புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
அம்மா அடித்த அடிகள் அப்போது வலித்தாலும் இப்போது அவையாவும் சுகமான அனுபவங்கள்

அம்மா அடித்த அடிகள் அப்போது வலித்தாலும் இப்போது அவையாவும் சுகமான அனுபவங்கள்

ஹமீதுடன் அந்தக்கால நினைவுகள்

முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிப்புலக மாமேதையைச் சந்தித்த முதல் இரு தினங்களிலேயே அவர் தன்நெஞ்சார நேசிக்கும் ஒரு நண்பனாகும் பாக்கியம் பெற்றேன். அவர் என்னை எனது ரசிகர் என்று பகிரங்கமாய் வானொலியில் சொன்னதால், தொழில் ரீதியாக பலரது எரிச்சல், பொறாமைகளுக்கு நான் பலியானாலும், மறுபுறம் ‘பைலட் பிரேம்நாத்’ படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில், எனக்குப் பெரும் மதிப்பும் சர்வசுதந்திரமும் கிடைத்தது. ஒரு நாள், நடிகர் திலகம் தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க ரண்முத்து ஹோட்டலின் 3ஆம் மாடியில் கடற்கரைப் பக்கமகாக அமைந்துள்ள டெரஸ் எனப்படும் திறந்த வெளித்தளத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

வேடிக்கை பார்க்கச் சென்றிருந்த என்னுடன் அன்றைய இளம் நடிகை ஸ்ரீதேவி பேசிக் கொண்டிருந்தார். மொட்டை மாடியிலிருந்து இயக்குநர் திருலோகச்சந்தர் கெமரா கோணத்தைச் சரி பார்த்துக் கொண்டிருக்க நேரமும் ஓடிக்கொண்டிருந்தது.

நானும் ஸ்ரீதேவியும் கடற்கரைப்பக்கமாக அமைந்த கட்டைச்சுவரில் சாய்ந்து கடலலைகளைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் ஏதோ சந்தடி கேட்டுத் திரும்பிப்பார்த்தால் புகைப்படக் கலை நிபுணர் ஸ்டில்ஸ் சாரதி ஒரு ட்ரைபொட்டில் தன் கெமராவைப் பொருத்தி எங்கள் இருவரையும் படமெடுக்க ஆயத்தமாகவும் அருகில் நடிகர் திலகம் கெமரா கோணத்தைச் சரிபார்த்துக் கொண்டும் இருப்பதையும் கண்டு திகைத்துவிட்டோம்.

நாம் திரும்பியதும், நடிகர் திலகம் ‘ஐய்யயோ திரும்பிட்டாங்களே... திரும்பிட்டாங்களே... அருமையான இந்தக் காதல் காட்சி¨ப் படம்பிடித்து ஹமீத்தோட பொண்டாட்டிக்கு காட்டி ஒரு கலாட்டா பண்ணலாம்னு இருந்தேனே...’ என்று ஒரு குழந்தையைப் போல குதிக்க ஆரம்பித்தார். எத்தனை பெரிய கலைமேதை. அவருக்குள்ளும் ஒரு குறும்புக்காரக் குழந்தை மனம் இருப்பதைக் கண்டு வியந்தேன்.

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அப்படியொரு படத்தை விட உங்களோடு சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியதும் அன்போடு என் தோளில் கைபோட்டு அரவணைத்தபடி போஸ் கொடுத்தார். அப்படத்தை என் மனைவிக்கும் காட்டி நடந்ததைச் சொல்லி சிரித்து மகிழ்ந்தோம் என்று தமது ஃப்ளாஷ்பேக் அனுபவங்களை ஹமீத் சொல்லத் தொடங்கினார்.

