மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
உண்மைகள் ஒருநாள் வெளிவரும்

உண்மைகள் ஒருநாள் வெளிவரும்

இப்போது அவை ஒவ்வொன்றாக

வெளிவந்து கொண்டிருக்கின்றன

இலங்கையில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை இப்போது சரிவரப் பயன்படுத்திக் கொள்வது தமிழ்த் தலைமைகளின் முன்னாலுள்ள பாரிய பொறுப்பும் கடமையும் ஆகும் இதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் தமக்கிடையே இருந்துவரும் சகல விதமான அரசியல், கட்சி மற்றும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக ஒரே குரலில் தமது மக்களுக்கான பிரச்சினையைச் சர்வதேசத்தின் முன் வெளிப்படுத்த ஒன்றுபட்டு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் தினகரன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்களை இங்கே தருகின்றோம்.

நீங்கள் தெரிவிக்கும் இவ்விடயம் சாத்தியமாகும் என நீங்கள் நினைக்கிaர்களா?

சாத்தியமாகும் என எண்ணி நாம் செயற்பட ஆரம்பிக்க வேண்டும். உண்மையில் இது எமது கட்சியின் ஒரு அழைப்பே தவிரவும் இதனை தமிழ் ஊடகங்களின் பிரதானிகள், தமிழ் புத்திஜீவிகள், சமய மற்றும் சமூகத் தலைவர்கள் இணைந்தே மேற்கொள்ள வேண்டும்.

சாத்தியமாகுமா எனக் கேட்டது ஏனெனில் கடந்த காலங்களில் இது போன்ற எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவுமே சாத்தியமாகவில்லையே?

அப்படிக் கூறிவிட முடியாது. முன்னர் இது போன்றதொரு தேவையேற்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழ் போரம் என்ற அமைப்பை பல தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்து ஒற்றுமையாக நடத்தின. ஆரம்பத்தில் அதில் சேராதிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிற்காலத்தில் அதில் இணைந்து கொண்டது. பின்னர் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அநேகமான கட்சிகள் பிரிந்து சென்றுவிட்டன.

இது போன்று இதுவும் அமைந்துவிடுமோ என்பதே எமது சந்தேகம்?

இல்லை அன்றைய நிலை வேறு, இன்றைய நிலை வேறு. எமது மக்களுக்காக எம்மையே நம்பியிருக்கும் எமது தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் பல இன்னல்களைச் சந்தித்து நொந்து போயிருக்கும் எமது இனத்திற்காக என எண்ணி உண்மையான இதய சுத்தியுடன் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாது செயற்பட அனைவரும் முன் வந்தால் இது நிச்சயம் வெற்றியளிக்கும். அதிலும் குறிப்பாக இந்த அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் அதன் ஆரம்ப காலத்திலேயே எமது அலுவலை நாம் செய்துவிட வேண்டும். காலந்தாழ்த்தினால் ஆறிய கஞ்சி பழங் கஞ்சி ஆன கதையாகிவிடும்.

உங்களது இந்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளும் என நீங்கள் நினைக்கிaர்களா?

இப்படியொரு கேள்வி எவர் மனதிலும் இனி எழக் கூடாது என நான் விரும்புகிறேன். இது எமது அழைப்பு அல்லது எமது கட்சியின் அழைப்பு என்பதைவிடவும் பொதுவானதொரு அழைப்பாக எண்ண வேண்டும். தமிழ் மக்களது எ திர்கால நலன்சார் சம்பந்தப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனைத் தமிழ் ஊடகங்கள் தமது அழைப்பாக வெளியிட வேண்டும். இதனைக் கட்சி, அரசியல் பேதமின்றிச் சலகரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதில் நான் பெரியவன், நீ சிறியவன் அல்லது எனக்கு முன்னுரிமை, உனக்கு இடமில்லை என்ற கதையே இருக்கக் கூடாது. இது முற்று முழுதாக தமிழ் மக்களது நலன்சார் விடயமாக இருக்க வேண்டுமே தவிர எக்கட்சியும் இதில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டாது.

இதற்காக ஏதாவது ஆரம்பக்கட்ட நடவடிக்கையை எடுத்துள்Zர்களா?

ஆம், அதன் முதற்கட்டமாகவே நாட்டிலுள்ள பிரதான தமிழ் ஊடகங்களிடம் இந்த முயற்சிக்கு உயிரோட்டம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அடுத்த கட்டமாக தமிழ்ப் புத்திஜீவிகளை ஒன்றிணைப்போம். அதன் பின்னர் சமய மற்றும் சமூகத் தலைவர்களைச் சந்திப்போம். இறுதியாக அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே அணியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி காண்போம்.

இவ்விடயத்தில் தமிழ் ஊடகங்களின் பங்களிப்பு எனத் தாங்கள் கருதுவது என்ன?

