மன்மத வருடம் கார்த்திகை மாதம் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 23
SUNDAY December 13, 2015

Print

 
கட்சி முரண்பாடுகள் ஊடகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

வேற்றுமையை ஏற்படுத்த நினைப்போரது செயலுக்குப் பலியாகிவிடக் கூடாது:

கட்சி முரண்பாடுகள் ஊடகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

 -அவை பேசித்தீர்க்கப்பட வேண்டும் என்கிறார் இரா. சம்பந்தன் 

“கட்சிக்குள் முரண்பாடு உள்ளதுதான். இல்லை என்பதற்கு இல்லை. ஆனால் முரண்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு வெளியில் செல்லக் கூடாது. அனைத்து விடயங்களும் உள்ளுக்குள் பேசித்தீர்க்கப்பட வேண்டும். ஜனநாயக கட்சி என்ற ரீதியில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அது ஒருபெரிய விடயமல்ல. ஆனால் அவை ஊடகங்களுக்குச் செல்ல வேண்டிய  அவசியம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுமந்திரனைப் பற்றியும் முதலமைச்சரைப் பற்றியும் இப்போது அதிகம் பேசப்படுகிறது. அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளதுதான். இல்லை என்பதற்கில்லை. அது தற்போதும் இருக்கின்றது. முரண்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக ஆதரிக்கவில்லை என்பதுதான்.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைத் தமிழரசுக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எனவே அந்தக் கட்சியை ஆதரிப்பதற்கு அவருக்கு ஒரு கடமை இருக்கிறது.

ஆனால் அவர் ஆதரிக்கவில்லை. ஆதரிக்காமல் விட்டது மாத்திரமல்ல, நான் மௌனியாகப் போகின்றேன், ஊமையாகப் போகின்றேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு, அவர் விடுத்த அறிக்கைகள் வேறொரு கட்சிக்கு ஆதரவளிப்பதாக அமைந்ததாக ஒரு கருத்து இருக்கிறது.

இதனால் தான் இந்த முரண்பாடு ஏற்பட்டது. தமிழரசுக் கட்சிக் கூட்டத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கருத்தினைக் கூட சுமந்திரன் முன்வைத்திருந்தார். இதனை நான் பேசித்தீர்த்துக் கொள்வோம் என கூறியிருந்தேன்.

இந்நிலையில் சுமந்திரன் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றபோது இந்தவிடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அவ்வாறு ஊடகத்தில் பதிலளித்திருக்கக் கூடாது. கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று கூறிய பிறகு அவர் அதனை ஊடகத்தில் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சில சமயம் ஆட்சியில் உள்ள சிலர் எங்கள் மத்தியில் சிறு சிறு விடயம் சம்பந்தமாக வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ளலாம் என நினைக்கின்றனர்போலும். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது. அவதானமாக இருக்க வேண்டும்.

நாங்கள் பக்குவமாக, நிதானமாக செயற்பட வேண்டிய தேவை இன்று உள்ளது. இன்று அனைத்துலக சமூகத்தின் முழுமையான அனுதாபம் எங்கள் பக்கம் வந்துள்ளது. எமக்குச் சாதகமான நிலையினை ஏற்படுத்தியுள்ளது. எமது கஷ்டங்களையும் நிலைமைகளையும் அனைத்துலகம் நன்றாகப் புரிந்துள்ளது. நாங்கள் சமாதானமாகவும் பக்குவமாகவும் செயற்படுகிறோம் என்பதையும் அனைத்துலக சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் நியாயமான அதிகாரப்பகிர்வு மூலமாக ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில் தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது என்றும் திரு.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]