மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழம |
||
மட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை'உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்ற பாடலை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இன்றியும் உழைப்புக்காக இன்றுவரை அலைந்து திரியும் மானிடப் பிறவிகளையும் காண்கின்றோம். அந்த வகையில், தமிழ்ப் பெண்கள் மத்தியில் தொழில் இல்லாப் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றது. இந்த நிலையில் அவர்களுள் சிலர் தாமாகவே ஓரளவு உழைத்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு உழைத்தும் உயர்வில்லாமல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் தமிழ் பெண்களின் அவலநிலையை இக்கட்டுரை பிரதிபலிக்கின்றது. இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி எனக் கூறப்படும் மட்டக்களப்பு வாவியை நம்பி வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. குறித்த வாவியில் களப்பு மற்றும் சிறு சிறு குளங்களை நம்பி மாவட்டத்திலுள்ள பல பெண்கள் தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த நீர்நிலைகளில் ஐயாமாசி, கூனி, மீன் மற்றும் இறால் போன்றவற்றைப் பிடித்து அவற்றை விற்பனை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட பெண்களின் வாழ்வு சோர்வு இழந்து காணப்படுகின்றது. பன்நெடுங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும், தமது வாழ்வில் முன்னேற்றங்கள் எதுவுமின்றித் தவிப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்தில் மீன்தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்கள் வாழ்வாதார ரீதியாக பல்வேறுபட்ட பிரச்சினைகளை தாம் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். பன்நெடுங்காலமாக ஆறு, குளங்களில் மீன், இறால் பிடித்தல், மீன்களை வாங்கி விற்றல், கூனி, ஐயாமாசி வடித்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டுவரும் தமக்கு அரசாங்கம் எந்தவித உதவிகளையும் ஏற்படுத்தித் தரவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமது தொழிலில் போதியளவு வருமானமும் இல்லாது தராசு, பாதுகாப்பு பெட்டிகள் போன்றவற்றையாவது தமக்குப் பெற்றுத்தர வேண்டும். சிலர் கூட்டங்கள் வைத்து உதவிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துச் சென்றுள்ள போதிலும் இதுவரையில் எந்தவித உதவிகளும் தமக்குக் கிட்டவில்லை எனவும் அவர்கள் அங்கலாய்க்கின்றனர். “எனக்கு 58 வயது. நான் சுமார் 15 வயதிலிருந்து இந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றேன். எனது கணவன் உழைக்க முடியாது உள்ளார். நான் இந்த தொழிலை மேற்கொண்டுதான் எமது குடும்பத்தை பார்த்து வருகின்றேன். ஆனால் அதுவரையில் எனது தொழிலை மேம்படுத்த யாரும் முன்வரவில்லை இந்நிலையில்தான் எமது வாழ்வு உருண்டு கொண்டிருக்கின்றது. எமது வாழ்வாதாரத்திற்கு உதவும் உள்ளங்கள் யாராவது உதவிக்கரம் நீட்ட வேண்டும். கூனி, ஐயாமாசி போன்றவற்றை பிடித்து விற்பனை செய்து வருகின்றோம். எம்மிடம் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வந்து வாங்கிச் செல்கின்றார்கள்” எனத் தெரிவிக்கின்றார் மட்டக்களப்பு கோட்டைக் கல்லாறு பாலத்தருகில் வைத்து ஐயாமாசி விற்பனையில் ஈடுபட்டுவரும் பெண்மணி. மீன்பிடியில் ஈடுபட்டுவரும் ஆண்களுக்கு தோணி வலைகள், மீன் பெட்டிகள் போன்ற உதவிகளை பலர் வழங்கி அவர்களது தொழிலுக்கு உந்து சக்தியளித்துள்ளனர். இருந்த போதிலும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் கணவனையுடைய பெண்கள், கணவனை இழந்த பெண்கள் போன்றோரும் இவ்வாறான தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வாழ்வில் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் யாருடையது? “நான் இந்த தொழிலுக்கு பழக்கப்பட்டவர் அல்ல. எனது கணவர் இறந்து 5 வருடங்களாகின்றன. எமக்கு வருமானம் இல்லை. அதன் காரணமாகத்தான் எனது குறுகிய கண்பார்வையோடு கூனியை வியாபாரியிடம் கடனுக்கு, வாங்கி விற்பனை செய்து வருகின்றேன். ஆரம்ப முதலீடும் இல்லாமல்தான் இந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றேன். முதலீட்டுக்காவது எமக்கு யாராவது உதவுவார்களாயின், அது பெரும்வாய்ப்பாக அமையும். ஒரு மரைக்கால் கூனி வாங்கி விற்றால் 300 ரூபாய்தான் இலாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஒரு மரைக்கால் கூனியும் விற்கமுடியாது. அரசாங்கத்தினால் மாதாந்த பொதுசனக் கொடுப்பனவு உதவித் தொகை 250 ரூபாய் கிடைக்கின்றது. மாறாக எமது தொழிலுக்கு யாரும் உதவவில்லை. அண்மையில் சிலர் வந்து எமது விபரங்களைத் பதிவுசெய்து கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் இதுவரையில் எந்தவித உதவிகளும் எமக்கு வந்து சேரவில்லை” என்கிறார் கோட்டைக் கல்லாற்றிலிருந்து கூனி விற்பனையில் ஈடுபட்டுவரும் பெண்மணி. மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட களப்புக்களில் துறைநீலாவணை, மகிழூர்முனை, கல்லாறு, நாகபுரம் போன்ற இடங்களில் பெண்கள் சுமார் 100 க்கு மேற்பட்ட பெண்கள், இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டுவரும் பெண்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரையில் எந்தவித உதவிகளும், செய்யப்படவில்லை என மண்முனை தென் எருவில்பற்று மீன்பிடி ஆய்வாளர் இளஞ்செழியன் தெரிவித்தார். வாழ்வை நீர் நிலைகளில் தொலைத்து வெயிலையும், மழையையும், பெருட்படுத்தாது குடும்பத்தை வாழவைக்க வேண்டும் என்ற நோக்குடன் பல தசாப்த காலமாக மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட பெண்களின் மீது கருணை காட்டுவது யார்? இவ்வாறு வாழ்வில் முன்னேறத்துடிக்கும் மக்களுக்கு இவற்றை முன் நிறுத்துவது யார்? தண்ணீரில் கரைந்து தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பாடுபடும் மட்டக்களப்பு மாவட்ட பெண்களின் வாழ்வியலிலும் ஒளியேற்ற சம்மந்தப்பட்டவர்கள் துரித கதியில் செயற்பட வேண்டும் என்பதையே இந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |