புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 

சில மனிதர்களும் சில நியாயங்களும் -11

சில மனிதர்களும் சில நியாயங்களும் -11

ஆதித்யாவின் மனமோ நிரம்பக் குழம்பியிருந்தது. அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இப்போதும் அவளுக்குக் கோபம் தாய் மேல் தான். இவ்வளவு நாளும் ஆரண்யாவின் நடவடிக்கை பற்றி யாருக்கும் கூறாமல் இருந்ததால்தானே இந்தவினை. எப்படி இதனை முடிவுக்குக் கொண்டுவருவது?

சாரங்கனும் ஒரு கதிரையில் இருந்த வண்ணம் சிந்தித்துக் கொண்டேயிருந்தான். அப்பா தன் கெளரவத்தை எங்களுக்காக விட்டுக் கொடுத்து இங்கே இருந்திருக்கலாமோ என்றும் ஆதித்யா சிந்தித்தாள். சூழ்நிலைகள் தானே சிந்தனையை வழி நடத்துகின்றன. சாரங்கன் அந்தப் பையனை வெளியிலை எடுக்கேலாதே? என்று கேட்டாள். இந்தப் பொடியன் அடிச்சதாலை மூன்று பேர் ஹொஸ்பிட்டலிலை. அதிலை ஒருவன்ரை நிலைமை கவலைக்கிடமாம். தற்செயலாய் அவனுக்கு ஏதும் நடந்திட்டுதெண்டால் ஒண்டுமே பண்ணேலாது. எட்வேட் ஏன் மாட்டனெண்டவர்? எட்வேட்டைப் பொறுத்தவரை எங்கடை பொடியள் இந்த நாட்டிலை வந்து செய்யிறவேலையள் அவ்வளவாய் பிடிக்கேல்லை. மற்றது தன்னாலை வெல்ல முடியும் எண்டால் தான் அவர் எடுப்பார் சரி இப்ப என்ன செய்யிறது.

இரண்டுவகையான பிரச்சினை. தாஸ் உங்கடை பெரியப்பாவின்ரை பையன். போதாக் குறைக்கு எங்கடை ஆரணியும் அவனையிட்டுக் கவலைப்படிறாள். ஆரணிக்கும் அவனுக்கும் இடையிலை என்ன தொடர்பு. வெறும் நட்பு மட்டும்தானா அல்லது அதுக்கும் மேலையா என்பது புரியவேயில்லை. ஆனால் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். என்று கூறிவிட்டு சாரங்கனைப் பார்த்தாள். செய்யத்தான் வேணும் ஆனால் எப்பிடி என்ன செய்யிறது. இதிலை எங்கடை தலையை முன்னுக்குப் போட்டு மாட்டுப்பட முடியாது. நான் எத்தனையோ தடவை மாமாவுக்கும் மாமிக்கும் சொன்னனான் அவை கேட்கயில்லை. இந்த விசயத்திலை நாங்கள் கவனமாய் இருக்கவேணும். அப்பிடியெண்டால் நான் ஒருக்கா அம்மாவோடை கதைக்கவா?

எனக்கும் அப்பிடித்தான் படுகுது ஆதித்யா மெதுவாக எழும்பி தொலைபேசிக்குக் கிட்டபோகவும் தொலைபேசி மணி அடித்தது. அம்மாதான் எடுத்திருந்தாள். அம்மாவின் குரலில் பதட்டமிருந்தது. ஆதி நீ ஒருக்கா வீட்டைவாறியே ஏனம்மா ஏதும் பிரச்சினையே. எதுக்கும் நீ வாவன். தம்பி சாரங்கனையும் கூட்டிக்கொண்டு வாவன் சரி வாறன் வையுங்கோ. சாரங்கன் அம்மா அவசரமாய் வீட்டை வரட்டாம் வெளிக்கிடுங்கோ போயிட்டுவருவம்.

இருவரும் தாயார் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் ஆரணி இருக்கவில்லை. வீடு நிசப்தமாக இருந்தது. வாங்கோ இருங்கோ. ஆரணியின்ரை போக்கு இண்டைக்கு அவ்வளவாய்ச் சரியில்லை. என்ன கேட்டாலும் ஒழுங்கான பதிலில்லை.

எரிஞ்சு விழுகிறாள். இப்ப அவசர அவசரமாக வெளியிலை போறாள்.

எங்கை போறனெண்டும் சொல்லயில்லை. எனக்குப் பயமாயிருக்குது.

என்று சொல்லும்போதே மதிவதனிக்கு அழுகை வந்துவிட்டது.

