புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
திருமலை - மட்டு மறை மாவட்டப் பிரிப்பை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல!

இன்றைய அரசியல் சூழ்நிலையோடு

திருமலை - மட்டு மறை மாவட்டப் பிரிப்பை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல!

கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலை மாவட்டத்த¨ச் சேர்ந்த குருவானவரொருவர் அதே மாவட்டத்திற்கு ஆயராக நியமிக் கப்படுவது இதுவே முதல் தடவை. அது நானாக இருப்பது குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. இம் மறைமாவட்டத்தையும் மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறியாத ஒருவர் பணியேற்கும் போது, அது அவருக்கும் மறைமாவட்ட மக்களுக்கும் கடினமாகத்தான் இருக்கும்.

நான் இம்மண்ணில் பிறந்து வளர்ந்தவன். குருவானவராகி பல்லாண்டுகள் மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி மாவட்டங்களில் பணிசெய்தாலும் என் மண்ணின் தேவைகளை அறிந்திருக்கிறேன். எனது மாதிரியான பணி இம் மக்களுக்குத் தேவையென்பதையும் உணர்ந்திருக்கிறேன்!”

இவ்வாறு திருகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள அம் மண்ணின் மைந்தன் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தெரிவித்தார். வார மஞ்சரியின் நேர்காணலுக்காக அவரை உவர்மலை யிலுள்ள ஆயரில்லத்தில் சந்தித்து உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவரது ஆயர்த்துவ பட்டாபிஷேக திருச்சடங்கானது கடந்த ஜூலை 25இல் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி முன்றலில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கையின் பல்வேறு மறைமாவட்ட ஆயர்கள். அருட்தந்தையர்கள், அருட் சகோதர சகோதரிகளோடு, இராணுவ, பொலிஸ், அரச உயரதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்நாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆயரின் அபிமானிகளென்று ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோர் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தது திருகோணமலை மண்ணில் ஒரு வரலாற்று நிகழ்வாகவே அமைந்துவிட்டது.

நிகழ்வின் ஆரம்பத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் பியரொரே நியூயென் வான்றொட் ஆண்டகை. பாப்பரசரால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை மேடையில் வாசித்து ஆயரிடம் கையளித்தார். அதனைத் தொடர்ந்து திருமலை மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையும், காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகையும், மட்டு மறைமாவட்ட ஆயர் பொன்னையா யோசப் ஆண்டகையும் இணைந்து திருநிலைப்படுத்தல் திருச்சடங்கை, இதர ஆயர்கள் புடைசூழ்ந்து ஆராதிக்க இனிதே நிறைவேற்றி வைத்தனர்.

ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகை தொடர்ந்தும் எமக்களித்த நேர்காணல் வருமாறு:-

கேள்வி - இனப்பிரச்சினை, போர்ச்சூழல், இயற்கை அனர்த்தம், அகதிகள் பிரச்சினையென்று கடந்த காலங்களில் அடிமேல் அடிவாங்கியும் பாரச் சிலுவை சுமந்தும் பல கசப்பான அனுபவங்களை சந்தித்தது கிழக்கு மாகாணம். அப்போதெல்லாம் இப்பிராந்தியத்தில் கத்தோலிக்க திருச்சபைக்குத் தேவைப்படாத மறைமாவட்டப்பிரிப்பும், புதிய ஆயர்த்துவத் தலைமைகளும் இப்போது மாத்திரம் ஏன் தேவைப்படுகின்றன? தமிழர் தம் தாயகமான வடக்குக் கிழக்கின் இணைப்புக் குறித்து தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் இந்தச் சமயத்தில் இந்த மாவட்டப் பிரிப்பை மக்கள் கேள்விக்குள்ளாக் குகின்றனரே? இது குறித்து தங்கள் பதிலென்ன?