என் குடும்பத்தில் நான்தான் கடைக்குட்டி, அதனால் அம்மாவிடம் அதிகம் பால்குடிக்கும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. அம்மாவை எப்போதும் நான் பிரிந்திருப்பதில்லை. அரிவரி தொடங்கியதும் தான் அந்த இரண்டுமணி நேரப் பிரிவு வந்தது. தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாவது தினத்தன்று நான் பிரவேசம் செய்தது இன்றும் என் ஞாபகத்தில் இருக்கிறது. அம்மாவை முதல் தடவையாக நான் பிரிந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்கு அழுகை அழுகையாக வந்தது.

எப்படியோ அங்கிருந்த ஆசிரியருக்கு போக்கு காட்டிவிட்டு ஓடி வந்து விட்டேன். வீட்டுக்கு வந்த என்னை அம்மா தடியை ஒடித்து அடித்தார். அது ஒரு பசுமையான நினைவு. அந்தப் பள்ளியில் எனக்கு அகரம் தொடக்கியவர். ஆ. பொன்னுத்துரை. இவர் தினகரன் பத்திரிகையில் ஏராளமான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

பிறகு கனகசபை ஆசிரியர் என்னை சாரணர் இயக்கத்தில் சேர்த்து அதன் சாரணர் கீதத்தை பாட வானொலி நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். எனக்கு அதுதான் வானொலி நிலையம் என்று தெரியாது. அந்த அறையில் ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்துப் பாடினோம். அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்களை எனக்கு யாரென்று தெரியாது. பிறகு நான் வளர்ந்து வாலிபனான போதுதான் அவர்களை நான் அடையாளங் கண்டேன். அவர்கள் எம். கே. ரொக்சாமி, சகோதரர்கள் என்பது தெரியவந்தது.

எனது பள்ளி வாழ்க்கையில் ஆ. பொன்னுத்துரை மறக்க முடியாத ஒருவர். அம்மாவைவிட்டு நான் பிரிந்திருக்கும் அந்த இரண்டு மணித்தியாலங்களில் அவரின் அன்பும், அரவணைப்பும்தான் எனக்கு ஒரே ஆறுதல். அது தவிர எனக்குள் கலையார்வத்தை விதைத்தவரும் அவர்தான். பாடசாலை கலை விழாக்களில் என்னை மேடையேறி நடிக்க செய்தவரும் அவர்தான். முதன்முதலாக நான் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றச் சென்ற போது என்னுடன் பள்ளித்தோழர் யோசப் எட்வட் வந்தார். அதே போல் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒருவர்தான் அதிபர் பண்டிதர் சிவலிங்கம்.

நான் வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதை பெருமையாக பாடசாலையில சொல்லிவந்தார். மிகவும் கண்டிப்பானவர்தான். ஆனால் என்னிடத்தில் நிறையவே அன்பு காட்டினார். எனக்குள் இலக்கிய அறிவை விதைத்தவரும் அவர்தான். பண்டிதர் சிவலிங்கம், ஆ. பொன்னுத்தரை ஆகியோர் எனக்குள் விதைத்த தமிழறிவுதான் எனக்கு இன்று சோறு போடுகிறது என்று தமது வளர்ச்சிக்கு உந்துசத்தியாக விளங்கிய பள்ளிவாழ்க்கையை பற்றி விபரிக்கும் அறிவிப்பாளர், அரிவரி முதல் உயர்தரம் வரை தம்மோடு படித்த கே. சந்திரசேகரனைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

சந்திரசேகரன் எம்.ஜி.ஆர். கட்சி. நான் சிவாஜி கட்சி. இப்படி எமக்குள்ளேயே ஒரு அணியை உருவாக்கிக் கொண்டு காரசாரமாக விவாதிப்§¡ம். ஒரு முறை நான் அடித்த அடியால் அவர் மூர்ச்சையாகி போனார். ஆனாலும் எமது சகோதர வாஞ்சை எம்மை பிரித்துவிட முடியாதபடி பாச கயிறு போட்டு கட்டியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு முறை நானும் சந்திரசேகரனும் பள்ளிக் கலைவிழா நாடகங்களையும் தாண்டித் திரைப்படத் தயாரிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என எங்களை நாங்களே சுயமாக வளர்த்துக் கொண்டதாக கற்பனைவானில் மிதந்த காலம். அபூர்வமாக ஒரு பெரியவரின் இரவல் கெமரா (சாதாரண ஸ்டில் கெமராதான்) கிடைத்தது பிலிம்ரோல் வாங்கக் காசு இல்லை.

