மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
கலை, இலக்கிய நண்பர் சங்கமம் தலை நகரில்

மலையகத்தை மையமாகக் கொண்டு

கலை, இலக்கிய நண்பர் சங்கமம் தலை நகரில்

தமிழ் கலை, இலக்கியம் ஆத்மபூர்வமான நகர்வினைக் கொண்டிருப்பதான அறிகுறிகள் ஏதும் கள அவதானிப்புக்கூடான பதிவுகளில் சிக்குவதாக இல்லை. வெறும் வள பெருக்கும் மட்டும் கல்வியின் தரத்தினை எப்படி தீர்மானிக்க உதவாதோ அதே போலவே இலக்கிய வெளியீடுகளும் கலை நிகழ்வுகளும் மட்டும் தமிழ் கலை இலக்கியங்களின் பரிமாண வெளிப்பாடாக அமைய முடியாது.

ஏனெனில் இன்று அவசரமும் சுயதேவை மேலோங்களும் காணப்படும் யதார்த்த வாழ்வியல் முன்னெடுப்பினூடே அசதியானதொரு நிர்ப்பந்த அமர்வாக கலை இலக்கிய நிகழ்வுகளும் வெளியீடுகளும் பார்வைகளும் இரசிக, வாசக களபரப்பினைக் கவ்வி நிற்கின்றன. ஒரு புறம் வாசிப்பு மீதான ஆர்வம் மங்கி வருகிறது. இன்னொருபுறம் கலா இரசனைக்கான கால ஒதுக்கீட்டுக் கரிசனை ஒதுங்கி போகிறது.

கால போக்கில் ஸ்பரிசத்துக்கு ஆகாதவகைக்களாக போக்கில் ஸ்பரிச்சத்துக்கு ஆகாதவகைகளாக இவை ஆகிவிடுமோ எனும் அச்சம் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இனமொன்றில் கூர்மையினை சமகால தர ஒப்பீட்டு அடிப்படையில் அடையாளப்படுத்தும் அம்சங்களான இந்த கலை, இலக்கிய பிரசவங்கள் புறக்கணிக்கப்படுவதோ அல்லது சுவைத் தன்மை இழந்து போவதோ ஆரோக்கியமாக இருக்க முடியாது. இன்று வாசிப்புக்கான ஆர்வம் குறைந்து போகக் காரணம் அகத்தூண்டலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடமே ஆகும். பத்திரிகை, நூல்களை வாங்குவதோ படிப்பதோ அவசியமானது என்பதற்கான உணர்கை இல்லை.

வெறும் கேள்வி ஞானத்தைக் கொண்டு நாட்கள் நகர்த்தப்படுகின்றன. இது தமிழ் இலக்கிய களம் கண்டுள்ள சாபக்கேடு. இலத்திரனியல் ஊடகங்களின் பெருக்கமானது அச்சுக்கலை பதிவுகளுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகிறது. வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்படும் பட்சத்திலேயே விமோசனம் கிட்டும்.

தேடல் முனைப்புக்கான தேவை இருப்பதாக எண்ணுபவர்கள் குறைவு. தொழில்நார் தேவைகளுக்கும் பொருளாதார ஈட்டல்களுக்கும் தரும் முக்கியத்துவம் அகவிரிவாக்கத்துக்கு ஆதாரமாயிருக்கும் அம்சங்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஆசிரியர் சமூகம் கூட வாசிப்பு ஆர்வம் குன்றிய நிலையிலேயே காணப்படுகிறது.

பாராளுமன்றத்திலுள்ள வாசிகசாலையை உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்று பிரதமர் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இது முழு நாட்டுக்குமே அறிவுசார் துறையில் பாதகமான விடயம் என அவர் வலியுறுத்தினார். யாராயினும் வாசிக்க வேண்டும். குறிப்பாக கல்வித் துறையில் பாரிய சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கும் தமிழ் சமூகம் வாசிப்புத் துறை, இரசிக தன்மை என்பவற்றில் ஆர்வம் காட்டுவதற்கான மீள் எத்தனங்கள் தேவையாயிருக்கின்றன.

எனவே, தான் கலை இலக்கிய நண்பர்களின் ஒன்று கூடல் நிகழ்வுக்கு தலைநகரில் ஏற்பாடு செய்வதாக இதன் ஏற்பாட்டாளர் தெரிவிக்கின்றார். இதன் இலக்காக மின்வரும் அம்சங்கள் இருக்குமென தெரிகிறது.

வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் சார்ந்த இலக்கிய கருவூல பரிமாற்றம்.

தமிழ்க் கலை வடிவங்களுக்குப் புத்துயிரளித்தல்.

இலக்கிய படைப்புகள் அறிமுகம்

இளம் எழுத்தாளர்களுக்கான கனமாக்கம்.

கலை, இலக்கியவாதிகளைச் சமூகமயப்படுத்தல்.

பிரதேச மண்வாசனை கொண்ட கலை வடிவங்களின் பகிர்வும், பதிவும்.

அரசு வரப்பிரசாதங்களுக்கான உரிமை கோரல்.

மூத்த, இளைய தலைமுறை படைப்பிலக்கியவாதிகள், கலைஞர் களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்ததல்.

மலையகத்தை மையமாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் கலைப்பாலம் அமைத்தல்.

புத்திஜீவிகளைக் கொண்டு அத்திவாரம் இடப்படும் புதிய உத்திகளை உள்வாங்கி சக்திமிக்க சமூக சிந்தனையாளர்களை நாடளாவிய ரீதியில் தோற்றுவிப்பதான இந்தக் கைங்கரியத்துக்கு ஒத்துழைப்பு வழங்க பலரும் அவாவுறும். நிலை சாதகமான அம்சமென ஏற்பாட்டாளர் கூறுகிறார்.

கூடிய விரைவில் இதற்கான பொது அறிவிப்பு விடுக்கப்படும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]