புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
முழு நாட்டையுமே உலுக்கியுள்ள சிறுமி சேயா சந்தெவ்மியின் மரணம்

முடிவின்றித் தொடரும் சிறுவர் துஷ்பிரயோகம்

முழு நாட்டையுமே உலுக்கியுள்ள சிறுமி சேயா சந்தெவ்மியின் மரணம்

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமியின் மரணம் முழு நாட்டையுமே உலுக்கியுள்ளது. நம் நாட்டிலே சிறுவர் துஷ்பிரயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பலதரப்பிலும் இருந்து குரல் எழுப்பப்பட்ட போதும் அவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன எனலாம்.

இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தால் இவை குறைவடையலாம். நம் நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 4000க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கி இருப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆபாச தகவல்களை அல்லது காட்சிகளை (படங்கள்) ‘கூகுள்’ தேடலில் தேடுவதில் இலங்கையே முதலிடத்தில் இருப்பது நாம் அறிந்த உண்மையாகும். இரண்டாம் இடத்தை நமது அயல் நாடான இந்தியா பெற்றிருப்பதோடு, முதல் பத்து இடங்களில் சார்க் நாடுகளில் ஐந்து நாடுகள் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு கையடக்கத்தொலைபேசிகள், இணையத்தளங்கள் போன்றவை வழியேற்படுத்திக் கொடுப்பது மட்டுமல்லாமல், நமது பெண்கள் அறைகுறையாக ஆடையணிவது, வெளியுலகுக்கு கவர்ச்சி காட்டுவது போன்றவையும் இக்கொடூரத்தின் பக்கம் வாலிபர்களை ஈர்க்கச்செய்கிறது.

கம்பஹா மாவட்டத்தில் கொட்டதெனியாவ, படல்கம, அக்கரங்கஹ பகுதியில் வசித்த ஐந்து வயதுடைய சேயா சந்தெவ்மி தனது தாயின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் கடத்தப்பட்டு அடுத்த நாள் வீட்டுக்கு சிறு தூரத்தில் உள்ள நீரோடையொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது அனைவரையுமே கண் கலங்கச்செய்துள்ளது.

இப்படுகொலை தொடர்பாக பொலிஸார் நடாத்தும் விசாரணைகள் மூலம் தெரியவந்ததாவது, கொட்டதெனியாவ, படல்கம, அக்கரன்கஹ என்ற இடத்தில் உபுல் நிஷாந்த (மரணமான சிறுமியின் தந்தை) அவனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இதில் சேயா சந்தெவ்மி இரண்டாவது பிள்ளை. சந்தெவ்மிக்கு அண்ணனும் ஒரு தங்கையும் இவர்களுடன் பாட்டனும் பாட்டியும் கூடவே வசித்தனர்.

சம்பவ தினம் செப்டெம்பர் 11ம் திகதி:

உபுல் நிஷாந்த வழமை போல் தனது தொழிலாக செய்யும் ஆடைத்தொழிற்சாலை யுவதிகளை வேலை முடிவுற்றதும் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல அவனது வானில் புறப்பட்டுச் சென்று விட்டான்.

பாட்டனும் பாட்டியும் மினுவங்கொடை புழுகஹமுல்லை என்ற இடத்தில் மரண வீடொன்றுக்கு சென்று விட்டனர். அயல் வீட்டு வானொன்றில் மரணவீட்டுக்குச் சென்ற இவர்கள் இரவு 10.05 மணியாகும் போது வீடு திரும்பினர்.

வீட்டில் பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த உபுல் நிஷாந்தவின் மனைவியான 37 வயதுடைய சமந்தி ரேணுகா (கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய்) இரவு உணவு உட்கொண்ட பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மூழ்கியிருந்தாள்.

அதில் வர்த்தக இடைவேளை ஒன்று வந்தவுடன் தனது பிள்ளைகளைப் பார்த்தாள் மூவரும் கதிரையில் அமர்ந்தவாறே ஆழ்ந்த நித்தரையில் இருந்தனர். ரேணுகா மூன்று பிள்ளைகளையும் தூக்கிச்சென்று கட்டிலில் போட்டு, நுளம்பு வலையையும் போட்டு அவளும் நித்திரைக்குச் சென்றாள்.

நள்ளிரவை அண்மித்து வீடு வந்து சேர்ந்த உபுல் நிஷாந்த மனைவியை அழைத்துள்ளார். நித்திரையிலிருந்து எழுந்த ரேணுகா பிள்ளைகளைப் பார்த்தாள் அங்கு சந்தெவ்மியைக் காணவில்லை. சில சமயங்களில் சந்தெவ்மி தூக்கத்தை விட்டு எழுந்தால் பாட்டனும் பாட்டியும் உறங்கும் அறைக்குச் சென்று விடுவாள். அப்படி சென்றிருப்பாள் என நினைத்து நித்திரைக்கு சென்றுள்ளார்கள். இவ்வாறு கணவனும் மனைவியுமாக இருவரும் பொலிஸாருக்கு வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமி சேயாவின் தந்தை தனியார் ஆங்கில கல்வி நிலையமொன்றில் ஒரு போதனாசிரியராக பணியாற்றுவதுடன், தனக்கு சொந்தமான வானில் வாடகைக்கு செல்வது, ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் யுவதிகளை பணிக்காக அழைத்து வருவது, வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது போன்றவற்றை தனது தொழிலாக செய்து வருபவர்.