தினந்தோறும் பள்ளி இடைவேளையில் சிற்றுண்டி வாங்கித்தின்ன அம்மா பல சிரமங்களுக்கு மத்தியில் கொடுக்கும் 25 சதக் குற்றிகளை பட்டினி கிடந்து சேமித்து படச்சுருள் வாங்கியதும், மகிழ்ச்சியான விடயம். கெமராவுக்கோ ஃபிளாஷ் இல்லை. எங்கள் வீட்டிலோ மின்சாரம் இல்லை. சேகரது அப்பா ரயில்வேயில் கடமையாற்றியதால் அவர்கள் வீட்டில் மின்வசதி இருந்தது. அவரது அப்பா வேலைக்குப் போக அம்மா சந்தைக்கு கறிகாய் வாங்கப் போன நேரம்பார்த்து அவரது வீடு சென்று ஒரு நாற்காலி வைத்து விட்டத்தில் இருந்து பல்பைக் கழற்றி ஒரு வயரை இணைத்து வெளிச்சம் பெற்றோம்.

இயல்பாகவே ஓவியத்திறமை பெற்றிருந்த சந்திரசேகரன் ஏதோசில பொடிகளையும், பவுடரும் கலந்து தனக்குத்தானே ஒப்பனை செய்து கொண்டார். முகத்தில் ஒரு வாள்வெட்டு, அப்பாவின் மழைக்கோட்டு, யாரோ கொடுத்த ஒரு தொப்பி, அடடா ஒரு பயங்கர தமிழ்ப்பட வில்லன் தயார். கதை? அதைப்பற்றி யார் கவலைப்பட்டார்!

அந்த ஒரே ஒரு பல்பு வெளிச்சத்தில் மாறி மாறி புகைப்படங்களை சுட்டுத் தள்ளினேன். பிறகு படச்சுருளை நாம் வாழும் பகுதியிலிருந்து சென்றல் ஸ்டூடியோவில் கழுவக் கொடுத்துவிட்டு, ஒருவாரம் நெஞ்சம் படபடக்க காத்திருந்தோம். படப்பிரதிகள் கிடைத்ததும் முதல் நாள் ரிலீமன் பெறுபேறு அறியக்காத்திருக்கும் தயாரிப்பாளர், இயக்குனர் போல் ஆவலுடன் பிரித்துப் பார்த்தோம். அதிர்ச்சிதான்! 12ல் ஒன்றே ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மங்கலாக இருட்டுக்குள் குருட்டாட்டமாகவே இருந்ததன. அந்த ஒரு படம் ஏதோ டென்கொமன்ட்மென்ஸ் தயாரித்து இயக்கியவரின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாக இருந்தது. 1963ல் நான் எடுத்த அந்த போட்டோவை இன்றும் என் நண்பர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார். உலக அறிவிப்பாளரின் சின்ன வயது குறும்பு பற்றி கேட்டோம்.

அது நான் செய்த ஒரு திருட்டு சம்பவம். என் மூத்த அண்ணனுக்கும் எனக்கும் ஒரு நான்கு ஆண்டுகள் தான் வித்தியாசம். ஒரு நாள் அவர் எங்கோ கால்வாயிலிருந்து ஒரு மீனைப் பிடித்து வந்து தண்ணீர் நிரப்பிய ஒரு போத்தலில் போட்டு அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். எனக்கும் அப்படியொரு மீனைப் பிடித்து போத்தலில் போட்டு அழகு பார்க்க வேண்டும் என்று ஆசை. அங்கும் இங்கும் தேடிப் பார்த்தேன். எனக்கு மீன் கிடைக்கவில்லை. பிறகு அண்ணன் இல்லாத நேரம் பார்த்து போத்தலில் இருந்து அந்த மீனைத் திருடி வீட்டிற்கு முன்னால் குழிதோண்டி அதில் தண்ணீர் ஊற்றி அதில் அந்த மீனை போட்டு வைத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் அண்ணன் வந்துவிட அவரிடம் “ஹாய் இதோ என் மீன்” என்று நான் குழியில் போட்டு வைத்திருந்த மீனைக் காட்டினேன் நிலைமையைப் புரிந்து கொண்ட அண்ணன் அம்மாவிடம் விசயத்தைக் கூற அம்மா என்னை அடித்தார்.

