மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15
SUNDAY December 27, 2015

Print

 
இலங்கை அணியின் 7 ஆவது டெஸ்ட் தோல்வி

இலங்கை அணியின் 7 ஆவது டெஸ்ட் தோல்வி

ரண்டு டெஸ்ட், மற்றும் 5 ஒருநாள், 2 டுவெண்டு-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்கு இம் மாத ஆரம்பத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி முதலில் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஏற்கனவே இலங்கையில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடர்களில் வெற்றிபெற்ற இலங்கை அணி சவால் மிக்க நியூசிலாந்துடனான தொடரில் புது முக வீரர்களுடன் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கியது.

நியூசிலாந்து அணியும் கடைசியாக மோதிய அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் தோல்வியடைந்து சற்று வலுவிழந்த நிலையிலேயே இலங்கை அணியை தன் சொந்த மண்ணில் சந்தித்தது.

டுனின்டனில் கடந்த 10ம் திகதி ஆரம்பமான முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதல் இனிங்ஸில் 97 ஓவர்களில் 431 ஓட்டங்களைப் பெற்றது. அவ் அணி சார்பாக மார்ட்டின் குப்டில் 156 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 88 ஓட்டங்களையும், கப்டன் மெக்கலம் 75 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை பந்து வீச்சில் நுவன் பிரதீப் 112 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 294 ஓட்டங்களையே பெற முடிந்தது. திமுத் கருணாரத்ன 84 ஓட்டங்களையும், டினேஸ் சந்திமால் 88 ஓட்டங்களையும் பெற்றனர். நியூசிலாந்து பந்துவிச்சில் டிம் சௌத்தி, நீல் வோக்னர் தலா 3 விக்கட் வீதம் வீழ்த்தினர்.

137 ஓட்டங்கள் முன்னாலிருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களுடன் தனது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக லெதம் ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

405 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 271 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 133 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக மார்டின் குப்டில் தெரிவானார்.

கடந்த 18ம் திகதி ஹமில்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அஞ்சலோ மெத்தியூஸ், மலிந்த சிறிவர்தன ஆகியோரின் அரைச் சதங்களுடன் 292 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. நியூசிலாந்து பந்து வீச்சில் டிம் சௌதி 3 விக்கெட்டுகளை வீ ழ்த்தினார்.

தொடர்ந்து தனது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறி விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. ஆனால் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிதான ஆட்டத்தின் உதவியுடன் அவ்வணி 237 ஓட்டங்களைப் பெற்றது. மார்ட்டின் குப்டில் அரைச்சதம் பெற்றார். இலங்கை பந்து வீச்சில் இளம் வேகப் பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பெற்ற சிறந்த பந்துவீச்சாகும்.

55 ஓட்டங்கள் முன்னணி பெற்ற இலங்கை அணி தனது இரண்டாவது இனிங்ஸை நம்பிக்கையுடன் ஆரம்பித்தது. ஆரம்ப ஜோடியாக களமிறங்கிய கருணாரத்ன –குசல் மெண்டிஸ் முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 71 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை வலுவான நிலைக்கு இட்டுச் செல்ல முயன்றனர். ஆனால் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் பொறுப்பை உணர்ந்து செயற்படாததால் விரைவாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. இறுதியில் இலங்கை அணி 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மீண்டும் சிறப்பாகப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌத்தி 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

189 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சமீரவின் துல்லியமான பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் தடுமாறியது. ஒரு கட்டத்தில் அவ்வணி 120 ஓட்டங்கள் பெறுவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியுறும் நிலையில் இருந்தது.

ஆனால் இவ்வருடம் முழுவதிலும் நியூசிலாந்து அணியின் வெற்றிகளுக்கு களமமைத்த கென் வில்லியம்சன் இப்போட்டியிலும் நங்கூரமாக நின்று நியூசிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார். அவர் ஆட்டமிழக்காது 109 ஓட்டங்களைப் பெற்றார்.

இது இவர் இவ்வருடத்தில் பெறும் ஐந்தாவது சதமாகும். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் இவரே தெரிவானார்.

நியூசிலாந்து அணியின் இவ்வெற்றியானது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 13வது வெற்றியாகு்ம். அவ்வணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு ஹமில்டனின் தென்னாபிரிக்க அணியுடன் தோல்வியுற்றதன் பின் இதுவரை அவ்வணி சொந்த மண்ணில் தோல்வியுறவில்லை. இதே போல் 1989முதல் 91 வரை தொடர்ச்சியாக 13 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இவ்வருடத்தில் 5 சதங்களைப் பெற்று சதம் பெற்றோர் வரிசையில் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துடன் முதலிடத்திலுள்ளார். இதுவரை வில்லியம்ஸ் 16 இன்னிங்ஸுகளில் 1172 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இது நியூசிலாந்து வீரர் ஒருவர் ஒரு வருடத்தில் பெற்ற கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முன்பு கடந்த 2014ம் ஆண்டு பிரண்டன் மெக்கலம் 1164 ஓட்டங்கள் எடுத்ததே கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

மேலும் கென் வில்லியம்சன் இலங்கையுடனான இரண்டாவது போட்டியில் 2வது இன்னிங்ஸில் 109 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் நியூசிலாந்து முன்னாள் வீரர் கிளேன் டர்னருக்குப் பின் தரவரிசையில் முதலிடம் பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கை அணி பெற்ற இத் தோல்வியானது இவ்வருடத்தில் அவ்வணி பெறும் 7வது தோல்வியாகும்.

இலங்கை அணி இவ்வாண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஓர் ஆண்டில் இலங்கை அணி பெற்ற மோசமான தோல்வி இதுவாகும்.

இதற்கு முன் 1994, 2001, 2004, 2012 ஆம் ஆண்டுகளில் 5 போட்டிகளில் தோல்வியுற்றதே மோசமான தோல்வியாக இருந்தது. கடந்த ஆண்டு இலங்கை அணியே கூடுதலான வெற்றிகளைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]