இலங்கையரான நாளிர் டுபாயில் சாதனை; 35 வருடங்கள் எவ்விதமான சிறு விபத்தும்
ஏற்படாது வாகனம் ஓட்டினார்
டுபாய் நாட்டிலே சுமார் 35 வருடங்களாக வாகன சாரதியாக கடமையாற்றி
ஓய்வுபெற்ற இலங்கையைச் சேர்ந்த முகம்மத் சாலி முகம்மத் நாளிர் அண்மையில் நாடு
திரும்பியிருக்கிறார்.
அவர் பதவியில் இருந்த காலத்தில் அந்நாட்டின் போக்குவரத்து வீதி ஒழுங்கு விதிகளை
மீறிய எத்தகைய குற்றச் செயல்களுக்கும் உட்படாமலும் ஒரு நாளேனும் எந்தவிதத்திலும்
விடுமுறையேதும் பெறாமலும் கடமையிலே கண்ணாக இருந்து சாதனை நிலைநாட்டியிருக்கிறார்.
டுபாய் நாட்டின் அரச போக்குவரத்து நிறுவனம் அன்னாருக்கு ‘மிகச் சிறந்த சாரதி’ என்ற
உன்னத விருது ஒன்றையும் 2010ஆம் ஆண்டு வழங்கி கௌரவித்திருக்கிறது.
அவரை எமது வாசகர்களுக்காக நேர்கண்டேன். அதன் விபரம் வருமாறு.
கேள்வி: உங்களது ஆரம்பகால வாழ்வு குறித்துச் சொல்லுங்கள்.
பதில்: திஹாரியைச் சேர்ந்த முகம்மது சாலி பாத்திமாஹான் தம்பதியின் புதல்வனாக
1952ஆம் ஆண்டு பிறந்தேன். திஹாரி தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், கொட்டம்பிட்டிய
முஸ்லிம் வித்தியாலயம், நாம்புளுவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் சாதாரண தரம்
வரை கல்வி கற்றேன். பின்னர் சிறுசிறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டேன்.
கேள்வி: எப்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றீர்கள்?
பதில்: 1980 ஆம் ஆண்டு தொழிலாளர் விஸாவில் ஐக்கிய அரபு இராச்சியம் பயணமானேன். அங்கு
சார்ஜா நகரிலுள்ள ஜெனரல் செரமிக் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து மூன்று வருடங்கள்
பணியாற்றினேன்.
கேள்வி : எப்படி சாரதி வேலைகிடைத்தது.
பதில் : இந்நிறுவனத்தில் பணியாற்றும் போது நிறுவன வாகனங்களை ஓட்டி பழகிக்கொண்டேன்.
நிறுவனத்திலிருந்து விலகி வாடகைக் கார் ஓட்டி உழைத்து வந்தேன். நல்ல முறையில் நான்
வாகனம் செலுத்துவதைக் கண்ட ‘நிவ் இந்தியன் மொடல் ஸ்கூல் நிறுவனத்தின் பாடசாலை பஸ்
வண்டியின் சாரதியாக என்னை அமர்த்திக் கொண்டனர்.
டுபாயிலிருந்து மக்காவுக்கு ஹஜ் பயணிகளை அதே பஸ் வண்டியில் அழைத்துச் சென்றேன். அதே
பணியில் ஐந்து வருடங்கள் பணியாற்றி 1989ஆம் ஆண்டு ஹஜ்கடமையையும் முடித்துக் கொண்டு
நாடு திரும்பினேன்.
கேள்வி : உங்களுக்கு சிறப்பு விருது வழங்கிய நிறுவனத்தில் எப்படி இணைந்தீர்கள்?
பதில் : 1993இல் உல்லாச பயண வீஸாவில் டுபாய் பயணமானேன். ஏற்கனவே நான் பெற்றிருந்த
சாரதி அனுமதிப் பத்திரம் கைவசம் இருந்ததால்.
போக்குவரத்து அதிகாரசபையின் பாரிய பஸ் வண்டியில் சாரதியாக பணியாற்றும் வாய்ப்பு
கிடைத்தது. அத்துடன் குடும்பத்துடன் தங்கியிருப்பதற்கான வீஸாவும் கிடைத்தது.
கேள்வி : சிறப்பு விருது கிடைத்தமைக்கு வேறென்ன காரணமாய் அமைந்தது?
பதில் : 1993இலிருந்து 2010ஆம் ஆண்டுவரை சாரதியாக பணியாற்றிய வேளையில் மெடிகல்,
கெசுவல்... என்ற எத்தகைய விடுமுறைகளும் பெற்றதில்லை. சுமார் 200 பயணிகளை அழைத்துச்
செல்லும் பஸ்வண்டியில் பயணிகளிடமிருந்து துரும்பளவேனும் முறைப்பாடுகளும் என்மீது
சுமத்தப்பட்டிருக்கவில்லை. வீதி ஒழுங்குகளை மீறியமைக்கான பொலிஸ் பதிவுகள் ஏதும்
பெறாத சாரதியாகவே கடமையாற்றியிருக்கிறேன். விடுமுறையில் நாடு திரும்பினாலும் உரிய
தினத்திற்கே சென்று கடமையில் ஈடுபடுவேன். இத்தகைய சிறப்புக்களே எனக்கு
விருதுகிடைக்க வழி கோலின.
கேள்வி : உங்கள் சிறப்புச் சேவைகக்காக அதிகார சபை வேறும் சலுகைகளை வழங்கியதா?
பதில் : 60 வயதுக்கு மேல் சாரதி தொழிலில் இருந்து கட்டாயமாக ஓய்வு வழங்குவதே
அந்நாட்டு சட்டமாகும். அப்படியிருக்க 63வயதுவரை என்னைப் பணியில் தொடரவிட்டு பலரும்
வியக்கும் வண்ணம் எனக்கு விசேட சலுகை தரப்பட்டதை இங்கு ஈண்டு குறிப்பிட
விரும்புகிறேன்.