இப்படி என்னை அம்மா, அப்பா அடித்த அடி அப்போது வலித்தது. ஆனால் இன்று நினைத்துப் பார்த்தால் அது ஒரு சுகமான அனுபவம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த சுகத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. என்று பெருமூச்சு விடும் ஹமீதிடம் காதல் பற்றிக் கேட்டதும்.

“பள்ளியில் படிக்கும்போதே கலையில் அதிகம் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டேன். நான் நாடகங்களில் கட்டபொம்மன், ஜான்சிராணி, கர்ணன் வேடங்களில் சிறப்பாக நடித்ததினால் எனக்கு பாடசாலைகளில் கதாநாயகன் அந்தஸ்து வந்துவிட்டது.

அதனால் எனக்கு கொஞ்சம் திமிரும் கூடவர காதல் வலையில் நான் விழவில்லை. ஆனால் என் கல்யாணமே காதல் கல்யாணம்தான். ஆனால் அது காதல் என்று நீண்ட காலத்திற்கு பிறகுதான் எனக்கு தெரியவந்தது. இருவருக்கிடையில் இருந்த அந்த நேசம் ஒருவரை ஒருவர் விட்டு பிரியமுடியாத பந்தம் என்பது கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னேயே தெரியவந்தது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் எனது தீவிர ரசிகையே எனக்கு மனைவியானது. எமது திருமணம் கொம்பனி வீதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. திருமணத்திற்கு பைலா சக்கரவர்த்தி எம். எஸ். பெர்னாண்டோ உள்ளிட்ட பல கலைஞர்கள், நண்பர்கள் என்று நிறையப் பேர் வந்திருந்தனர். திருமணத்திற்கு எனக்கு எம். அஸ்வர்கான் சகோதரர்கள் இருவரும்தான் பக்கபலமாக இருந்து உதவினார்கள். திருமணத்தில் சம்பிரதாயங்களைப் பார்த்து திருமணத்தை சிறப்பாக நடத்தியது நண்பர் எம். ஜே. எம். அன்ஸாரின் குடும்பம்தான்.

முழுக்க முழுக்க என் திருமணத்தை ஏன் நண்பர்கள் இணைந்து நடாத்தி வைத்தார்கள். திருமணப் போட்டோவை அன்று பிரபலமாக விளங்கிய புகைப்படப்பிடிப்பாளர் மைக்கல் விக்டோரியா எடுத்தார்” என்று தமது திருமண நினைவுகளை மீட்டிய ஹமீதிடம் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் யார் யார் என்று கேட்டோம்.

“நிறையப் பேர் இருக்கிறார்கள். வானொலி அண்ணா வ.அ. ராசையா. எஸ். கே. பரராஜசிங்கம், என் கலையுலக முயற்சிகளுக்கு ஆதரவும் உற்சாகமும் தந்த எஸ். ராமதாஸ், ரமேஷ்பிரபா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இலங்கையில் மட்டுமே ஒலிபரப்புத் துறையில் பிரபலமாக இருந்த என்னை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி. பாலன்தான். இன்று எனக்கு கிடைத்திருக்கும் பெயருக்கு புகழுக்கும் காரணமான அவரை மறக்கவே மாட்டேன்.

