மன்மத வருடம் கார்த்திகை மாதம் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 23
SUNDAY December 13, 2015

Print

 
பொத்துவில் விவசாயிகளின் நீண்டகால மனக்குறைக்கு ஹரீஸ் முற்றுப் புள்ளி

கெடோயா, கரைவாகு நீர்ப்பாசனத்திட்டங்கள் மீண்டும்:

பொத்துவில் விவசாயிகளின் நீண்டகால மனக்குறைக்கு ஹரீஸ் முற்றுப் புள்ளி

 கெடோயா நீர்ப்பாசனத் திட்டம் முறையான முறையில் முன்னெடுக்கப்படாமையினால் பொத்துவில் விவசாயிகளின் ஆயிரக்கணக்கான காணிகள் நீண்ட காலமாகப் பயிரிடப்படாமல் காணப்படுகின்றன. இதனை அரசாங்கம் கவனத்தில் எடுத்து இத்திட்டத்தினை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உதவித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

 பொத்துவில் கெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தினைக் கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள் நிறைவேற்றித்தருவதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதிகள் வழங்கியிருந்தும் அது நிறைவேற்றப்படவில்லை. இதனால் இங்குள்ள விவசாயிகள் பல கஸ்டங்களை அனுபவித்து வருவதுடன் தமது வாழ்வாதாரத் தொழிலையும் இழந்துள்ளனர்.

இன்று நல்லதொரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இத்திட்டத்திற்கு நீரைக்கொண்டு வரக்கூடிய மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்தவராக விஜயமுனி சொய்ஸா நீர்ப்பாசன அமைச்சராக இருப்பதனால், இம்மாவட்டத்திலிருந்து நீரைக்கொண்டு வந்து இத்திட்டத்தினை நிறைவேற்றுவது இலகுவானதாக இருக்கும் என நினைக்கின்றேன் என்றார்.

இதற்குப் பதிலளித்த நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்ஸா, பிரதி அமைச்சர் ஹரீஸ் காட்டிவரும் அக்கறையை பாராட்டியதுடன், சுட்டிக்காட்டிய பொத்துவில் கெடோயா நீர்ப்பாசனத் திட்டத்தினையும் கல்முனை கரைவாகு நீர்ப்பாசனத் திட்டத்தினையும் நிறைவேற்றித்தர உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இது தொடர்பில் இரண்டு அமைச்சர்களும் குறித்த இடத்துக்கு நேரில் சென்று மேற்பார்வையிட இருப்பதாகவும் இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரின் இணைப்பு மற்றும் ஊடகச் செயலாளர் எம்.எஸ்.எம் மிஸ்வருக்குப்பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]