடம் நன்கு உணரப்பட்டது.

USIM ( University Sains Islam Malaysia ) உபவேந்தருடன் கலந்துரையாடல்கள் சிறப்பாக அமைந்தது. தூதுக்குழுவினர் தமது கருத்துக்களை வெளியிட்டனர். சர்வதேச மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விருந்துபசார வைபவமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வரலாற்றுப் புகழ்மிக்க மலாக்கா நகருக்கான விஜயம் மறக்க முடியாத பல புதிய அநுபவங்களை தந்தது. மலாக்காவின் முதலமைச்சரைச் சந்திக்கும் நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சிக்குரியதாக அமைந்தது. அவர் இராப்போசன் விருந்தளித்துக் கெளரவித்தார். படகு சவாரியின் மூலம் மலாக்கா நகரத்தினை சுற்றிப் பார்க்க முடிந்தது.

ரோயல் நூதனசாலை (Royal Museum) மற்றும் ஸ்ரீ பெர்டனா கலெரியையும் (Sri Perdana Gallery) பார்வையிட்டோம்.

இந்த விஜயத்தில் குழுக்களின் செயற்பாடும் முக்கியத்துவம் பெற்றது. இலங்கையில் முஸ்லிம் சமுதாயத்தின் பாதிப்பு எனும் தொனியில் SWOT Analysis மூலம் கருத்துக்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி (group presentation) எனும் குழு செயற்பாடானது அறிவு மட்டம் மற்றும் ஆளுமையை சோதிப்பதாக அமைந்தது. குழுப்பாடலுக்கும் தயார்படுத்தப்பட்டனர். நம்மவர்கள் இதனை சிறப்பாக செய்தனர். பாராட்டுக்கள் !!!

வெறும் படிப்பும் செயற்பாடும் மட்டும் போதாது. உடல் அசைவுகளும் பயிற்சிகளும் தேவை. இதைக் கவனித்திற் கொண்ட விஜய ஏற்பாட்டாளர்கள் புரொகா எனும் மலையில் அதிகாலையில் மலை ஏறும் நிகழ்ச்சியையும் இணைத்திருந்தனர். இந்த மலை ஏறல் ஒரு வாழ்க்கை சவால் போன்றே இருந்தது. இருந்தும் சவாலை வெற்றி கொள்வோம் எனக் கூறிய மாணவர்களும் மாணவிகளும் மலையின் உயர்ந்த இடம் வரை ஏறினர். இங்கு சூரிய உதயத்தை காணும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.

வாழ்வில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி காணும் வழிவகைகளை இந்தப் பயணங்கள் தந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நல்லெண்ண விஜயத்தின் பூரண வெற்றியில் மிக ஆர்வமாக ஈடுபட்ட மலேசிய IIIT (International Institute of Islamic Thoughts) பிரதிப்பணிப்பாளர் ஷஹரான் காசிம் அவர்கள் என்றென்றும் நன்றிக்குப் பாத்திரமானவர். அவருடைய ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் என்றென்றும் பாராட்டத்தக்கது !

இரவு பிரியாவிடை விருந்துபசாரத்துடன் சகல நிகழ்ச்சிகளையும் இனிதே பூர்த்தி செய்து மகிழ்ச்சியுடன் பாடிக் குதூகலித்து நாம் பிரிய மனமின்றி பிரிந்தோம்.

போன இடங்களில் எல்லாம் சிறந்த கவனிப்புக்கள் கிடைத்தன. பழகுவதற்கு இனிய மலேசிய மக்கள் நெஞ்சிலிருந்து நீங்காத இடம்பெற்றுவிட்டனர். இந்த ஒரு வாரகால விஜயம் இளசுகளைப் பொறுத்தவரை சிறந்த அநுபவப்பயிற்சியை பெற்றுத் தந்தது எனலாம்.

இதனை எதிர்வரும் காலங்களிலும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையினர் தொடர்ந்தால் நம் சமூகத்தில் சிறந்த தலைமைத்துவப் பண்பை வளர்க்க வாய்ப்பு உருவாகுமென்பது திண்ணம்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.