மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
ஹஜ் நிறைவு...

ஹஜ் நிறைவு...

காலைப் பொழுதின் கலகலப்பு சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டிருக்க காலைச் சூரியனின் கதிர்வீச்சும் படிப்படியாக வீரியம் பெற்றுக் கொண்டிருந்தது.

ரஹீமா தன் வீட்டு முற்றத்தைக் கூட்டிப் பெருக்கி கொண்டிருந்தாள். இப்படிக் கூட்டும் போடுதல்லாம் கணிதச் செய்கையில் வரும் கூட்டலையும் பெருக்கலையும் இதற்கு ஏன் பெயரிடக் கொண்டு வந்தார்களோ என்றும் சிந்திப்பாள். ஓ... குப்பைகளை ஒன்று சேர்ப்பதால் கூட்டலும் பெருக்கலுமாக இருக்கும் என்று நினைக்க சிரிப்பும் வந்தது ரஹீமாவுக்கு.

“ட்ரீங்... ட்ரீங்..” என்ற சைக்கிள் மணி கேட்டுக்கு வெளியே போய்ப்பார்த்தாள்.

தபாற்காரன் தான்.

இப்போதெல்லாம் தபாற்காரர்களின் வேலை மிகவும் குறைவுதான். முன்னர் போல கடிதக் கட்டுக்கள் இல்லை. எப்போதாவது அழைப்பிதழ்கள், டெலிபோன் பில்கள்... இப்படி ஏதாவது வந்தால் தான்..

சற்று பண்பாடுள்ள தபாற்காரன்...

“குட் மோர்னிங்” சொல்லிக் கொண்டே ரஹீமாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

அவளது பெயர் முகவரி கோணல்மானல் எழுத்தில் ஆனால் மிகச் சரியாக எழுதப்பட்டிருந்தது.

“தெங்க்யூ” சொல்லிக் கொண்டே உள்ளே வந்து கடிதத்தைப் பிரித்தாள்.

தெரியாத கையெழுத்து...

உறவினர் யாருமே கடிதம் எழுதுவதில்லையே

“கடிதத்தின் ஆரம்பத்தில் முகவரியும் எழுதப்பட்டிருந்தது... அதே கோணல் மானல் எழுத்துத்தான். ஆனால் முறைப்படி எழுதப்பட்டிருந்தது. முன்னைய கல்வியின் சிறப்பு விளங்கியது...

கமால் நானாதான் எழுதியிருக்கின்றார்.

“அன்புத் தங்கச்சி ரஹீமா,

“அஸ்ஸலாமு அலைக்கும்” கஷ்டப்பட்டு உங்களுடைய அட்ரஸை எடுத்தேன். இன்ஷா அல்லாஹ்... இந்த முறை ஹஜ் செய்யப் போகிறேன். நேரில் வரமுடியவில்லை. தூஆ செய்து கொள்ளுங்கள். மச்சான், பின்ளைகளுக்கும் சொல்லுங்கள்.

உங்கள் அனைவர்க்காகவும் நான் தூஆ செய்வேன்.

இப்படிக்கு, உங்கள் நானா, கமால்.

ரஹீமாவால் சந்தோசத்தைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சிறுபிள்ளையாய்க் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கணவனது அறைக்கு ஓடினாள்...

கணவன் பிர்தெளஸ் தொலைக்காட்சியில் தினசரி பத்திரிகைகளை வாசிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்குப் பக்கத்தில் இருந்த “ரிமோட் கொன்ட்றோலை” எடுத்து ஒலியை “மியூட்” பண்ணிவிட்டு ரஹீமா கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தாள்.

“பாருங்க... கமால் நானா ஹஜ்ஜுக்குப் போறாராம்... லெட்டர்ல எழுதி இருக்கிறார்”

ரஹீமாவின் ஒவ்வொரு சொல்லிலும் பாசமும் மகிழ்ச்சியும் பொங்கிப் பிரவகித்தது..

“ஓ... இப்ப அவரு அவ்வளவு பெரியாளாயிட்டாராமா...” கடிதத்தைப் படிக்காமலேயே அவளிடம் நீட்டிவிட்டு மீண்டும் தொலைக்காட்சி சத்தத்தைக் கூட்டி விட்டான் பிர்தெளஸ்.

ரஹீமாவுக்கு சந்தோசமெல்லாம் போன இடம் தெரியவில்லை.

“சே... இந்த மனுஷனை மாத்தவே முடியாது...” என்று அலுத்துக் கொண்டவளாய்ச் சமையலறைப் பக்கம் போனாள். ஒரு வேலையும் செய்ய முடியவில்லை. சமையலறையிலிருந்து நாற்காலியில் தொப்பென்று உட்கார்ந்தாள்.

“கமால் நானா... உங்கள ஓடி வந்து பாத்து ஸலாம் சொல்லனும் போல துடிக்கின்றேன்... நானா... இந்த நல்ல பயணத்த போவப் போaங்க... எனக்கு சரியான சந்தோஷம் நானா...” இப்படிச் சத்தமிட்டுக் கத்த வேண்டும் போல் துடித்தது அவளது மனம்.

ரொட்டி சுடுவதற்காகப் பிசைந்து வைத்த மா அப்படியே இருந்தது; வெட்டிய கிழங்கும் வெங்காயமும் அப்படி அப்படியே இருந்தன அவலாள் ஒன்றையும் செய்ய முடியவில்லை.

மலைசாய்ந்து போனால் சிலையாகலாம்.... மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம். அவளது மனப்பறவை சிறகடித்து எங்கெல்லாமோ பறந்தது.

“என்னா... சாப்பாடு ரெடியா... நான் கடைக்குப் போவ நேரமாயிரிச்சி... ஓ... பாசமலர் நானாவை நெனைச்சி உட்காந்திட்டீங்களோ” பிர்தெளஸின் குத்தல் பேச்சு அவளை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.

மெளனமாய் இயந்திரமாய் அவள் இயங்கத் தொடங்கினாள். அவன் ரெடியாகி வரும் போது மேசையில் எல்லாம் தயாராக இருந்தது... ரஹீமா மெளனமாகவே எல்லாவற்றையும் செய்தாள்.

அவளது மெளனம் பிர்தெளஸிற்கு எல்லாவற்றையும் உணர்த்தி இருக்க வேண்டும்... அதனால் தான் அவன் ஒன்றையும் வாய்திறந்து கேட்காமல் கடையைத் திறக்கப் போய்விட்டான்...

அவன் சென்றதும் ரஹீமா தான் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருந்த பழைய டயறியைத் தேடி எடுத்தாள்.

“பதுளை” என்ற தலைப்பில் அவன் குறித்து வைத்திருந்த இலக்கங்களைப் புரட்டி வைத்துக் கொண்டு தொலைபேசி அருகிற் சென்றாள்.

ரஹீமாவின் பெரியம்மா வீட்டிற்கு எடுத்தாள் “அந்த இலக்கம் பாவனையில் இல்லை” என்ற கீச்சுக்குரல் மூன்று மொழிகளிலும் ஒலித்தது.

இஷாக் மாமாவின் வீடு... மலீக் சாச்சாவின் வீடு..., சோ... ஒரு இலக்கமும் வேலை செய்யவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய இலக்கங்கள் அவை... இப்போது யார்தான் “லேண்ட் லைனை” உபயோகிக்கின்றார்கள்?.

வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கிறதோ இல்லையோ... ஆளுக்கு ஆள் கைதொலைபேசிக்கு மட்டும் குறைவில்லையே...

ஏதோ நினைவு வந்தவளாய் புதிய தொலைபேசி இலக்கங்களுள்ள கையேட்டை எடுத்துப்பட படவெனத் திருப்பினாள்.

பதுளை - பதுளைப்பிட்டிய பள்ளிவாசலின் இலக்கத்தைத் தேடிப் பிடித்து அழைப்பை ஏற்படுத்தினாள்.

அப்பாடா... அழைப்பு கிடைத்தது.

“அஸ்ஸலாமு அலைக்கும்”,

“வஅலைக்குமுஸ்ஸலாம்”

“நான் கண்டியில் இருந்து பேசுறன்... உங்களால ஒரு பெரிய ஒதவி வேணும்... அல்லாஹ்வுக்காகச் செய்து தருவீங்களா?” மிகவும் பணிவான குரலில் கேட்டாள்.

“நீங்க யாருன்னே சொல்லல்லயே”

“ஏன்ட பேரு ரஹீமா... நானும் பதுளையைச் சேர்ந்தவ தான்... நாப்பத்தைஞ்சி வருசத்துக்கு முன்னால கலியாணம் முடிச்சி கண்டிக்கு வந்தவ... ஏன்ட வாப்பா மன்சூர் மொதலாளி... பதுளைபிட்டியாவில்தான் இருந்தோம்... வாப்பா வபாத்தாகி இருபத்தைஞ்சி வருஷத்துக்கு மேலாவுது... சின்ன குடும்பப் பிரச்சினையால பத்து இருவது வருஷமா என்னால பதுளைக்குப் போகவர முடியல்ல...

“சொல்லுங்க...”

“ஏன்ட கூடப்பொறந்த நானா கமால்... பதுளபிட்டியாவில இரிக்கார். ஒரு த்ரீவில் வைச்சு ஓடுறார்... அவரு இந்தத் தடவ ஹஜ்ஜுக்குப் போறதா எனக்கு லெட்டர் ஒண்டு அனுப்பி இரிக்கார்... அவரோட டெலிபோன்லயாவது கொஞ்சம் பேசனும்... அவருட நம்பர் இல்ல... தெரிஞ்சவங்ககிட்ட இருந்து எழுத்துக்கவும் முடியல்ல...”

மேலே பேச முடியாமல் அவளது குரல் அடைத்துக் கொண்டது.

தன் உடன் பிறப்பின் மீது கொண்ட பாசத்தின் அடைப்பே அது.

“சொல்லுங்க... என்னால என்ன செய்யமுடியுமோ நான் செய்து தர்ரேன்...”

சமாளித்துக் கொண்டு பேசினாள்.

“ஒரு சகோதரிக்கு ஒரு தாய்க்கு செய்யும் ஒதவியா நெனச்சி... கமால் நானாவின் டெலிபோன் நம்பரை எடுத்துத்தரமுடியுமா?”

“நீங்க சொல்ற கமால நல்லத் தெரியும்... ஹயர் போகாம இருந்தா ஒவ்வொரு

வஹுதுகளுக்கும் ஜமாஅத்தா தொழ வருவாரு... ஒங்கட நம்பர் இங்கு விழுந்திரிக்கி... கட்டாயமா... இன்ஷா அல்லாஹ் நான் அவருக்கு ஒங்கட நம்பரையும் குடுக்குறன்... அவர்ட நம்பரை ஒங்களுக்கும் தாரன்... இன்ஷா அல்லாஹ்...” ‘ஜஸாக்கல்லாஹு ஹைரன்... அல்லாஹ் ஒங்களுக்கு ரஹ்மத் செய்வானாக... அஸ்ஸலாமு அலைக்கும்”

ரஹீமாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லனும் போல இருந்தது.

“அப்பாடா... ஊட்ட உட்டு எங்கயும் போகக்கூடாது... எந்த நிமிஷத்திலாவது பதுளையிலிருந்து “கோல் வரலாம்” தனக்குள்ளாகவே தீர்மானத்தை எடுத்துக் கொண்டாள்.

***

ஒவ்வொரு மணித்தியாலயத் துளிகளையும் ரஹீமா பெரிய எதிர்பார்ப்புடனேயே காத்திருந்த இரண்டு நாட்களும் ஓடிவிட்டன.

“கோல்” வரவே இல்லை.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு சிறிய கொடுக்கல் வாங்கல் பிரச்சினை...

பிர்தெளஸிடம் கமால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவாறு எதிர்பாராத சிக்கல்... சிறிய தீர்பொறி பெரிய காட்டையே எரித்து விடுவதைப் போல அதுவே பெரிய குடும்பப் பகையாகி... ரஹீமாவுக்கு அவளது பிறந்த வீட்டுத் தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுவிட்டது. இது அவளைப் பொறுத்தளவில் பெரிய ஆயுள் தண்டனையே.

பிர்தெளஸை மீறித் தொடர்பு வைத்தால் அவளது பிள்ளைகளையும் கணவனையும் பிரிய வரும் என்பது அவளுக்குத் தெரியும்... பல்லைக்கடித்துக் கொண்டு வைராக்கியமாய் வாழ்ந்து விட்டாள்.

இந்த கடிதம் வந்தபின்னர் “வருவது வரட்டும்” என்ற அசட்டுத் தைரியத்தில் தொலைபேசியிலாவது பேசுவோம் என்ற ஆவலால் பள்ளிவாசலுக்கு “கோல்” எடுத்துவிட்டுக் காத்திருக்கின்றாள் ரஹீமா.

மணி பகல் இரண்டையும் தாண்டிவிட்டது. பிர்தெளஸ் சாப்பாட்டுக்கு வர்ர நேரம்... வீட்டு மணி ஒலிக்கிறது.