பதில் - இக்கேள்வியின் முக்கியமான இரு விடயங்களுண்டு. ஒன்று மறை மாவட்டப் பிரிப்பு. அடுத்தது புதிய ஆயர் நியமனம். கத்தோலிக்க திருச்சபையின் ஒரு மறைமாவட்டம் பிரிக்கப்படுவதை அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. அரசியரல் சூழ்நிலை வேறு. மறைமாவட்டத் தேவை வேறு. திருகோண மலை மட்டக்களப்பு மறை மாவட்டம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இதனை ஓர் ஆயரே இதுவரை வழிநடத்தி வந்துள்ளார்.

 நாட்டில் போர்ச்சூழல், அகதிகள் பிரச்சினை, இயற்கை அனர்த்தம் என்ற சூழ்நிலை உருவாவதற்கு பல்லாண்டுகளுக்கு முன்பே இம் மறைமாவட்டம் பிரிய வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், ஒரே ஆயர் தென் கிழக்கில் பாணமை தொடங்கி இங்கினியாகல, அம்பாறை, கந்தளாய், புல்மேட்டை பன்குளம், பதவிய, சிறிபுர ஆகிய இடங்களுக்குச் சென்று ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் கடினமான காரியம்.

இப்போது கத்தோலிக்கர்களும் பல இடங்களிலும் செறிந்து வாழ்வதால், இவ் விடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்திக்க வேண்டியது ஆயரின் கடமை. மேலும் யுத்தகாலங்களில் ஓர் ஆயர் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது கடினம். ஆபத்தானதும் கூட எனவே, திருகோணமலை தனியாகவும், அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலாக மட்டக்களப்பு மறைமாவட்டம் வேறாகவும் என இரண்டாகவும் பிரிந்து செயற்படும் போது இரண்டு ஆயர்கள் தத்ததமது மறைமாவட்டங்களின் ஆன்மீக, சமூக தேவைகளை கண்காணிப்பதும் பூர்த்தி செய்வதும் இலகுவானதாகிவிடும்.

இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும் வத்திக்கான் இது பற்றி ஆலோசித்து முடிவெடுத்து அறிவிக்க நீண்ட காலமெடுத்தது. அதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு ஒரே மறைமாவட்டமாக இயங்கி வந்த காலத்திலேயே சமூகப் பணிகள் செய்யும் எமது எகெட் கரித்தாஸ் தொண்டு நிறுவனம் தனித்து எல்லா இடங்களிலும் பணி செய்ய முடியாத காரணத்தாலும், போர்ச் சூழல், இயற்கை அனர்த்தம், அகதிவாழ்க்கையென்று பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பெருகியதன் காரணமாக எகெட் கரித்தாஸ் மட்டக்களப்பில் தனித்தும், திருகோணமலையில் வேறாகவும் இயங்கிவந்துள்ளது என்பதையும் நாமிங்கு குறிப்பிடவேண்டும். எனவே அரசியல் சூழ்நிலையோடு திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டப் பிரிப்பை ஒப்பிட்டாமல் அது ஒருபோதும் பொருந்தாது.

அடுத்தது, திருச்சபையின் சட்டப்படி ஓர் ஆயர் தமது 75ஆவது வயது நிறைவில் தமது ஓய்வை அறிவித்து தமது இராஜினாமாக் கடிதத்தை வத்திக்கானுக்குக் கொடுக்க வேண்டும். ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை கடந்த 2011இல் இராஜினாமாக் கடிதம் கொடுத்திருந்தாலும், புதிய ஆயரின் நியமனம் வரைக்கும் மறைமாவட்டத்தை வழிநடத்தும்படி வத்திக்கானால் கோரப்பட்டிருந்தார்.

அதன்படி ஆயர் பொன்னையா யோசப் ஆண்டகை 2008இல் துணை ஆயராகப் பொறுப்பேற்க, 2012இல் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டம் இரு மாவட்டங்களாக உரோமையால் அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆயர் பொன்னையா யோசப் மட்டு மறைமாவட்டத்திலும், ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை திருகோணமலை மறைமாவட்டத்திலும் பொறுப்பேற்றனர். இதுவே மறைமாவட்டத்தின் சூழ்நிலையும் தேவையுமாகும். இதனை அரசியல் சூழ்நிலையோடு ஒப்பிடுதல் தவறானது.

