மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27
SUNDAY FEBRUARY 07, 2016

Print

 
காதோடு காதாக

முகநூலிலும் டுவிட்டரிலும் உரிமை

கோரலுக்கு போட்டி

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் தாமே காரணம் தாமே காரணம் என முகநூல்களிலும், டுவிட்டரிலும் போட்டி போட்டு உரிமை கொண்டாடுகிறார்கள். நல்ல விடயம். 'யார் குற்றினாலும் அரிசி மாவாகினால் சரி' என்பது போல ஏதோ ஒரு நல்ல விடயம் நடந்து விட்டது. ஆனால் 1948 ஆம் ஆண்டு விழாவில் போன்று ஆரம்பத்தில் பாடவிடவில்லையே என போட்டியிடுபவர்கள் எவரும் கவலைப்படாதது கவலைக்குரிய விடயம்தான். உண்மையில் இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும்தான் நன்றி கூற வேண்டும்.

***

பல்டி அடிப்பதில் இவர்களை

எவராலும் விஞ்ச முடியாது

மேடைப் பேச்சுக்களில் பல்டி அடிப்பதில் எமது தமிழ் அரசியல்வாதிகளை எவராலும் விஞ்ச முடியாது. மஹிந்தவின் ஆட்சியில் இறுதி ஐந்து வருடங்கள் அராஜக ஆட்சி நடந்ததாக அதே ஐந்து வருடங்களும் அந்த ஆட்சியில் சகலவிதமான வளங்களையும், சலுகைகளையும் அனுபவித்து வந்த அரசியல்வாதியொருவர் சுதந்ததிர தின விழாவில் உரையாற்றியிருக்கிறார். அன்றே அதாவது அவரது ஆட்சியில் இருந்தபோதே இதனைத் தெரிவித்துவிட்டு ஜனாதிபதி போன்று எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறி இவ்வாறு தெரிவித்திருந்தால் இவர்தான உண்மையான அரசியல்வாதி.

***

கனடாவில் கவலையில் வாடும்

ஈழவேந்தனுக்கு உதவி தேவை

ஈழவேந்தன் ஐயாவை அறியாதவர்கள் இருக்க முடியாது. தனிச் சிங்கள சட்டம் வந்தபோது வங்கியில் தான் வகித்த உயர் பதவியை தூக்கியெறிந்துவிட்டு தமிழுக்காக குரல் கொடுத்தவர். பின்னர் தேசியப் பட்டியல் எம்.பியாக தமிழ்க் கூட்டமைப்பு சார்பாக புலிகளால் நியமிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இப்போது கனடாவில் புகலிடம் கேட்டு தஞ்சமடைந்து பத்து வருடங்கள் கழிந்தும் அது கிடைத்த பாடில்லை. நாடு வழமைக்குத் திரும்புவதால் இனி அங்கு பிரஜாவுரிமை சந்தேகம்தான். இதனால் அவர் கவலையில் இருக்கிறாராம். யாராவது அவரது பிரச்சினை என்னவெனக் கேட்டு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

***

தலைவரின் விருப்பத்தைச் சரியாக கூறி

பெருமைப்படும் தொண்டன்

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைத்தபோது சம்பந்தன் ஐயாவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகையில், தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற தேசிய சுதந்திர முன்ணனியின் பேச்சாளர் முஸம்மில் ஐயாவோ, தமிழில் பாடப்பட்டமைக்கு பத்திரிகையாளர் மாநாடு வைத்து எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். கட்சித் தலைவர் விமல் ஐயா இவ்வாறு கூறச் சொன்னால், அப்படியொரு கட்சி எனக்குத் தேவையில்லை எனக் கூறி வெளியேறுவதை விட்டுவிட்டு ஐயா சொன்னதை சரியாக அப்படியே மைக் முன்னால் கிளிப்பிள்ளை போலச் சொல்லிவிட்டதில் பெருமை வேறு.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]