உண்மையில் தமிழர் அரசியலில் பிரதான தமிழ் ஊடகங்கள் மிகவும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. பிரதான தமிழ் ஊடகங்களை தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் நோக்குகிறார்கள். அதே போன்று இந்தப் பிரதான தமிழ் ஊடகங்கள் தான் தமிழ் அரசியல் வாதிகளையும் சரியான வழியில் இயக்கு கின்றன என்று கூறினாலும் தவறில்லை. அந்தளவிற்குத் தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல்வாதிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. எத்தனை ஊடகங்கள், சமூக வலைத் தளங்கள் வந்தாலும் எமது நாட்டிலுள்ள பழம்பெரும் பிரதான தமிழ் ஊடகங்கள் தான் தமிழ் அரசியல்வாதிகளிடையேயும், தமிழ் மக்களிடையேயும் மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன. பழம்பெரும் பிரதான தமிழ் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் இந்தத் தமிழ் ஊடகங்களின் பிரதானிகளை நான் நேரடியாகச் சந்தித்து அவர்களது ஆதரவையும் கோரியுள்ளேன். நீங்கள் உட்பட மூத்த ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும். சமூக நலன் கருதி தமிழ் ஊடகங்கள் இதனை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை காலமும் தமிழ்க் கட்சிகள் ஒன்றையொன்று நேரடியாக அல்லது மறைமுகமாக வசைபாடி வந்த வரலாற்றையே நாம் கண்டிருக்கிறோம். விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வரலாறு முதல் இன்றுவரை ஒற்றுமையாகச் சேர்ந்து எதனையும் செய்ததாக அறிய முடியாதுள்ளது. இந்நிலையில் இது எப்படிச் சாத்தியமாகும்.

தங்களது நம்பிக்கையைச் சிதறடிக்கவோ அல்லது மலினப்படுத்தவோ இதனைக் கேட்கவில்லை. இவ்விடயம் வெற்றிபெற உறுதியான அடித்தளம் இடப்பட வேண்டும் என்பதற்காகவே இதனை மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நீங்கள் கூறுவதில் தவறில்லை. ஆனால் இன்னமும் எத்தனை காலத்திற்கு இப்படியே ஒருவரையொருவர் வசை பாடிக் கொண்டும் போட்டுக் கொடுத்துக் கொண்டும் இருக்கப் போகிறோம்.

இதனால் இந்த முப்பது முப்பத்தைந்து வருட காலத்தில் நாம் கண்டது என்ன? முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பட்ட துன்பம் போதும். இனியும் மக்களை வைத்து வதைத்து அரசியல் நடத்தக் கூடாது. உண்மையாகச் செயற்பட்டு அம்மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்கான அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதனைத் தவறவிட்டால் இது போன்ற சந்தர்ப்பம் கிடைக்குமெனக் கூற முடியாது.

ஏன் முன்னர் இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லையா? திம்புப் பேச்சுவார்த்தை, இலங்கை - இந்திய உடன்படிக்கை, சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதி, பிரதமர் ரணிலின் சமாதானப் பேச்சுவார்த்தை, மஹிந்த அரசின் சமாதான முயற்சி எனப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தனவே?

உண்மைதான். இவை எல்லாவற்றையும்விட இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பமானது தமிழ் மக்களுக்குச் சாதகமானதொரு நல்ல சந்தர்ப்பம் என்றே கூற வேண்டும். முழு உலக நாடுகளினதும் கவனமும் எமது நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் உள்ளது. தமிழ் மக்களுக்கு நியாயமானதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் உலகின் முக்கிய வல்லரசு நாடுகள் குறியாக உள்ளன. அதனால் அரசாங்கம் அனைவரும் ஏற்றுக் கொலள்ளக் கூடியதொரு தீர்வை வழங்கியே ஆக வேண்டும் எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு தமிழ் மக்கள் மீது மனித உரிமைகளை மீறியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனும் தமிழ் மக்கள் பலரது வேண்டுதலும் நிறைவேற இதுவே நல்ல சந்தர்ப்பம்.

உண்மையில் நீங்கள் கூறிய சந்தர்ப்பங்களின் ஒன்றான திம்புப் பேச்சுவார்த் தையில் தமிழ்த் தரப்பு விரும்பிப் பங்கேற்கவில்லை. நாம் ஆயுதப் போராட்டம் தான் தீர்வுக்கு வழி என முடிவெடுத்த பின்பே அந்த பேச்சுவாரத்தையில் பொய்யாகப் பங்கேற்றிருந் தோம். அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத வைகளையே எமது கோரிக்கைகளாக முன் வைத்து அது குழம்பக் காரணமாக இருந்தோம். ஆனால் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாக இருந்தது. எமது தமிழ்த் தலைமைகள் அதனைச் சரியாகப் பயன்படுத்த வில்லை. அதேபோன்று சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியையும் நாம் தவறவிட்டோம்.

தமிழ்த் தலைமைகள் இவ்வாறு ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கோரிக்கை விடுத்தால் இந்த அரசாங்கம் அதற்குச் செவி சாய்க்கும் என நீங்கள் கருதுகிaர்களா?

