புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

ஆசிரியர்களும் பெருந்தோட்டச் சமூகமும்:

ஆசிரியர்களும் பெருந்தோட்டச் சமூகமும்:

ஆசிரியர்கள் கற்பித்தலை தொழிலாகச் செய்யாமல் பின்தங்கிய சமூகத்தின் விடிவுக்காக சேவையாற்ற முன்வர வேண்டும்

ஆசிரியர்கள் ஒரு சமூகத்தின் உயிர் நாடி. சமூகத்தின் கண்ணாடி நாட்டையே கட்டியெழுப்பும் சிற்பி. ஒரு குழந்தை பிறப்பதற்கு ஒரு தாயும் தந்தையும் முக்கியமாக இருப்பது போல், ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சி கட்டங்களான குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், கட்டிளமைப் பருவம் போன்ற பருவங்களில் ஆசிரியர்களின் பணி முக்கிய செல்வாக்கு செலுத்துகின்றது.

மாதா, பிதா, குரு, தெய்வம், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் போன்ற கூற்றுக்கள் ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு பிள்ளைக்கு நல்ல பெற்றோரும், நல்ல ஆசிரியரும் கிடைத்து விட்டால் அந்த பிள்ளை வாழ்க்கையின் நல்ல நிலைக்குச் சென்று விடும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. இலங்கையில் 2,25000 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றார்கள். இதில் பெருந்தோட்டப் பகுதியில் சுமார் 10,000 ஆசிரியர்கள் உள்ளார்கள். அத்துடன் காலத்துக்கு காலம் பல்வேறு வகையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன.

க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி பெற்றவர்களே பெரும்பாலும் ஆசிரியர் தொழிலுக்கு உள்வாங்கப்படுகின்றார்கள். இவர்களில் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பயிலுனர் ஆசிரியர்களாகவும், தொண்டர் ஆசிரியர்களாகவும், ஆசிரியர் உதவியாளர்களாகவும் ஆசிரிய நியமனங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கட்டுரையானது பெருந்தோட்டப் பிரதேசத்தில் உள்ள ஆசிரியரும், பெருந்தோட்டச் சமூகமும் என்ற நோக்கில் எழுதப்படுகின்றது. சி.டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச கல்விக் கொள்கையானது பெருந்தோட்டச் சமூகத்திற்கு 30 வருடங்களின் பின்னரே கிடைத்தது.

இந்த 30 வருடங்களின் பின்னடைவானது இன்றும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வியலின் சகல அம்சங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கின்றன. அதாவது சமூக, பொருளாதார, அரசியல் கலாசார காரணிகளில் பாரியளவு தாக்கத்தை செலுத்தி வருகின்றது.

ஆசிரியர் தொழிலானது ஒரு புனிதமான, போற்றத்தக்க, மதிக்கத்தக்க, கெளரவமான தொழிலாகும். மிகவும் நேர்மையுடனும், இதய சுத்தியுடனும், அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும், உண்மையாகவும், தூர நோக்கத்தோடும், இலட்சியத்தோடும், சமூக உணர்வுடனும் ஆசிரியர் தொழிலை செய்ய வேண்டும்.

நியமனம் பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி அதிகாரிகள், ஆசிரிய ஆலோசகர்கள், கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அமைச்சர்கள், கல்வியோடு தொடர்புடைய உத்தியோகஸ்தர்களில் தங்களுடைய சேவைக்காலத்தில் நியாயமாக உழைத்து முழுமன திருப்தியோடு எத்தனை பேர் ஓய்வு பெறுகின்றார்கள். என்பது கேள்விக்குறியே?

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஆசிரியர் தொழிலை மேம்படுத்துவதற்காக, சிறந்த சேவையை மாணவர்களுக்கு பாடசாலைக்கு வழங்குவதற்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள முறையானது வியப்பிற்குறியதாகும்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோர் சமமான வாண்மை தொழில் துறையை சார்ந்தவர்களாவர். (Teachers is a Professional) பிற வாண்மைத் தொழிற் துறைகளில் தொழிற் துறையினராக வருவதற்கு தர நிர்ணயங்கள் இருப்பின் அவை ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.

இந்நாடுகளில் ஆசிரியர் ஒருவராவதற்குத் தேவையான அடிப்படை தகைமைகள் மற்றும் பயிற்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகைமைகளை ஈட்டுகின்றவர்களுக்கு ஆசிரியர் என்ற தொழில் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை உரிய ஆசிரியர் ஆணைக்குழுவினால் வழங்கப்படும். அந்த நாடுகளில் வாண்மைத் தொழில் ஆசிரியராவதற்கு நியமனம் மட்டும் கவனத்தில் கொள்ளப்படுவது இல்லை. அவர் ஆசிரியர் வாண்மைத் தொழில் துறையினராக பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.

அனுமதிப் பத்திரம் பெறுவதன் மூலமே ஆசிரியராகலாம். அதன் பின்பு தான் விரும்புகின்ற நகர்ப்புற, கிராமப்புற அதிக பின்தங்கிய பிரதேசமொன்றின் பாடசாலைக்கு நியமனம் பெற்றுச் செல்வதாகும். பாடசாலையொன்றுக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்புவதற்கான முறையின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்படும்.

வெற்றிடங்கள் நிரப்புவதற்கு இலகுவான பாடசாலைகளில் சம்பளம் குறைவாகும். வெற்றிடம் நிரப்ப முடியாதவைகளில் சம்பளம் அதிகமாகும். இந்நிலை எவ்வாறெனில் இலங்கையில் வேலை செய்யும்போது கிடைக்கும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகும்.

சில வருடங்களின் பின் (மூன்று வருடத்தில்) ஆசிரியரின் தொழில் சான்றிதழ் புதுப்பிக்கப்படல் வேண்டும். இதன் பொருட்டு பூர்த்திசெய்ய வேண்டிய தகைமைகளை உரிய ஆசிரியர் அறிவதுடன் அவை ஆசிரியர் ஆணைக் குழுவினால் காலத்திற்கு காலம் வெளியிடப்படும்.

ஆசிரியர் சமூகத்தினாலேயே ஒரு சமூகத்ததை தலைநிமிர்ந்து வாழ வைக்க முடியும். ஆசிரியர்கள்தான் ஒரு சமூகத்தின் வழிகாட்டி, சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியவர். ஒவ் வொரு ஆசிரியரும் தனது சமூக வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். தான் வாங்கும் சம்பளத்திற்காக உழைக்க வேண்டும். மாணவர்களுடைய திருப்தியில்தான் ஆசிரியருடைய வெற்றி தங்கியுள்ளது. ஆசிரியர் தொழில் ஒரு சேவையாகும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் பணியாற்றிவரும் 10,000க்கு மேற்பட்ட ஆசிரியர்களில் தமது ஆசிரியர் சேவையை அர்ப்பணிப்புடன் செய்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகும்.

இலங்கையிலுள்ள ஏனைய சமூகங்களோடு சமூக, பொருளாதார, அரசியல், கலாசார காரணிகளில் சகல அம்சங்களிலும் ஒரு பின்னடைவைச் சந்தித்துக் கொண்டு வாழும் பெருந்தோட்டச் சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு பெருந்தோட்ட ஆசிரியர் சமூகம் முன்வர வேண்டும் என்ற பொதுவான அழைப்பு விடுக்கப்படுகின்றது.

(தொடரும்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.