அம்மா ஆரணிக்கும் ஒரு பொடியனுக்கும் இடையிலை ஏதோ தொடர்பு இருக்கும்போலை. அந்தப் பொடியன் கொஞ்சம் ரவுடி ரைப். ஏதோ சண்டை நடந்து அவனை இப்ப பொலிஸ் பிடிச்சு வைச்சிருக்கு. என்று ஆதித்யா சொல்ல வாயடைச்சுப் போய் நின்றாள் மதிவதனி. உனக்கென்னன்டு இதெல்லாம் தெரியும். ஆச்சரியமாயிருக்கு அந்தப் பொடியன் வேற யாரும் இல்லை. சாரங்கனின்ரை மாமா மகன்தான். இப்ப என்ன பிரச்சினையெண்டால் அந்தப் பொடியனுக்கும் ஆரணிக்கும் இடையில் உள்ள தொடர்பு வெறும் நட்பா இல்லை காதலா எண்டதைத்தான் நாங்கள் அறியவேணும். எனக்கெண்டால் காதல் போலத்தான் தெரியுது. அவள் பட்டபாடும் துடித்த துடிப்பும் காதல் மாதிரித்தான் படுகுது. இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரை காதல் கல்யாணம் ஒரு பிரச்சினையே இல்லை. மதிவதனியும் மகேந்திரமும் காதல் கல்யாணம்தான். அதேபோல ஆதித்யாவும் சாரங்கனும் கூட காதல்தான்.

ஆனால் காதலிக்கிற ஆள் யார் என்பதுதான் இப்ப பிரச்சினை. பையன் சாரங்கனின் மாமா பையன் எண்டதும் ஓரளவு மதிவதனி ஆறுதல் அடைந்தாலும் பையனின் பழக்க வழக்கங்கள் அவளைப் பயங்கொள்ள வைத்தது.

வாசல் மணி அடித்துக் கேட்டது. ஆதித்யா சென்று கதவைத் திறந்தாள். மதிவதனியின் மாமா நின்றிருந்தார். வாங்கோ என்று வரவேற்று உள்ளே கூட்டி வந்தாள். ஆரணியின் பிரச்சினைதான் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை அவரும் புரிந்து கொண்டிருந்தார்.

அவருக்குப் பிரச்சினையை வடிவாக விளங்கப்படுத்தினாள் ஆதித்யா. இத்தனைக்கும் சாரங்கன் இன்னும் வாயே திறக்கவில்லை. இப்ப அந்தப் பையனை வெளியிலை கொண்டு வாறதெப்படி என்று யோசிப்பம். ஏனெண்டால் ஆரணிக்காக மட்டும் இல்லை. அவன் சாரங்கனின் மாமா பையன் கூட ஆதித்யாவுக்கு அவரின் அந்த அணுகுமுறை சந்தோசத்தைக்

கொடுத்தது. தானும் சாரங்கனும் லோயர் எட்வேட்டிடம் போனது பற்றியும் அதன் பதிலையும் கூறினாள்.

எனக்கொருவரைத் தெரியும் அவர் இப்படியான கேசுகளிலை

கெட்டிக்காரன். அணுகிப் பார்ப்பம். முதலிலை பொடியனை யாமீனிலை எடுக்கவேணும். எதுக்கும் சாரங்கன் உங்கடை மாமாவுக்குப் போன் பண்ணி அவரை ஒருக்கால் இஞ்சை வரச்சொல்லுங்கோ. அதே நேரம் தற்செயலாய் இப்ப ஆரணி இஞ்சை வந்தால் ஆரும் இதைப்பற்றிக் கதையாதையுங்கோ. பொடியன் வெளியிலை இப்ப சாரங்கனின் மாமாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஆதித்யாவின் மாமாவுக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டு விட்டார்.

ஆதித்யாவும் சாரங்கனும் மாமாவும் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

வீட்டுக்குப் போனதும் ஆதித்யா எல்லாருக்கும் ரீ போட குசினிக்குள்

சென்றாள்.

மாமாவினுடைய முகத்தில் சோர்விருந்தது.

இந்த ஆரணியின் புத்தி ஏன் இப்படிப் போனது? இப்ப என்ன செய்யிறது.

எவ்வளவு சிக்கலுக்குள்ள குடும்பத்தை மாட்டி விட்டிருக்கிறாள்.

சாரங்கன் எந்தப் பதிலும் கூறவில்லை. தேனீரோடை வந்த ஆதித்யா

என்னைப் பொறுத்தவரை இதை எப்படியும் கட் பண்ண வேணும்.

உந்தப் பொடியனைக் கட்டிப் போட்டு அவள் என்ன செய்யிறது

என்றாள்

அதை ஆரணியெல்லோ யோசிச்சிருக்க வேணும். நாங்கள்

யோசிச்சென்ன பிரயோசனம். பொடியனின்ரை பழக்க வழக்கங்கள்

கட்டாயம் ஆரணிக்குத் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சும் அவள்

விரும்பிறாளென்டால். நிலைமை எங்கடை கட்டுப்பாடிலை இல்லை

என்றுதானே அர்த்தம்.

சாரங்கன் கூறுவதிலுள்ள நியாயம் இருவருக்கும் புரிந்தது.

அப்போது வாசல் மணி அடித்துக் கேட்டது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.