மன்மத வருடம் கார்த்திகை மாதம் 06ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ஸபர் பிறை 09
SUNDAY November 22 2015

Print

 
பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

பிரபல பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் (95) உடல் நலக்குறைவால் சென் னையில் 17.11.2015 காலமனார். பாலசுப்பிரமணியம் என்ற இயற் பெயருடன் கோவையில் 1920ம் ஆண்டு பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார்.

தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி யளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உட்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசைமைத் துள்ளார். அவர் பாடிய ‘அலைபாயுதே கண்ணா’ மற்றும் ‘தெய்வம்’ திரைப் படத்தில் வரும் ‘நாடறியும் நூறு மலை’ பாடல்கள் மிகவும் பிரபல மானவை.

சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய ‘அடேய் நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய் என்று வேடிக்கையான கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது. முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளியை இவர் சேர்த்துக்கொண்டார். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார்.

இந்தியாவில் வெள்ளை யருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர் மீது 1936ம் ஆண்டு பொலிஸார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங் கினார். தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவிசரோஜா என்பவரை தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆகினர்.

தென்னாப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்திய பித்துக்குளி முருகதாஸ் தியாகராஜர் விருது, தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை பெற்றுள்ளார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப் பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17.11.2015 சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]