நிச்சயமாக, ஏனெனில் இந்த அரசாங்கத்தை அமைத்ததில் தமிழ் மக்களுக்கு பெரும் பங்கு உள்ளது. அதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதில் பங்களிப்பு உள்ளது. அதனால் இது சாத்தியமாகும். உண்மையில் அவர்களே அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இவ்விடயத்தை முன்னின்று செய்ய வேண்டும். அவர்கள் இப்போது இந்த அரசாங்கத்துடன் இணக்க அரசியலை நடத்தி வருகிறார்கள். அதனால் அரசாங்கத்துடன் உரிமையுடன் கலந்துரையாடிப் பல விடயங்களைச் செய்யலாம். அத்துடன் எமக்குச் சர்வதேசத்தின் ஆதரவும் உள்ளதால் இது நிச்சயம் சாத்தியமாகும்.

எது எவ்வாறு இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தங்கள் மீதும் தங்களது கட்சி மீதும் ஒருவிதமான எதிர்ப்பு அல்லது மனக் கசப்பு உள்ளது. அதே போலவே தங்களுக்கும் அவர்கள் மீது உள்ளது. இதனை இருதரப்பும் விடும் அறிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் உங்கள் இரு தரப்பிற்குமிடையில் முதலில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டிள்ளதே?

நான் எச்சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மோசமாக விமர்சித்தது கிடையாது. அவர்களில் சிலர் தெரிவிக்கும் அவதூறான அறிக்கைகளுக்கு மட்டுமே நான் பதிலளிப்பது உண்டு. இப்போது அதனைக் கூட நான் எனது தரப்பிலிருந்து முடிந்தளவு நிறுத்தியுள்ளேன். இனியும் எதிர்ப்பு மற்றும் விதண்டாவாத அரசியலை அவர்கள் நடத்த மாட்டார்கள். அவர்கள் எமது கட்சியின் கொள்கையான இணக்க அரசியலுக்குள் வந்து விட்டார்கள். அதனால் இப்போது எமது கருத்துக்களுக்கும் செவி சாய்ப்பர் என நம்புகின்றோம். இனி எமது இரு தரப்பிற்குமிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட நியாயமில்லை. அதனால் எவருக்கும் எமக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பத் தேவையில்லை. நாம் அனைவரும் இணைந்து செயற்படும் வழியைக் கண்டறிந்து அதனைப் பலப்படுத்துவது எப்படி என்றே ஆராய வேண்டும்.

தங்களது கட்சி மீதும் சில சந்தர்ப்பங்களில் தங்கள் மீதும் நேரடியாகவே பல கொலைக் குற்றச்சாட்டுக்கள் பாராளுமன்றத்திலும் வெளியேயும் சுமத்தப்பட்டன. இன்றும்கூட அப்படிக் கூறுபவர்கள் இருக்கிறார்கள். இது குறித்து குறித்து நீங்கள் என்ன கூறிகிaர்கள்?

முன்னர் ஏதாவது அரசியல் கொலைகள் நடந்து விட்டால் ஒன்று புலிகளைச் சாடுவது இல்லாவிடின் எமது கட்சியைச் சாடுவது சில அரசியல்வாதிகளது முழு நேர அரசியலாக இருந்தது. புலிகளுக்கு எதிரானவர்கள் கொல்லப்பட்டால் புலிகள் மீது பழி போடுவார்கள். புலிகளுக்குச் சார்பானவர்கள் கொலையானால் நேரடியாக எம்மை நோக்கியே கையை நீட்டுவார்கள். இது எமக்குப் பழகிப் போயிருந்தது. ஆனால் எமது கட்சியோ நானோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு கொலையையுயம் செய்தது கிடையாது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ், மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரது கொலைகளுக்கு என்னையும், எனது கட்சியையும் குற்றம் சாட்டிய அதே அரசியல்வாதிகள் இன்று அமைச்சரவையில் இருந்து கொண்டு கடற்படையினரே அக்கொலைகளுக்காக காரணம் எனக் கூறுகிறார்கள்.

அதுவே உண்மை. எனவே, உண்மைகள் ஒருநாள் வெளிவரும். அது இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டார் எனக் கருணா அம்மான் கூறியிருக்கிறார். அவர் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு கொலை செய்யப்பட்டார் என மேலும் சில ஊடகங்கள் கூறுகின்றன. இதில் உண்மை எதுவெனத் தங்களுக்குத் தெரியுமா?

ஐயோ, எனக்கு இது பற்றி எதுவும் தெரியாது. முன்னர் நான் கூறிய கருத்துக்களும் கூறாத கருத்துக்களும் பலவிதமாகத் திரிபுபடுத்தி வெளிவந்து பல கோணங்களில் செய்திகள் என்னைச் சிக்கலில் தள்ளியது. அவர் இறந்து விட்டார் என்பதை ஓரளவு உறுதியாகக் கூற முடியும். கருணா அம்மானின் கருத்து அவரது கருத்து. அது பற்றி அவரிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நீங்கள் செல்லவில்லையா?

இல்லை. நான் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன். அத்துடன் கொழும்பில் அலுவல் இருந்தமையால் அங்கு செல்ல முடியவில்லை. விழா நடந்து முடிந்துவிட்டது. நான் எனது வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவித்திருந்தேன்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]