பிர்தெளஸ் தான்...

உணவைப் பரிமாறும் போது ரஹீமா மெதுவாகப் பேச்சை எடுத்தாள்.

“கமால் நானா எப்படித்தான் பணத்த சேர்த்தாரோ.. இப்போ ஹஜ்ஜுக்குப் போவ ஒருத்தருக்கு ஏழு எட்டு லட்சம் வேணும் என்டு சொல்றாங்களே...”

“ஓ... ஒங்கட கமால் நானா ஏன்ட பணத்தத் திருப்பித் தராத மாதிரி... எத்தன பேர்கிட்டயாவது வாங்கி வாங்கி சேர்த்திருப்பாரு... அவர்தான் பெரிய சாட்டையடி விழுந்தது.

அவள் பதில் பேசவில்லை.

வீட்டு அழைப்பு மணி...

ரஹீமாதான் சென்று கதவைத்திறந்தாள்.

“அஸ்ஸலாமு அலைக்கும்”

“வ அலைக்கும் ஸலாம்”

“நீங்க...”

பதுளபிட்டிய பள்ளிவாசல் கதீப்...”

“உள்ளுக்கு வாங்க...”

பேச்சுச் சத்தம் கேட்டு பிர்தெளஸ¤ம் முன்னால் வந்தான். “இவரு பதுளபிட்டிய பள்ளிவாசல் கதீபாம்... இவரு ஏன்ட ஹஸ்பன்ட்”.

வந்தவர் அமர்ந்தார்.

ரஹீமா ஒரு குளிர்பானத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“ஒரு முக்கியமான விஷயத்துக்காக கஷ்டப்பட்டு ஒங்கட வூட்டத் தேடி வந்தோம்... ஹாஜி... அல்லாஹ்ட கட்டளையை நெறவேத்த ஹஜ்ஜுக்குப் போறவங்க நெறவேத்திட்டுப் போக வேண்டிய மிச்சம் கடமைகளிரிக்கி... விஷேகமா... கடன்கள முடிச்சிடனும் இதுக்காகத்தான் வந்தோம்...”

ரஹீமாவுக்கோ பிர்தெளஸ¤க்கோ ஒன்றுமே புரியவில்லை.

“ஹஸாத்... நீங்க சொல்ல வர்ரது...” பிர்தெளஸ் கேட்டதும் அவர் தனது கைத்தொலைபேசியை எடுத்து,

“கமால்... அப்படியே நடந்து இந்த லேனால வாங்க... நான் வெளியில நிக்கிறேன்”. என்றார்.

ரஹீமாவுக்குச் சில விடயங்கள் புரிந்தன. சேர்ந்தாற்போல மனதில் அடக்கமுடியாத உணர்வுகள்.. மகிழ்ச்சியா.. ஆனந்தமா... உடன் பிறப்பைக்காணப் போகிறோம் என்பதால் ஆசை ஆடுகிறதா?

ரஹீமா வெளியே சென்று நின்று கொண்டாள். இப்போது சகோதர பாசம் மட்டுமே அவளில் கொந்தளிக்கின்றது.

“கமால் நானா...” சிறு குழந்தையாய் ஓடிச் சென்று கட்டிப்பிடித்துக் கொண்டாள் ரஹீமா.

“தங்... கச்.. சி...”

சில நிமிடங்கள் இருவரதும் அழுகையிலேயே கழிந்தன.

பிர்தெளஸ் பேசினான்.

“உள்ளுக்கு வாங்க...”

கல்லுக்குள்ளும் ஈரம் கசிகிறதா?

“அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான்” கமால் பிர்தெளஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான்” “வஅலைக்குமுஸ்ஸாம்”

கதிபே கதையைத் தொடங்கினான். “இவர் கமால்... இந்தத் தடவ ஹஜ்ஜுக்குப் போவமுந்தி ஒங்கட கடனக் கொடுத்திடனும் என்டு எனக்கிட்ட எத்தனையோ தடவ சொல்லி இரிக்கிறார். ஒங்கட காசையும் வைச்சிக்கிட்டிரிக்கார். நான் தான் இப்ப கூட்டிக்கிட்டு வந்தேன்.. அவர் தனிய வர கூச்சப்பட்டார்... இல்ல.. இல்ல... ஏதாவது ஏடா கூடமா பேச்சு வார்த்த நடந்திடுமா என்று பயந்தாரு... அப்படியெல்லாம் நடக்காதென்டு சொல்லி நான்தான் கூட்டிக்கிட்டு வந்தேன்... ஹாஜி... ஒங்கட கடன எடுத்துக் கொங்க... கமால் ... எண்ணிக் குடுத்துடுங்க... பத்து இருவது வருஷத்துக்கு முன்ன வாங்கின பணம்... கொஞ்சம் கூடத்தான் வச்சிரிக்கார்... இது வட்டியில்ல... இன்டக்கி காசு பெறுமதிப்படிதான்... எடுத்துக்கோங்க...” கொடுக்கல் வாங்கல் முடிந்தது.

