மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
சர்வதேச சிறுவர் தினம் -ஒக்.01

சர்வதேச சிறுவர் தினம் -ஒக்.01

“நாங்கள் எங்களுடைய சிறுவர்களை பொக்கிஷங்களாக பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதேயாகும்.

இன்றைய உலகம் எதிர்நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சி னைகளுள் ஒன்றாக சிறுவர் மீதான துஷ்பிரயோகம் விளங்குகின்றது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற விடயம் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம் முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருப்பினும் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் அது பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது.

சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப்படுகின்றனர். அத்தோடு அவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப்படுவதனாலேயே அவர்களின் உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன. இவ்வாறான உரிமை மீறல்கள், துஷ்பிரயேகங்களில் இருந்தும் சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள் காலத்துக்குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன.
1989இல் ஐ.நா சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றிய கொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண்டுள்ளது. மேலும் ஐ.நாசபையானது 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத்துள்ளது. சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.

ஆனால் இன்றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை சிறுவர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.
குறிப்பாக உலகில் உள்ள அனைத்து சிறுவர்களும் இவற்றுள் ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தே வருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்படினும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர் துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்றவற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேற்படி அனைத்து நிறுவனங்களினதும் சேவைகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர் தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். மேலும் சிறுவர் தினம் சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகும்.
உலக சிறுவர் தின நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பா ணத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை யாழ். அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருவதாகவும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ் வரன் தெரிவித்துள்ளார்.

அழகு தரும் பூக்கள்

மண்ணில் மலர்ந்த பூக்கள் - அவை
மனதுக் கினிய பூக்கள்
எண்ணி லாத வண்ணங்களில்
கண்ணைக் கவரும் பூக்கள்

காற்றில் அசையும் பூக்கள் - பல
கதைகள் சொல்லும் பூக்கள்
சேற்றில் கூட மலர்ந்தாலும்
செழுமையான பூக்கள்

சிரிக்கும் நல்ல பூக்கள் - அவை
பறிக்கும் போதும் சிரிக்கும்
விரிந்து மலர்ந்து அசைந்த வண்ணம்
செறிந்த தேனைச் சுரக்கும்

குழலில் சூடும் பூக்கள் - வண்ண
மாலை கோக்கும் பூக்கள்
உலக மெங்கும் மணம் பரப்பி
அழகு தரும் பூக்கள்

உ. நிசார்
 

நீர்ப்பாசனத் துறையில் சாதனைகளை
படைத்த ஆட்சியாளர்கள்

பண்டு காபயன் கி.மு. 377-307 அபய வாவி
தேவ நம்பியதிஸ்ஸ கி.மு 247-207 திஸ்ஸ வாவி
வசபன் கி.மு. 67-111 எலஹர கால்வாய்
மகா சேனன் கி.பி 274-301 மின்னேரியா குளம்
உப திஸ்ஸ கி.பி 365-406 தோப்பா வாவி
தாது சேனன் கி.பி 455-473 கலா வாவி
2ஆம் முகலன் கி.பி 535-555 பதவியா குளம்
1ஆம் அக்போ கி.பி 571-604 மாமடுவக் குளம்
2ஆம் அக்போ கி.பி 604-641 கந்தளாய் குளம்
1ஆம் பராக்கிரம பாகு கி.பி 1153-1186 பராக்கிரம சமுத்திரம்

ஏ. ஆர். எப். ரஸ்மினா,
ஆண்டு - 06தி,



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]