கேள்வி - ஒரு குருவானவர் ஆயராக தெரிவு செய்யப்படுவது எந்த விதத்தில்? இதில் கல்வியா, தொண்டா, சாதனைகளாக முக்கியத்துவமத் பெறுகின்றன?

பதில் - ஒரு மறைமாவட்டத்தில் ஆயருக்கான தேவை ஏற்பபடும் பட்சத்தில் பாப்பரசரின் பிரதிநிதியாகிய பேராயர் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்வார். அம்பாறை மாவட்டத்தில் யார் ஆயராகப் பணியாற்றத் தகுந்தவர் என்ப தையறிய இலங்கையின் அனைத்து ஆயர்கள், அம்மறைமாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய குருமார், துறவறத்தோர் மற்றும் பொது நிலையினரிடமிருந்து பெயர்களைக் கேட்டறிவார். இவைகளிலிருந்து திருச்சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவான வகையில் மூவரின் பெயரைத் தெரிவு செய்து, அவர்களின் குடும்பப் பின்னணி, ஆன்மீகம், கல்வி, ஆரோக்கியம், தொண்டு மனம், தொண்டாற்றும் ஆற்றல், அடுத்தவருடனான ஆளுமை வழிநடத்தும் ஆற்றப் நிர்வாகத்திறமை என்று பல விடயங்களையும் ஆராய்ந்து பார்ப்பார்.

இறுதியாக ஆயர் மன்றத்திலும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு வத்திகானிலுள்ள ஆயர்களுக்கான தெரிவுக் குழுவுக்கு அனுப்பிவைப்பார். அக்குழுவானது இப்பரிந்துரைகளை உள்வாங்கி மேலும் கருத்துக்கள், ஆலோசனைகள் பெறவேண்டுமாயின் உரியவர்களோடு தொடர்புகொண்டு முடிவுகளையெடுத்து, இறுதி முடிவுக்காக பாப்பரசரிடம் கையளிக்கும்.

அவரும் அதனைப் பரிசீலனை செய்து தமது முடிவினை கொழும்பிலுள்ள அவரது பிரதிநிதியிடம் அனுப்புவைப்பார். உரிய காலத்தில் அப்பிரதிநிதி, ஆயராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் குருவானவரை அழைத்து அவரது சம்மதத்தையும் பெற்றுக் கொள்வார். பின்னர் இம்முடிவை அக்குருவானவர் பணிசெய்யும் மறைமாவட்ட ஆயர் தமது குருமாருக்கும் துறவறத்தோருக்கும், மற்றும் பொதுநிலையினருக்கும் பகிரங்கமாக அறிவிப்பார். அதுவரை நடைபெற்ற இத் தெரிவுவுக்கான ஆயத்தங்கள்யாவும் இரகசியமாகவே பேணப்படும்.

கேள்வி - தங்கள் இளமைப்பருலம் குறித்துச் சொல்லுங்களேன்?

பதில் - திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரில் சாதாரணதரம், உயர்தரம் முடித்துவிட்டு, பின்னர் கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடங்களில் எனது மெய்யியல், இறையியல் கல்வியை முடித்துக் கொண்டு 1986மே மாதம் 21ஆம் நாளன்று குருவா திருநிலைப்படுத்தப்பட்டேன். எனது குருத்துவ வாழ்வின் ஆரம்பகாலம் மிகவும் சவால்கள் நிறைந்ததாகும். 1986முதல் 88 வரை மட்டு. புனித மரியாள் இணைப்பேராலயத்தில் உதவிப் பங்குத் தந்தையாக அருட் தந்தை சந்திரா பெர்ணான்டோவுடன் பணியாற்றினேன்.

