புத். 68 இல. 11

மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03

SUNDAY MARCH 13, 2016

 

 
பலதும் பத்தும்

பணத்துக்காக பணக்கார தம்பதிகள் விவாகரத்து!!

சுவிட்சர்லாந்து நாட்டில் வரிப்பணம் மற்றும் ஓய்வூதியத் தொகைக்காக எந்த விவகாரமும் இல்லாமல் பணக்கார தம்பதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் கலாசாரம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் நாட்டு சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தி வர வேண்டும். அதே சமயம், திருமணமான வயதான தம்பதிகள் ஓய்வூதியம் பெறும்போது முழுத்தொகையும் அவர்களது கைகளில் கிடைக்காது.

இதனால், அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் பணத்தை சேமிக்கவும், ஓய்வூதிய தொகையை முழுமையாக பெறவும், எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் பணக்கார தம்பதிகள் விவாகரத்து செய்துக்கொள்வது அதிகரித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

லவ்சான் மாகாணத்தை சேர்ந்த வழக்கறிஞரான Franck Ammann கூறியபோது, நாடு முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற சுமார் 800 விவாகரத்து வழக்குகள் வருவதாக தெரிவித்துள்ளார். சூரிச் நகரை சேர்ந்த Roger Groner என்ற வழக்கறிஞர் பேசியபோது, ‘திருமணம் ஆன வயதான தம்பதிகள் தங்களுடைய ஓய்வூதியத்தை பெறும்போது, அவர்களுடைய ஒட்டுமொத்த தொகையில் இருந்து 150 சதவிகிதம் மட்டுமே கிடைக்கும்.

ஆனால், விவாகரத்து பெற்ற வயதான தம்பதிகள் முழு ஓய்வூதிய தொகையையும் (200 சதவிகிதம்) பெறுகிறார்கள்.

அதேசமயம், ஓய்வூதிய வயதை அடையும் நேரத்தில் கூட எந்தவித கருத்து வேறுபாடும் இன்றி விவாகரத்து பெற்று விடுகின்றனர். இதுபோன்று சூரிச்சில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 5 வழக்குகள் வருகின்றன.

இதன் மூலம், விவாகரத்து பெற்ற வயதான ஆண் மற்றும் பெண் முதியவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,100 பிராங்க் சேமித்து வருவதாகவும் அந்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


தனது 49 ஆவது வயதில் ஐ.ஐ.டி பட்டமேற்படிப்பு...! -

தனது 49 ஆவது வயதில் ஐ.ஐ.டி.யில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பெண் பத்மா சுந்தரி. மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் இண்டஸ்டிரியல் மேத்தமேட்டிக்ஸ் அண்ட் சயின்டிபிக் கம்ப்யூட்டிங் பிரிவில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார் பத்மா சுந்தரி. படிப்பு குறித்து பத்மா சுந்தரி கூறியதாவது:

நான் இதற்கு முன் பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். பின்னர் 4 வருடங்களுக்கு வேலையை விட்டு விட்டு கேட் தேர்வு எழுதினேன். இந்த விஷயத்தில் எனக்கு என் கணவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறேன். என்னுடைய வருகைக்காக எனது கணவர் காத்திருப்பார். முதலில் பட்டமேற்படிப்பு சேரும்போது இங்கு ஒருவித தயக்கம் இருந்தது.

பின்னர் அது சரியாகிவிட்டது. இங்குள்ள சகமாணவிகள், மாணவர்கள் என்னை ஒரு தாய் போல பார்க்கின்றனர். இங்குள்ள மாணவிகள், தங்களது பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பும்போது என்னிடம் அவர்கள் பிரச்சினைகளைச் சொல்கின்றனர். நான் அவர்களுக்கு உதவ முடிகிறது. என்னை ஒரு தாயாகவும், தோழியாகவும், நண்பியாகவும் பார்க்கின்றனர். அவர்களுக்கு என்னாலான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். அவர்கள் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வர வழி சொல்கிறேன். இந்த பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு அடுத்த வேறு ஒரு படிப்பைத் தொடரவேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம் என்றார் இந்த மூத்த மாணவி பத்மா சுந்தரி.


சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு உதவுகிறது ரோபோ!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் முயற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது.

7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக் கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர். ரோபோக்களை சிறார்கள் அதிகம் விரும்புவதால், சர்க்கரை நோயின் அறிகுறிகள் உள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை, எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்து செயற்படும் சிறார்கள், அதுபற்றிய அறிவைப் பெறுவார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம், தமது வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இயங்க பிள்ளைகள் பழகிக் கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகவும் சிறந்த தயாரிப்பு என பிரிட்டனில் சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக செயற்படும் தொண்டு நிறுவனமான டயபீடிஸ் யு.கே தெரிவித்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.