சுமுக நிலை இன்னும் திரும்பவில்லை.

கமால் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் ரஹீமா நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா... பாத்துக்கிட்டிரிக்கீங்க... வெள்ளன ஆறு மணிக்கெல்லாம் ட்ரெயின்ல ஏறி வர்றோம்... சாப்பாடு இல்லயா? கதீப் நிலையை உணர்ந்து சொன்னார்.

“நீங்க பேசிக்கிட்டிரிங்க... நான் போய் சாப்பாடு கொண்டாரேன்...” பிர்தெளஸ் வெளியேறினான்.

“நானா... எப்படி இவ்வளவு காசு... தேடினீங்க...” ரஹீமா கேட்டே விட்டாள்.

“தங்கச்சி... அல்லாஹுதாலா தர நெனச்சா யாராலயும் நிப்பாட்ட முடியாதும்மா... ஒருகாலம் இந்தப் பணத்தால நான்பட்ட அவமானம்... அப்போதெல்லாம் அல்லாஹ்விடம் தான் கையேந்தினேன. தங்கச்சி... அந்த ரஹ்மான் தந்துட்டான். ஏன்ட மூணு மகன்மாரும் இப்போ நல்லா சம்பாரிக்கிறாங்க... நானும் சும்மா இரிக்காம ஒரு தரீவீல் ஓட்டுறன்...”

“நானா... மதினி...” “அவுங்களும் தான் வர்ராங்க...”

அர்ஹம்துலில்லாஹ்... எனக்கு ஒங்களப் பார்த்து பெரிய நிம்மதியாக இரிக்கு நானா” “தங்கச்சி... இந்தக் குடுக்கல் வாங்கலால மிச்சம் கஷ்டப்பட்டது நீங்க தான்... நாங்க எல்லோருமே ஒங்களுக்காகக் கவலபடாத நாளே இல்லம்மா...”

கமாலின் குரல் அடைக்க... கண்ணீர் வழிந்தது.

“அதெல்லாம் இப்ப வாணாம் நானா... எல்லாருக்கும் எதோ ஒரு சோதன வரத்தான் செய்யும்... ரஹீமா சொல்லும் போதே, கண்டி முஸ்லிம் ஹோட்டலில் இருந்து ஒரு ஸஹன் புரியாணி சாப்பாட்டை மணக்க மணக்க தரீவீலிருந்து இறக்கினான் பிர்தெளஸ். கைகால் கழுவி, தொழுது, வயிராற சாப்பிட்டு கமால் கதீபுடன் விடைபெற ஆயத்தமானான்.

“மச்சான் ஸலாம் சொல்லிக் கொள்வோம்” பிர்தெளஸ் கூறி முஸாபஹ் செய்து கொண்டான்.

ரஹீமாவை உச்சி மோந்து ஸலாம் சொல்லிக் கொண்டான் கமால். கதீபின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!

“மச்சான்... தங்கச்சி... எல்லாரும் ஒருக்கா பதுளைக்கு வாங்க...! “கட்டாயமா இன்ஷா அல்லாஹ் நீங்க பயணம் போகுமுன் வர்ரோம்...” பிர்தெளஸ் சொன்ன போது ரஹீமாவால் நம்பவே முடியவில்லை.” “கொஞ்சம் இரிங்க கமால் மச்சான்” உள்ளே ஓடிய பிர்தெளஸ்.

“இந்தாங்க... இந்த சவூதி ரியால்கள் கையில வெச்சிக் கோங்க... போனதடவ உம்றாபோய் வந்த போது மிஞ்சது... மாத்தாம வச்சிருந்தேன்... அல்லாஹ் அத உங்களுக்கு நkபாக்கி இருக்கிறான்...” கமால் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டான்.

கமாலதும் ரஹீமாவினதும் மகிழ்ச்சியில் காத்திருக்கிறது புனித ஹஜ்!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]