 சமாதானத்தின் காவலன்” என்றழைக்கப்பட்ட மக்கள் சேவையாளன் அருட்தந்தை சந்திரா 1988இல் இனந் தொரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அது மறைமாவட்டத்திற்கே பேரதிர்ச் சியாகவும் பேரிழப் பாகவும் இருந்தது. உதவிப் பங்குத்தந் தையான எனது பணி பெரும் ஆபத்தானதாக இருந்தது. 1989இல் அக்கரைப் பற்றுக்கு மாற்றலாகிச் சென்றேன். 1990 இல் நிகழ்ந்த தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் அப்பகுதியைப் பெரிதும் பாதிக்க, ஆலயத்தில் தங்க முடியாமல் பாதுகாப்பிற்காக மக்கள் வீடுகளில் தங்கவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. 1996முதல் 99வரை அப்போது புலிகளின் கோட் டையாயிருந்த ஆயித்தி யமலை பங்குத்தளத்தில் இராணுவத் தாக்குதல்களுக்கு மத்தியில் பணி செய்ததும் ஒரு திகிலான அனுபவம். இவ்வாறு குருத்து வப் பணியில் பெரும் பகுதியை போர்க்கால சூழலில் சவால்களுக்கு மத்தியில் இறை வன் துணையோடு மக்களுக்கான பணியில் கழித்தது மறக்க முடியாத அனுபவம்.

கேள்வி - குருவானவராகும் தகுதிக்கு தங்களை ஊக்குவித்தது எது? வழிநடத்தியவர் யார்?

பதில் - என் தாய் தந்தையரின் விசுவாச வாழ்வே இதற்குமுதற் காரணம், நானொரு குருவாக ஆகவேண்டுமென்று ஆறு வயதிலேயே என்னுள் சுடர்விட்ட ஆர்வத்தை என் பெற்றோரும், எனக்கு வாய்த்த ஆசான்களும், மற்றும் உறவினர்கள், நண்பர் களும் அணையாது பாதுகாத்து மேலும் ஊக்குவித்து உதவினர். அவர்கள் என்றென்றும் என்னால் நன்றியோடு நினைவு கூரத்தக் கவர்கள்.

கேள்வி - தங்களது மூன்று தசாப்தகால குருத்துவ வாழ்வில் தங்கள் பணியை அர்த்தப்படுத்திய, மனநிறைவு கொள்ள வைத்த சம்பசவங்கள் அல்லது சாதனைகள் ஏது முண்டோ?

பதில் - போர்க்கால சூழலில் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து கைதான இளைஞர்கள் பலரை விடுவித்திருக்கிறேன். காணாமல் போனவர்களை தேடும் பணியில் விழிப்புக் குழுக்களினூடாக இன்றுவரை ஈடுபட்டு வருகிறேன். மக்களுக் காக மக்களில் அக்கறைகொண்டு பணியாற்றிய காலங்களை என்னால் மறக்க முடியாது.

அடுத்து, 2001 முதல் 2011 வரை கண்டி தேசிய குருமடத்தில் விரிவுரையாளராகயிருந்து குருத் துவ மாணவர்களை வழி நடத்திவந்திருக்கிறேன். இன்று நாடெங்கிலுமுள்ள குருவான வர்களில் பலர் என்னிடம் மாணவர்களாய் இருந்தவர்களே, மேலும் குருமடத்தில் 2001- 2009 காலப்பகுதியில் “தாகம்” என்னும் நாளாந்த சிந்தனைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டு வந்துள்ளேன்.

இது தொடர்பில் மேலும் 28 நூல்கள் காலாண்டுச் சஞ்சிகைகளாக வெளியிடப் பட்டன. தேசிய குருமடத்தில் எனக்கிடப்பட்ட பணிகளோடு இத்தகைய நூல்களையும் வெளியிடுவது மிகவும் சவால் நிறைந்த விடயம். அப்போது நானிருந்த சூழலில் என்னைப் பொறுத்தவரை இது சாதனை தான்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.