மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
ஐ.நா. குழுவின் கண்டறிவுகள் விசாரணைகளின் தொடக்கமாகுமா?

ஐ.நா. குழுவின் கண்டறிவுகள் விசாரணைகளின் தொடக்கமாகுமா?

பிறுகிய நாட்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த போதிலும், நாட்டில் ஆரோக்கியமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு உண்மை மற்றும் நீதி போன்றன மிகவும் இன்றியமை யாதவை என்பதற்கான ஒரு சாட்சியமாகவே ஐ.நா பணிக்குழுவின் பயணம் அமைந்துள்ளது.

அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை இன்னமும் மேற்கொள்ளத் தொடங்கவில்லை என பத்து நாட்களாக இலங்கைத் தீவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்ட காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு கண்டறிந்துள்ளது.

இலங்கைத் தீவில் தாங்கள் தங்கியிருந்த காலப்பகுதியில் எவ்வாறான உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர் என்பது தொடர்பாக காணாமற் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் உப தலைவர் பேர்ணாட் டுகெய்ம், தனது சக அதிகாரிகளான ரா. உங் பைக் மற்றும் ஏரியல் டுளிற்ஸ்கி ஆகியோருடன் இணைந்து கொழும்பிலுள்ள ஐ.நா தலைமைச் செயலகத்தில் ஊடக மாநாடொன்றை மேற்கொண்டிருந்தார்.

காணாமற் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் வல்லுனர்கள் இலங்கையில் காணாமற் போனவர்களின் குடும்பங்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்ததோடு மட்டுமன்றி, திருகோணமலையிலுள்ள கடற்படை முகாம், குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நான்காம் மற்றும் ஆறாம் மாடிகள், கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு, காலியிலுள்ள பூசா தடுப்பு முகாம் ஆகிய இடங்களில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளதாக பேர்னாட் டுகெய்ம் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார்.

1994ல் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை இலங்கைத் தீவு முழுவதிலும் சேகரிப்பதற்கான ஆணைக்குழுக்கள் முதலில் உருவாக்கப்பட்டன. இதன்பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு செயற்பட்டது.

எனினும், கடந்த காலங்களில் இலங்கை ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட இவ்வாறான ஆணைக்குழுக்களிடம் காணாமற் போனவர்களின் உறவினர்கள் தமது துன்பங்களைக் கூறிய போதிலும் எவ்வித பயனும் கிட்டவில்லை.

உள்நாட்டில் காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சில மாதங்கள் செயற்பட்ட போதிலும் இந்த ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் எந்தவொரு நீதியின் அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை.

ஆனால் பத்து நாட்கள் மட்டுமே இலங்கையில் தனது விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நா பணிக்குழுவானது வடக்கு கிழக்கில் மட்டுமன்றி, தென் இலங்கையிலும் காணாமற் போனோர் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பணிக்குழுவானது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற சில முக்கிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இவ்வாறான முறைப்பாடுகளைக் கூட காணாமற் போனோர் தொடர்பான உள்ளூர் ஆணைக்குழுக்கள் தமது கவனத்திற் கொண்டு சென்றிருக்கவில்லை.

போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு உள்ளூர் விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசாங்கம் உருவாக்குவதற்கான நகர்வை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்த்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது. கடந்த காலங்களில் காணாமற் போனோர் குடும்பங்களுக்கு நீதியை வழங்குவதில் உள்ளூர் ஆணைக்குழுக்கள் தவறியுள்ளதால் போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் இலங்கைத் தீவில் தங்கியிருந்த காணாமற் போகச் செய்யப்பட்டோருக்கான ஐ.நா பணிக்குழுவின் வல்லுனர்கள் பத்து நாட்களாகத் தமது விசாரணைகளை மேற்கொண்டனர். இது உண்மையில் இலங்கைத் தீவு மீதான பல்வேறு மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஓர் ஆரம்ப கட்டமாக நோக்கப்படுகிறது.

சுயாதீனமாக இயங்கும் அனைத்துலக அமைப்பான ஐ.நா பணிக்குழு இலங்கையின் தற்போதைய அரசாங்கமானது அனைத்துலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவதானது வரவேற்கப்படத்தக்கது எனவும் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமானது தனது வாக்குறுதிகளை உறுதியாகவும், முழுமையாகவும், சட்டரீதியாகவும், பங்களிப்புடனும் மேற்கொள்ள வேண்டிய சவாலைக் கொண்டுள்ளதாக பணிக்குழுவின் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உண்மை, நீதி, உறுதிப்பாடு போன்றவற்றை வழங்குவதை உறுதிப்படுத்தக் கூடிய பொறிமுறையை இலங்கை அரசாங்கம் கைக்கொள்ள வேண்டும் எனவும் இந்தப் பணிக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் மீளிணக்கப்பாட்டை உருவாக்கிக் கொள்வதற்கு இது மிகவும் அவசியமானது எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்காதவிடத்து மீளிணக்கப்பாட்டை உருவாக்க முடியாது எனவும் ஐ.நா பணிக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

குறுகிய நாட்கள் மட்டுமே இலங்கையில் தங்கியிருந்த போதிலும், நாட்டில் ஆரோக்கியமான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு உண்மை மற்றும் நீதி போன்றன மிகவும் இன்றியமையாதவை என்பதற்கான ஒரு சாட்சியமாகவே ஐ.நா பணிக்குழுவின் இப்பயணம் அமைந்துள்ளது.

இப்பணிக்குழு இரகசியத் தடுப்பு முகாம்களுக்கும் நேரடியாகச் சென்று சாட்சியங்களைச் சேகரித்துள்ளது. இவ்வாறான சில ஆரம்பகட்ட அவதானிப்புகளுக்கு அப்பால், அடுத்த ஆண்டு ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது இலங்கை சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கை தொடர்பான விபரங்களை ஐ.நா பணிக்குழுவின் வல்லுனர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, இலங்கை அரசாங்கமானது போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக எவ்வித பார பட்சமுமின்றி விசாரணையை மேற்கொள்வதன் மூலம் தனது பணியை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]