புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது.

ஒரு பக்கத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில் ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல்.

இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லிப் பயணத்தின் போது, இந்த விவகாரம் இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக பிரதமர் பதவியில் இருக்கிறார்.

ஆனால், அவர் முதல் முறையாக வெளிநாடு ஒன்றுக்கான அதிகாரபூர்வ பயணத்தை இப்போது தான் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார்.

கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை அடுத்து, அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

வழக்கமாக இலங்கையின் அரசியல் தலைவர்கள் பின்பற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ரணில் இந்தியா வுக்கே மேற்கொண்டிருந்தார். இலங்கையின் பிரதமர் என்ற வகையில் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் ரணில் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அதிகாரப் பூர்வபயணம் இது.

இந்தப் பயணத்தில், இருதரப்பு உறவுகள், வர்த்தக, பொருளாதார விருத்தி பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கிறது.

இவற்றுக்கு அப்பால் இந்தப் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றதற்குக் காரணம் ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கைதான். ஐ. நா. மனித உரிமைகள் ஆணை யாளர் பணியகம் போரின் இறுதிக்கட் டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்திய விசாரணையின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் தான் ரணில் புதுடில்லி சென்றிருந்தார்.

 

அதேவேளை, போர்க்குற்றச்சட்டுகள் தொடர்பாக, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றே அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.

அது, இந்தியாவின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட செவ்வியின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோள். அதிகார பூர்வமாக அத்தகைய எந்தக் கோரிக்கை யாவது இந்திய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. அதேவேளை, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தி, இந்தப் பொறுப்புக் கூறல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு இந்தியா வின் ஆதரவு இலங்கைக்கு அவசியமானது.

உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு ஆதரவாக ஜெனீவாவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கவின் புது டில்லிப் பயணத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால், ஜெனீவாவில் இந்தியாவின் பூரண ஆதரவைப் பெறும் சூழல், 2012ஆம் 2013ஆம் ஆண்டுகளில் முற்றாகவே இருக்கவில்லை.

எனினும், சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்ததால் மட்டும், ஜெனீவாவில் இந்தியா நடுநிலை வகித்தது. இம்முறை இந்தி யாவின் ஆதரவைப் பெறுவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முனைகிறது.

இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைப் பொறி முறைக்கு ஆதரவாக ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அணி திரட்டுவதன் மூலம், இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திர பலத்தை வெளிக் காட்ட எத்தனிக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் ஜெனீவாவில் தோல்வியுற்ற நாடாகவே இலங்கை இருந்து வந்தது.

அந்த நிலையை மாற்றியமைப்பதன் மூலம், புதிய அரசாங்கம் சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் தனது நன்மதிப்பை மேலும் உயர்த்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அதற்கு இந்தியாவின் ஆதரவும் அனுசரணையும் மிக அவசியம். அதனை மனதில் கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதேவேளை சர்வதேச விசாரணைப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பை புதுடில்லியிடம் முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதற்கான இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும் என்பது தெரிந்தே இருக்கும்.

ஆனாலும் அவர்களால் இத்தகையதொரு கோரிக்கையை விடுக்காமல் தவிர்த்திருக்க முடியவில்லை. ஏனென்றால் அது அவர்களின் கடப்பாடு பொறுப்பு. அவ்வாறாயின் இம்முறை ஜெனீவாவில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறானதாக அமையும். நிச்சயமாக இந்தியா சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை.

அதனை இந்தியா கடந்த 2014ஆம்ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின்போதே தெளிவாகக் கூறிவிட்டது. சர்வதேச விசாரணை ஒன்று இலங் கையில் முன்னெடுக்கப்படுவதை இந்தியா விரும்ப வில்லை.

அதற்கு மூன்று காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார் இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென். இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால், அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி, காஷ்மீரில் இந்தியப் படைகளின் மீறல்கள் குறித்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கிறது.

தனது அயல் நாடான வலுவான நட்புறவையும் நெருக்கத்தையும் கொண்ட இலங்கையில், சர்வதேச விசாரணைக்கு இடமளிப்பது இலங்கையுடனான உறவைக் கெடுத்துவிடும் என்பது இரண்டாவது காரணம்.

இந்தியா தனது செல்வாக்கைப் பலப்படுத்த வேண்டிய பகுதியில் உள்ள இலங்கையில், சர்வதேச தலையீட்டுக்கு இடமளிக்க முடியாது என்பது மூன்றாவது காரணம்.

இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் தான் சர்வதேச விசாரணைக் கோரிக்கையை மோடி அரசாங்கம் ஆதரிக்காது என்று கூறியிருந்தார் நிருபம் சென்.

ஆனால் நான்காவது காரணம் ஒன்றும் உள்ளது. அதுதான் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இறுதிக்கட்டப் போரில் இந்தியாவின் வகிபாகம்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான இறுதிக்கட்டப் போரில் இந்தியா மறைமுகமான பங்கை ஆற்றியிருந்ததான குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படும் நிலை ஏற்பட்டால், அதில் இந்தியாவின் வகிபங்கை அது பற்றிய இரகசியங்களையும் வெளிப்படுத்தும் நிலை ஒன்று ஏற்படலாம் என்ற அச்சமும் இந்தியாவுக்கு இருக்கிறது என்பதை நிருபம் சென் கூறவில்லை. அவர் அதனைக் கூற மறந்திருப்பார் என்று நினைக்கவில்லை.

அதனைக் கூற முற்பட்டால் இ ந்தியாவின் வகிபங்கை ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்பதால்தான். அவர்அதனை மறைத்திருக்கலாம். இத்தகைய கட்டத்தில் இலங்கையில் சர்வதேச தலையீடுகள் ஏற்படுவதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. எனவே, உள்ளக விசாரணைக்கு சாதகமாக ஜெனீவாவில் தீர்மானம் ஒன்று கொண்டுவரும் போதும், இந்தியா அதற்குச் சாதகமாக நடந்து கொள்ளுமே தவிர, எதிராகத் திரும்பாது.

மதன் -

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.