புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
விடியலைத்தேடும் தமிழினம்

விடியலைத்தேடும் தமிழினம்

பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடர் நேற்று முன்தினம் ஆரம்ப மாகியது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் உரை, இலங்கை அரசாங்கத்தின் முழுமை யான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரை என கூட்டத் தொடரின் ஆரம்ப நாளே அமர்க்களமாக அமைந்திருந்தது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் இங்கு நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, நடைபெறவுள்ள பல விடயங்களைச் சுட்டிக்காட்டி உள்ளகப் பொறி முறைக்கான சர்வதேசத்தின் ஆதரவைக் கோரியிருந்தார்.

குறிப்பாக தேசிய அரசாங்கம், புதிய ஆட்சி, எதிர்க்கட்சித் தலைவர், பிரதம நீதியரசர் பதவிகளில் தமிழர், நல்லிணக்கச் செயற்பாடுகளில் கடந்த கால தோல்விகள், பயங்கரவாதம், இனவாதம் தோற்கடிக்கப் பட்டமை, அரசமைப்பின் வரையறைக்குள் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதிக்கும்.

மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்து வதற்கும் நட்டஈட்டிற்குமான நம்பகத்தன்மை, மிக சுயாதீனமான பொறிமுறைகளை ஏற்படுத்தும் திட்டத்தின் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களுக்கான தீர்வு, குற்றங்களுக்கு தண்டனை அளிக்கவென உள்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்தல், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, காணாமற் போனவர்கள் குறித்து ஆராய அலுவலகம், நீதித்துறை பொறிமுறைக்காக விசேட ஆலோசனை குழு, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கு வதற்கான அலுவலகம், இராணுவத்தின் மீதுள்ள நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை, நீதி மன்றும் நிர்வாகத்துறை மறுசீரமைப்பின் முக்கியத்துவம் அதன் ஊடாக பொறுப்புக் கூறல், சட்டத்தை ஆட்சிப்படுத்தல், மனித உரிமை ஆணைக் குழுவை பலப்படுத்தல், சர்வதேச, துறைசார் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறல், விசேட அறிக்கையாளர்களை வரவழைத்தல், நபர்கள், அமைப்புக்கள் தொடர்பாக மீளாய்வு உள்ளிட்ட விடயங்களை தனதுரையில் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர் நீண்ட தூரம் பயணித்து விட்டதாகவும் தொடர்ச்சியான பயணத்திற்கு நம்பிக்கையுடன் இணைந்து கொள்ளுமாறும் கோரியிந்தார்.

நீதியை நிலைநாட்டல், பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், அரசியல் தீர்வு போன்ற விடயங்களை தமது அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள் ளதாக வெளிவிவகார அமைச்சர் தனது உரையில் காலவரையறையின்றி குறிப்பிட் டுள்ள விடயங்கள் முழுமையாக செயல் வடிவம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

அதேநேரம் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளும், இத்தனை காலம் தமிழ்ச் சமூகம் திடீரென இத்தனை வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் கேள்விக் குறியே.

இதுவொரு புறமிருக்கையில் முதலாவ தாக, பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அது அவசியமானதாகும் என குறிப் பிட்டிருந்தார்.

1948ம் ஆண்டு இலங்கைத் தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மூவினத்தைச் சேர்ந்த தலைவர்களின் அர்ப்பணிப்புக்கள் காத்திர மாக இருந்தன. குறிப்பாக சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி ஒவ்வொரு சமூகமும் நிகரான பங்களிப்பையே வழங்கியிருந்தன.

ஆனால், அந்த வரலாற்று உண்மையை மறுதலித்த சிங்கள அரசியல் சமூகம் திட்டமிட்ட தமிழின ஒடுக்கு முறையை கையிலெடுத்தது. இந்த நாட்டின் விடுதலையில் தமிழினத்திற்கு பங்களிப்பே இல்லை, தமிழினம் இந்த நாட்டிற்கு உரித்துடையவர்கள் அல்லர், இந்த நாட்டை சொந்தங் கொண்டாட முடியாது, தமிழினம் வந்தேறு குடிகளே போன்ற நிலைப்பாட்டில் அழுத்தந்திருத்தமாக இருந்து தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தது. இதனால் தமிழினத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டன, அடக்கு முறைக்குள் மெளனிக்க வேண்டிய சூழல் உருவெடுத்தது, இன முறுகல்கள் ஏற்பட்டன.

அதன் விளைவாக தமிழர்களின் தந்தை செல்வநாயகம், தளபதி அமிர்த லிங்கம் தலைமையில் காலக்கிரமத்தில் அறவழிப் போராட்டங்கள் எழுச்சிய டைந்தன. அவையும் நசுக்கப்படவே பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் தனி நாட்டு அறைகூவல் விடுக்கப்பட்டது.

