மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி

அகவை 66 இல் கால் பதிக்கும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி

இலங்கையின் நாலாபுறமும் சர்வதேச ரீதியிலும் புகழ்ந்து பேசப்படுகின்ற, இலங்கை முஸ்லிம்களின் தேசிய சொத்து என வர்ணிக்கப்படுகின்ற, இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவருகின்ற ஒரு பாடசாலையாக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி இன்று திகழ்கின்றது.

கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவுமிருந்த மர்ஹும் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர் அவர்களின் வேண்டுகேளின் பேரில் அப்போதைய கல்வியமைச்சர் திரு. நுகவெல அவர்களால் கேட் முதலியார் எம். எஸ். காரியப்பர் வழங்கிய அவரது சொந்தக் காணியில் 16.11.1949ஆம் ஆண்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

மர்ஹும் எம்.ஐ.எம்.ஏ. காதர் அவர்களை முதல் அதிபராகவும் மர்ஹும் எம். எம். இப்றாஹிம் அவர்களை முதல் ஆசிரியராகவும் கொண்டு 4 மாணவர்களுடன் சாய்ந்தமருது சிரேஷ்ட பாடசாலை என்ற பெயரில் ஓலைக் கொட்டில் ஒன்றில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

முதல் அதிபராக 16.11.1949இல் கடமையேற்ற மர்ஹும் எம்.ஐ.எம்.ஏ. காதர் 23.07.1950 வரை அதிபராக கடமை யாற்றினார். இதன் பின்னர் 24.07.1950 முதல் 06.08.1950 வரை மர்ஹும் எம். எம். இப்றாஹிம் அதிபராக கடமையாற்றினார். அதன் பின்னர் 07.08.1950 முதல் 31.12.1950 வரையும் திரு ஆர். பொன்னப்பா அதிபராக இருந்தார்.

ஓலைக் கொட்டிலுடன் இயங்கிய இப்பாடசாலை 1956ஆம் ஆண்டு முதல் நிரந்தர கட்டிடமான ஒரு விஞ்ஞான ஆய்வுகூடமும் வர்த்தக மண்டபம் என அழைக்கப்படும் வகுப்பறை கட்டிடமும் அமைக்கப்பட்டன. இது 01.01.1951 முதல் 1956 வரையிலான காலப்பகுதியில் அதிபராக இருந்த மர்ஹும் எம்.ஐ.எம். மீராலெவ்வை அவர்களின் காலப்பகுதியாகும்.

மர்ஹும் கே. எம். அபுபக்கர் அவர்கள் அதிபராக இருந்தபோது மாணவர் விடுதி அமைக்கப்பட்டு க.பொ.த உயர்தல வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டன. இவரது அயாராத உழைப்பின் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல ஆரம்பித்தனர். இவரைத் தொடர்ந்து எஸ். எச். எம். ஜெமீல் தலைமையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. இக்கல்லூரி இதன் பின்னர் தேசிய ரீதியில் புகழ்பூத்த கல்லூரியாக மாற்றம் பெற்றது. மர்ஹும் எஸ். எச். எம். ஜெமீல் அதிபராக இரு தடவைகள் பதவி வகித்த காலத்தில் கல்வி, கட்டொழுங்கு, நிருவாக ஒழுங்க மைப்பு என பல்வேறு துறைகளிலும் இக்கல்லூரி உயர்ந்து காணப்பட்டது.

1973ஆம் ஆண்டு அப்போதைய கல்வியமைச்சர் மர்ஹும் காயதே மில்லத் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் தலைமையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ்த்தின விழா இக்கல்லூரிக்கு பெரும் மகுடத்தைச் சூட்டியது. இதன் போதுதான் கல்லூரியின் திறந்த வெளியரங்கு அமைக்கப்பட்டது. இதற்கும் அதிபர் கே.எல். அபுபக்கர்லெவ்வை காரணகர்த்தாவாக அமைந்திருந்தார்.

தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்த இக்கல்லூரி 1978ஆம் ஆண்டில் வீசிய பாரிய சூறாவளியினால் பெளதீக வளங்களும், ஆவணங்களும் அழிக்கப்பட்டிருந்தன. எனினும் அப்போதைய அதிபர் எஸ். எச். எம். ஜெமீல் அவர்களும் அவரது பிரதி அதிபர்களும் மற்றும் ஆசிரியர் குழாமும் அயராது பாடுபட்டு இக்கல்லூயை பழைய நிலைக்கு கொண்டுவர உதவினார். மர்ஹும் எஸ். எச். எம். ஜெமீல் அவர்கள் இரண்டாவது தடவை கல்லூரியைப் பொறுப்பேற்ற பின்னர் 1975ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்தில் இங்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், என்பன புனரமைக்கப்பட்டு, கல்லூரி வளர்ச்சியில் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பங்களிப்புச் செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டது.

05.013.1971 ஆம் ஆண்டு பெண்களுக்காக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்படும் முன்னர் கலவன் பாடசாலையாகவிருந்த இக்கல்லூரி பின்னர் ஆண்கள் பாடசாலையாக தோற்றம் பெற்றது. இக்கல்லூரி வளர்ச்சியில் இப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அரசியல்வாதிகளின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது. 66ஆவது அகவையில் காலடியெடுத்து வைத்த கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூயின் ஸ்தாபகர் தினம் கல்லூரியின் பிரதி அதிபர் எம். எஸ். முஹம்மட தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்லூரியின் ஸ்தாபகர் கேட் முதலியார் மர்ஹும் எம். எஸ். காரியப்பர் அவர்களின் பேரன் டாக்டர் அர்ஸத் காரியப்பர், கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்டொன்றினை நாட்டி வைப்பதனையும் கல்லூரியின் உதவி அதிபர்களான ஏ. பி. முஜீன், எம். எச். எம். அபுபக்கர், எம்.எஸ். அலிகான், எம்.ஐ.எம். அஸ்மின், அன்வர் அலி, பகுதித்தலைவர் ஏ. ஆர். எம். யுசுப் ஆகியோர் அருகில் நிற்பதனையும் படங்களில் காணலாம்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]