சென்னையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற கலை விழாவில் தான் தமிழக மக்களுக்கு வி.கே.டி. பாலன் என்ன அறிவிப்பாளராக அறிமுகம் செய்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.

வானொலி மூலம் என்மீது அன்பும் அபிமானமும் கொண்ட தமிழக நேயர்களில் ஏ. ஆர். ரஹ்மானின் அம்மாவும் ஒருவாரம். அந்த இசை விழாவைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டு கவிஞர் வைரமுத்துவிடம் வேண்டுகோள் விடுக்க அவரும் பாலனிடம் கூறி ஏற்பாடு செய்துவிட்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஏ. ஆர். ஆரின் அம்மா என்னைச் சந்தித்து தங்கள் வீட்டுக்கு ஒரு மதியபோசன விருந்துக்கு வரவேண்டும் என்று அன்போது அழைத்தார். அதற்கிணங்க முதன் முதலாக ரஹ்மானைச் சந்தித்த போது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற சாதனையின் சுவடு துளியேனும் இல்லாமல் வீட்டுக்குள் ஒரு சின்னப்பிள்ளை போல் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். எத்தனை பெருமைகள் வந்தாலும் அதனைத் தலையில் சுமக்காமல் இறைவனுக்கே அத்தனை புகழையும் சமர்ப்பித்து சாதாரண மனிதனாய்ப் பழகும் அதே றஹ்மானையே இன்றும், ஒன்றுக்கு இரண்டாய் ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற பின்னரும் காண்கின்றேன்.

“ஆரம்ப காலத்தில் அவரது வெற்றிகளைச் சகிக்க முடியாத திரை இசைத்துறை சார்ந்த சில முன்னோடிகளைத் திருப்திப்படுத்துவற்காகவோ என்னவோ சில முன்னணி சஞ்சிகைகள் அவரது அடுத்தடுத்த படங்களின் இசையை வேண்டுமென்றே மட்டமாகவும் அவரது படைப்பாற்றல் திறைமையைக் கண்டு கொள்ளாமல், இந்த இசைக்கு கம்ப்யூட்டரைத்தான் பாராட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தன.

அதே நேரம் சன் டிவி நிறுவனத்தினர். பொங்கல் விசேட நிகழ்ச்சியொன்றைத் தயாரித்துத்தரும்படி ரமேஷ்பிரபா அவர்கள் மூலமாக என்னைக் கேட்டிருந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி “ரஹ்மான் ஒரு புதிர்” என்று தலைப்பில் ஒருமணிநேர நிகழ்ச்சியைத் தயாரித்தேன். ரஹ்மனின் இல்லத்தையும் ஸ்டூடியோவையும் தொலைக்காட்சி நேயர்கள் அந்த நிகழ்ச்சியில்தான் முதன் தன்மையில்லாத இயல்பான எளிமையான பேச்சும் அதில் பொதிந்திருந்த ஆழமும், அதே நிகழ்ச்சியின் கவிஞர் வைரமுத்து, எஸ். பி. பாலசுப்பிரமணியம். இயக்குனர் சிகரம் பாலச்சந்திரன் போன்றவர்கள் சொன்ன நியாயமான கருத்துக்களும், மற்றும் சமூகத்தின் பலமட்டங்களைச் சார்த்தவர்கள் சொன்ன கருத்துக்களை நான் தொகுத்த விதமும், பாடல்களும் சேர்ந்து பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளிலே அமோக வரவேற்பினைப் பெற்ற நிகழ்ச்சியாக அதனை உயர்த்தியது.

