மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15
SUNDAY December 27, 2015

Print

 
வாக்களித்த தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயல்

கூட்டமைப்பும் பேரவையும் மோதும் விடயம்:

வாக்களித்த தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயல்

 -கந்தசாமி கருணாகரன் காட்டம் 

 தமிழ் மக்களது பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள், கைதிகள் விடுவிப்பு, காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேச வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய பேரவையும் தமக்குள் ஏற்பட்டுள்ள  அதிகாரப் போட்டிப் பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதும், அதுதொடர்பாக அறிக்கைகளை விடுவதும் வாக்களித்த தமிழ் மக்களை முட்டாள்களாக்கும் செயலாகவே அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், அக்கட்சியின் தமிழ் விவகாரங்களுக்கான ஆலோசகருமான கந்தசாமி கருணாகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள அதிகார மற்றும் பதவிப் போட்டி அந்த அரசியல்வாதிகளின் கண்களை மறைத்துள்ளதாகவும், இதனால் மக்களது தேவைகளை அவர்கள் மறந்து செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் ஆகியோரிடையே நடைபெற்ற சந்திப்பு தொடர்பாகக் கேட்டபோதே கருணாகரன் இவ்வாறு கூறினார்.

தமிழ் மக்களுக்கு ஆயிரத்தெட்டு தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து அரசாங்கத்துடன் பேசி தீர்வு காண்பதை விடுத்து தமக்குள் அதிகாரத்தைக் கைப்பற்ற அலைந்து திரிவது ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் தெரிவித்தார். இதற்காகவா தமிழ் மக்கள் தமது பெருவாரியான வாக்குகளை உங்களுக்கு வழங்கினார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே உங்களுக்கிடையோயான அதிகார அல்லது பதவிப் போட்டிகளைத் தவிர்த்து மக்களது பிரச்சினைகளுக்கு ஒற்றுமையாகத் தீர்வு காண முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார். மக்களது நன்மையே முக்கியம் என அறிக்கை விடுவதால் நன்மைகள் தானாக வந்துவிடாது. இதுபோன்ற அறிக்கைகளை நம்பி இனியும் தமிழ் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள் அதனைச் செயலிலும் காட்டுங்கள் எனவும் கருணாகரன் கேட்டுக் கொண்டுள்ளார். 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]