1983ல் கோரமான இனக்கலவரமொன்று அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னரான காலப்பகுதியில் உரிமைகளைப் பெற்று விடுதலையடைவதற்காக முன்வந்த இளைஞர்கள் ஆயுதமேந்தினார்கள். பல் வேறு இளைஞர் குழுக்கள் ஆயுதமேந்திய போதும் ஒரு தரப்பினரே முப்படையையும் கொண்ட அமைப்பாக விளங்கி போராட்டத்தைத் தொடர்ந்தது.

மாறிவந்த உலக அரசியல் ஒழுங்கில் பெருமெடுப்பில் காட்டப்பட்ட அத்தரப்பைக் கட்டுப்படுத்த முனைந்தே இத்தனை வலிகளும் வடுக்களும் இன்று ஏற்படுத் தப்பட்டுள்ளன.

அதேநேரம் சர்வதேசத்தில் வியட்நாம், கொசோவா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, எல்சல்வடோர், நிகரகுவா, சூடான், திமோர் உட்பட பல நாடுகளில் உரிமைகளுக்காக போராடிய மக்கள் கூட்டத்தின் போராட்டங்களை நசுக்க முனைந்ததன் காரணத்தாலேயே அவை ஆயுத ரீதியிலான போராட்டங்களை முன்னெடுத்தன.

சுதந்திரத்தின் பின்னர் நல்லிணக்கச் செயற்பாடுகள் தோல்வியடைந்திருக்கின்றன. அரசியலமைப்பின் வரையறைக்குள் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதிக்கும், மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்து வதற்குமுரிய நடவடிக்கைகள், இராணு வத்தின் ஒரு சில பதவிகளின் பொறுப்புக் களின் முறைமை காரணமாக நன்மதிப்பு பாதிக்கப்பட்டது என அமைச்சர் குறிப்பி ட்டிருக்கின்றார்.

குறிப்பாக சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைமைகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என்பனவற்றை நல்லிணக்கத்திற்கான அடித்தளங்களாக கருதுவோமாயிருந்தால் அவை முழுமை யடையாமையை ‘தோல்வி நிலை’ எனக் கொள்ள முடியும்.

இங்கு இடம்பெற்ற விடயங்கள் மீள நிகழாமலிருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகக் கூறியிருப்பதன் மூலம் நீதிக்கு புறம்பாகவும் மனித குலத்துக்கு எதிரான விடயங்கள் இடம்பெற்றன என்பதை நேரிடையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

அதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்புக் கூறலை புறந்தள்ளியதன் காரணமாகவே நன்மதிப்பு பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் ஏற்றுள்ள வெளிவிவகார அமைச்சரின் உரை அது தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்பதையும் உணர்ந்து அதற்குரிய கருமங்களை வெளிப்படுத் தியிருக்கின்றார்.

கடந்த ஆட்சியாளர்களை விடவும் ஜனவரி எட்டாம் திகதிக்கு பின்னரான நிலைமைகள் மென்போக் கடைந்துள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் எனினும் தமிழ்த் தலைமை களுக்கு கிடைத்த பதவிகள், அவற்றின் செயற்பாடுகள் என்பனவற்றை அரசாங்கம் முன்னிலைப்படுத்தி அதனை நல்லிணக்க செயற்பாடுகளின் அங்கங் களாக அர்த்தம் கற்பிக்க முயல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள விசாரணை அறிக் கையில் பல்வேறு பாரதூரமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் அதனைத் தொடர்ந்த சர்வதேச நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் மாற்றம் என்பன ஐ.நா உட்பட மனித உரிமை அமைப்புக்கள் இலங்கையை வலியுறுத்தும் அல்லது அழுத்தமளிக்கும் விடயங்களில் பாரிய தாக்கம் செலுத்தும் என்பது கண்கூடு.

எனவே, நல்லிணக்கச் செயற்பாடுகள் என்பது வாழ்வதற்கான உரிமைகளை உறுதிப்படுத்தல், மொழி, மத உரித்துக்களை உறுதிப்படுத்தல், நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையின் அடிப்படையில் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பக்கச் சார்பின்றி சர்வதேச நியமங்களின் கீழ் நீதியை வழங்கல், மனிதாபிமான, மனித உரிமை மீறல்கள் மீள நிகழாமை என்பவற்றை உள்ள டக்கியதாக அமைய வேண்டும் அதன் ஊடாக மக்களின் துயரங் களிற்கு தீர்வைக் காணக்கூடிய வகையில் புரையோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை எட்ட வேண்டும்.

தற்போது இவ்விடயங்களில் ஒரு சில படிநிலைகளை இதய சுத்தியோடு அறிவித்திருக் கின்றமை உண்மையாகவி ருந்தால் ஆகக் குறைந்தது அவற்றையாவது குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நல்லி ணக்க பணிகளை பட்டியலிட்டு உடனடியாக அவற்றைச் செயல்படுத்திக் காட்ட வேண்டிய தேவை அரசாங்கத்திற்குள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.