அதன்பின்னர் அதே சஞ்சிகைகளின் மற்றும் பத்திரிகைகளின் போக்கில் திடீர் மாற்றம். அதன் பிறகு ஏறுமுகம்தான் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒரு சில வரிகளில் தன் உள்ளத்து நன்றியைக் கொட்டி ரஹ்மான் எழுதிய கடிதம் இன்றும் அன்புக்குரிய சேமிப்பாக என்னிடம் இருக்கிறது. ஆரம்ப காலத்தில் முதன் முதலாக அவர் வாங்கியிருந்த ஒலித் தொகுப்புக் கருவியை (மிக்ஸர்) எனக்கு அவர் அன்பளிப்பாக வழங்கிய போது நான் பதறிப் போய் “என்ன றஹ்மான் இது? நீங்கள் வாழ்நாள் எல்லாம் நினைவுமாறாமல் பேணிப்பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமல்லவா? இதைப்போய் எனக்குக் கொடுக்கிறார்களே?” என்று கேட்டேன்.

“அவரோ ஒரு மெல்லிய புன்னகையுடன் ‘நான் வேறு யாருக்கு கொடுக்குறேன்...?” என்று மட்டும் சொன்னார். அது என் நெஞ்சை வெகுவாகத் தாக்கியது. மறுபேச்சுப்பேசாமல் அந்த அன்புச் சுமையை சுமந்து இலங்கை வந்தேன்”.

மகிழ்ச்சியான ஒரு சம்பவம்? பற்றி கேட்டதற்கு ஹமீத் இப்படிச் சொல்கிறார்.

“இதை மகிழ்ச்சி என்று சொல்வதா அல்லது துன்பம் என்று சொல்வதா என்றே தெரியவில்லை. 83 ஜூலை கலவரம் அரங்கேறிய சமயம் அது. என்னையும் என் மனைவியையும் காரில் வைத்து பெற்றோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்ற செய்தி தமிழக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது. இந்த வதந்தி எப்படி பரவியது என்று தெரியவில்லை.

இலங்கையில் இனி தமிழர்கள் வாழ முடியுமா? என்னை போன்றவர்கள் தமிழ்பேசி எப்படி பிழைப்பு நடத்துவது என்ற ஏக்கம் என்னை வாட்ட, வானொலி நிலையம் செல்லாது வீட்டிலேயே இருந்து விட்டேன். அந்த வதந்தி உண்மையென உறுதியாகி விட்ட சூழ்நிலையில்தான் இலங்கை அரசு உடனடியாக என்னை வானொலி நிலையத்திற்கு அழைத்தது. எனது பெயரை முதலிலேயே குறிப் பிட்டுவிட்டு விஷேடச் செய்தியை வாசிக்க சொன்னார்கள். அதன் பிறகுதான் நான் உயிரோடு இருக்கும் விடயம் மக்களுக்கு தெரிய வந்தது. “ஹா சப்தம் மீண்டும் கேட்டு” என்ற தலைப்பில் மலையாள பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதன் பிரதி கூட என்னிடம் இன்னும் இருக்கிறது.

வாழ்க்கையில் எதையாவது இழந்து விட்டு வருத்தப்பட்டிருக்கிaர்களா என்று கேட்டோம்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ் டி.வி.யில் நடிகை ஊர்வசி ‘டேக் இட் ஈஸி’ என்ற நிகழ்ச்சியை நடத்தினார். பிரபலங்களை அழைத்து குண்டக்க மண்டக்க கேள்விகளைக் கேட்டார்கள். அப்போது நீங்கள் கேட்ட இதே கேள்வியை கேட்டார்கள். அதற்கு நான் என் தலையை பார்த்தாலே புரிந்திருக்குமே என்று பதில் சொன்னேன். சிரிப்பொலியால் அரங்கமும் அதிர்ந்தது. இதை வேடிக்கைக்காகத்தான் சொன்னேன். இளமையும் முதுமையும் ரொம்பவும் இயற்கையானது. அதை தாங்கித்தான் ஆகவேண்டும்.

“ம்... அது ஒரு காலம்... என்று சொல்லு ஏங்குவது?”

