புத் 67 இல. 39

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 13

SUNDAY SEPTEMBER 27 2015

 

 
இறம்பொடை மண் சரிவு அனர்த்தம்: உயிரிழப்பு 07 ஆக அதிகரிப்பு

இறம்பொடை மண் சரிவு அனர்த்தம்: உயிரிழப்பு 07 ஆக அதிகரிப்பு

96 குடும்பங்கள் முகாமில் தஞ்சம்

கொத்மலை இறம்பொடை வெதமுல்ல கயிறு கட்டி தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற் பட்ட பாரிய மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 25.09.2015 அன்று வெள்ளிக் கிழமை மாலை 2.00 மணியளவில் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட இறம்பொடை வெதமுல்லை பிரிவைச் சேர்ந்த கயிறுகட்டி (லிலிஸ் லேன் தோட்டம்) தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் இதுவரையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 6 பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் முறையே லோகநாயகி வயது (48), காந்திமதி வயது (23), ரூபிணி வயது (2) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் லெச்சுமி வயது (67), புவனா வயது (6) மற்ற குடும்பத்தை சேர்ந்த சயானி வயது (9), அனோஜ் வயது (4) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் நேற்று (26.09.2015) காலை 9.45 மணியளவில் கடைசி சடலமாக ரூபிணி வயது (2) சடலம் இராணுவத்தினர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டது. அத்துடன் மீட்பு பணிகள் நிறைவடைந் துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அனைத்தும் கொத்மலை அரச மருத்துவ மனையின் பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லையா கணேசன் என்பவர் மிகவும் மோசமான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த தினம் மாலை 2.00 மணியளவில் இந்த பகுதியில் பாரிய இடியுடன் கூடிய மின்னல் ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக மழை பெய்துள்ளது. மின்னல் தாக்கிய சில நொடிகளில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்ட சமயம் கறுப்பு நிறத்துடன் நீர் வெளியேறியுள்ளது. சரியாக 15 நிமிடங்களில் அனைத்தும் நிகழ்ந்துள்ளன.

இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். வீட்டிற்குள் இருந்த சிறுவர்கள் இருவரும் இன்னும் சிலரும் மண்ணில் புதையுண்டனர். செய்வதறியாது திகைத்து நின்றவர்கள், உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த தொழிலாளர்களின் உதவியுடன் குறித்த புதையுண்ட பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது 6 சடலங்கள் அன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளன.

அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் இராணுவத்தினரும் மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அங்கு வருகை தந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு 11.00 மணிவரை இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பொழுதும் கடைசியாக சிறுமியின் சடலத்தை மீட்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் இடைநிறுத்தப் பட்டு நேற்றுக் காலை (26.09.2015) மீட்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தற்பொழுது ரம்பொடை தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குறித்த பகுதியைச் சேர்ந்த 96 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதிக்கு நேற்று புவிச் சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் வருகை தரவுள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலாளர் கே. எஸ். பி. சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.