மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க சட்டவிதி முறைகளை ஏற்படுத்த வேண்டும்

தனியார்துறை ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்க சட்டவிதி முறைகளை ஏற்படுத்த வேண்டும்

னிஹீhட்ட மக்களுக்கு வழங்கும் 7 பேர்ச் காணி வீட்டுத் திட்டமும் ஒரு நவீன லயன் முறையாகத்தான் இருக்க முடியுமே தவிர கிராமமாக அமைய முடியாது. எனவே தோட்ட மக்களின் குடியிருப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏனைய வசதிகளுக்கும் போதுமானதாக அமைய கிராமிய அடிப்படையில் குடும்பம் ஒன்றிற்கு ஆகக் குறைந்தது 20 பேர்ச் காணியில் வீடு அமைக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டுமென ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு - செலவு திட்ட அறிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்பித்த வரவு - செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வாக ரூபா 10,000.00 வழங்குவதாகவும் தனியார்துறை ஊழியர்களுக்கு ரூபா 2500 வழங்க வேண்டுமென்ற ஆலோசனையும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை முதலாளிமார் சம்மேளனமோ இந்த சம்பள உயர்வை வழங்க மறுத்துள்ளதுடன் கடந்த காலங்களிலும் இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன.

எனவே சகல தனியார்துறை ஊழியர்களுக்கும் இம்முறையாவது ரூபா 2500 சம்பள உயர்வு வழங்க வேண்டிய சட்டவிதி முறைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இலங்கை முதலாளிமார் சம்மேளனமோ அல்லது தனியார் முதலாளிகளோ ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி காலத்தை கடத்திவிடுவர். தோட்டங்களில் 160,000 குடும்பங்கள் இன்னும் பழைய லயன் அறைகளிலேயே வாழ்கின்ற துர்ப்பாக்கிய நிலையிலிருந்து மீட்டெடுக்க அந்த மக்களின் வீடமைப்புத் திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு- செலவு திட்ட உரையில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டமை வரவேற்க வேண்டிய விடயமாகும். கொஸ்லந்தை, மீரியபெத்த தோட்டத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அதுபோல அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டுவரும் மண்சரிவு அபாயத்தினால் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் வீடு வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அத்தோடு தோட்ட லயங்களில் வாழும் சகல மக்களும் சொல்லொனா துன்ப துயரங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் 25 பாடசாலைகளை அபிவிருத்திச் செய்ய 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு - செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்ட 74ஆவது சரத்தில் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை போன்ற மாவட்டங்களிலுள்ள தமிழ் பாடசாலைகளில் விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்திச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டதுடன் இதற்காக தனி அமைச்சும் உருவாக்கப்பட்டது. ஆனால் விஞ்ஞானக் கல்வியை அபிவிருத்தி செய்ய எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆகையால், தோட்ட மக்களின் பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளுக்கு கணிதம், விஞ்ஞானம் போன்ற முக்கிய பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்களையும் வளங்களையும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு இரண்டு வருட வரிச்சலுகையை வரவு-செலவு திட்டத்தில் வழங்கியுள்ளதால் தோட்டங்களை முறையாக அபிவிருத்திச் செய்தல் மற்றும் உத்தியோகத்தர் தொழிலாளர் ஆகியோர்களின் சேமநலன்களையும் கண்கானிக்க உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]