“தெமட்டகொடையில் பேஸ்லைன் வீதிக்கருகில் இருந்தது. நான் பிறந்து வளர்ந்த வீடு. அங்கே எட்டு வீடுகள் இருந்தன. அதில் மின்சார வசதியில்லாத ஒரு சாதாரண ஓட்டு வீடு எங்களுடையது. அந்த வீட்டுக்கு முன்னால் ஒரு மருதோன்றி மரம் இருந்தது. அப்புறம் பெரிய மாமரம். இந்த மரத்தில் ஏறி அமர்ந்திருக்கும் போதுதான் என் மனசு கற்பனை வானில் சிறகடித்து பறக்கும். இவை எதுவும் இன்று அந்த இடத்தில் இல்லை. எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்து குடியேறிய இந்தியத் தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள், கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழாவுக்கு வருடாவருடம் அன்னதானம் போடுவார்கள். சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு வாழை இலை போட்டு சோறு பறிமாறுவார்கள். ‘பிச்சைக்காரர்கள் சாப்பிடுவார்கள். அங்கெல்லாம் போகக் கூடாது’ என்று அம்மா எனக்குத் தடைபோடுவார். ஆனால் அந்த குழம்பு வாசனை காற்றில் வந்து மூக்கைத் துளைக்கும். நாக்கை அடக்க முடியாமல் அம்மாவை ஏமாற்றி விட்டு பந்தியில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டுத்தான் வருவேன்.

“எங்கள் ஊரில் முதல் ஆளாக அதிகாலையில் எழும்புவது என் அம்மாதான். அப்பம், இடியப்பம் செய்து பக்கத்து வீடுகளுக்கும், கடைகளுக்கும் கொண்டுபோய் விற்று வருவார். இதுதான் வரும்படி. இப்படி எல்லாம் எங்களை படிக்க வைத்து ஆளாக்கிய அம்மா வாழ்ந்த அந்த வீட்டையும், ஊரையும் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அது அந்தக்காலம்...” என்று முடித்த ஹமீத் தான் அறிவிப்பாளராக வந்த பிறகு நடந்த ஒரு விடயத்தை பெருமூச்சு விட்டபடி குறிப்பிடுகிறார்.

“இளைஞானி இளையராஜாவின் ஆரம்பக்காலம். 1977ல் இலங்கைக்கு அவரை முதன் முதலாக அழைத்து வந்தவர் நடிகர் பிரசாந்தின் அப்பா. தியாகராஜன். வானொலி நிலையத்தில் நானும் சில அறிவிப்பாளர்களும் சேர்ந்து அவரைப் பேட்டி கண்டோம். பேட்டி முடிந்தபின், இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் நின்று ஒரு படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

நானும் ராஜகுருசேனாதிபதி, கனகரத்தினமும் சேர்ந்து நிற்க அப்படத்தை எடுத்தவர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன், அதன்பின், ‘பேசிக்கொண்டிருங்கள் வந்து விடுகிறேன்’ என்று சொல்லிப்போன தியாகராஜனும் அவர் சென்ற வாகனமும் திரும்பிவரத் தாமதமாகவே பேச்சின் சுவாரஸ்யத்தில் எங்களையும் மறந்து போன நானும் இளையராஜாவும், கால்நடையாகவே வானொலி நிலையம் அமைந்திருந்த டொரிங்டன் சதுக்கத்திலிருந்து புல்லர்ஸ் ரோட் வழியாக பம்பலப்பிட்டியையும் கடந்து அவர் தங்கியிருந்த வெள்ளவத்தைக்கு நடந்தே சென்றோம். ம்... அது ஒரு காலம்...?

தான் கடந்து வந்த வாழ்க்கை பாதையைப் பற்றி ஹமீத் என்ன நினைக்கிறார்?

“எத்தனையோ முகங்களை பார்த்திருக்கின்றேன். நான் வாழ்ந்த காலத்தில் நான் கற்ற அனுபவ பாடங்கள் ஏராளம். வாழும் காலத்தில் நாம் எதையாவது சாதித்தால்தான் பின்னால் பேசப்படுவோம். அதை நான் முடிந்தளவு செய்து வருகிறேன். இந்த வாழ்க்கை இனிமையானது. நல்லதை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறி முடித்துக் கொண்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.