மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
தமிழர்களுக்கு நாகரிகமான தீர்வொன்று கிடைக்கும் வரை எதிர்க்கட்சியில் இருப்பேன்

தமிழர்களுக்கு நாகரிகமான தீர்வொன்று கிடைக்கும் வரை எதிர்க்கட்சியில் இருப்பேன்

உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை - சம்பந்தன்

உள் நாட்டு விசாரணையில் எமது மக்கள் நம் பிக்கை இழந்துள்ளனர். அவை ஒழுங்கானதும் நீதியானதுமாக இடம்பெறாது, பெறவும் இல்லை என்பதற்கு திருகோணமலையில் இடம் பெற்ற 05 மாணவர்களின் படுகொலை மற்றும் மூதூர் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் கொலை போன் றவற்றிற்கு அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவில் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் செயற்பட்ட போதும், அவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் நீதியான விசாரணையை மேற்கொள்ள முடியாது என சில மாதங்களில் வெளியேறியுள்ளனர்.

இவ்வாறான அனுபவங்கள் மூலம் உள் நாட்டு விசாரணையில் எமது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். எனவே சல்வதேச விசாரணையையே நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை 19ம் திகதி காலை திருகோணமலை குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் திரியாய் பாடசாலையில் இடம்பெற்ற பிரச்சினை வெளிப்பாட்டுக் களத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இவர் தொடர்ந்து உரையாற்றும் போது நான் முதலில் திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர், அதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவை இரண்டின் மூலமே எனக்கு எதிர் கட்சித்தலைவர் பதவி கிடைத்தது. என்னுடைய 33 வருட பாராளிமன்ற அனுபவத்தில் நான் எதிர்க் கட்சியிலே உள்ளேன். எனவே இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது நீண்டகாலம் எதிர்க்கட்சியில் இருந்தமையால் நான் இதற்கு பொருத்தமானவன் என எண்ணுகின்றேன்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, ஏனைய நாடுகளில் வழங்கப்பட்டுள்ளவாறான நாகரிகமான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை நான் எதிர்க் கட்சியிலேயே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.

முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் அவர் தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு ஒன்று கிடைப்பதற்கு விரும்பவில்லை. மாறாக இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுப்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைத்து இந்த நாட்டைவிட்டு குறிப்பாக இளைஞர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழர்களுக்கு இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்த எண்ணியிருந்தார். அவ்வாறு இன்று இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் எமது மக்கள் பத்து இலட்சத்திற்கு மேல் வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

(அன்புவழிபுரம் தினகரன் நிருபர், வடமலை ராஜ்குமார்)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]