இவர் நீர்கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற அரச கல்வி நிறுவனமொன்றில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக குற்றச்சாட்டில் 2014ம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களது வீட்டில் ஒரே இடத்தில் இருந்த யன்னலில் ஒரு யன்னலுக்கு மாத்திரம் இரும்புக்கம்பி வலை பொறுத்தப்படாமல் இருப்பதும், சம்பவ தினம் கூட அந்த இரும்புக் கம்பி வலை பொறுத்தப்படாத யன்னல் மாத்திரம் திறந்து வைக்கப்பட்டிருந்ததும் பொலிஸாரின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரஸ்தாப யன்னல் இரவு மூடப்பட்டதா இல்லையா என தனக்கு சரியாக நினைவில்லை என சிறுமியின் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார் வீட்டு முன் வாசல் கதவு மூடப்பட்டிருந்ததும் அது தாளிடப்படாமல் இருந்ததும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சிறுமி கடைசியாக அணிந்திருந்த (கவன்) ஆடை உறங்கிய கட்டிலில் இருந்ததும், சிறுமியின் உள்ளாடை கட்டிலின் மெத்தைக்கு கீழ் இருந்ததும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இது விசாரணையை திசை திருப்பச் செய்யப்பட்டவையா? எனவும் பொலிஸார் கவனத்தில் கொண்டுள்ளனர்.

சிறுமி கடைசியாக அணிந்த உடையை மோப்பமிட்ட பொலிஸ் மோப்ப நாய் வீட்டிலிருந்து வெளியில் சென்று சுமார் 70 மீற்றர் தூரத்தில் உள்ள கொங்க்ரீட் செப்பனிடப்பட்ட பாதைவரை சென்று அது மீண்டும் வீட்டின் பின்பகுதிக்கே வந்து நின்றுள்ளது. கொங்க்ரீட் பாதையில் சம்பவத்திற்கு முன் தினம் இரவு வெள்ளை நிற வானொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

இரவு எந்த சத்தமும் கேட்கவில்லை என்றும், யாராவது வந்தால் நாய் குரைக்காமல் இருக்காது, இது கூட மெளனமாகியது ஏன்? அடைக்கப்படாத யன்னல் வழியாக வந்தவர்கள் எனது பிள்ளையை கொண்டு சென்றார்களோ? என தாய் சமந்தி ரேணுகா (37) புலம்பினார்.

சிறுமி சேயா வீட்டில் இல்லாதது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பாட்டன் பலகலகே தயாரத்ன (59) பொலிஸில் முறைபாடு செய்தார். கொட்டதெனியாவ பொலிஸார் உடன் செயல்பட்டனர். பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு பொலிஸார் தேடுதல் முயற்சிகளை முன்னெடுத்தனர். நீர் கொழும்பு பகுதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர அபேசிவிக்ரமவின் பணிப்பில் தேடுதல் பணிகளில் அயல் பொலிஸ் நிலையங்களான கட்டான, திவுலப்பிட்டிய பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.

சிறுமியை பல இடங்களிலும் தேடியும் பலனில்லை என்ற நிலையில் பொலிஸாருடன் பொதுமக்கள் கெஹெல்எல்ல மயானத்திற்கு அருகில் தேடினர். பின்னர் தென்னந்தோட்ட பகுதியில் தேடியுள்ளனர். அங்கு பாயும் நீரோடை பக்கமாக பொதுமக்கள் மூன்று பொலிஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சிறுமியின் பிரேதத்தை அங்கு மீட்டனர்.

கழுத்தில் பிடவை நாடாவினால் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டி ருக்கலாம் என்ற சந்தேகத்துடன் மீட்கப்பட்ட சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரிக்கு பிரேதச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் அதன் அறிக்கை பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு ஆஸ்பத்திரியின் பிரதான சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ரூகுல்ஹக் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தந்தை, பாட்டன் ஆகி யோரிடம் பொலிஸார் வாக்கு மூலங்கள் பதிந்துள்ளார்.

இக்கொடூரக் கொலையைக் கண்டித்தும், இக்குற்றத்தைப் புரிந்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் மரண தண்டனை விதிக்குமாறும் கோஷங்களை எழுப்பி மக்கள் நாட்டின் பல இடங்களிலும் தினமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நான் ஷரீஆ சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததில்லை. ஆனால் இக்கொடூரத்தை புரிந்தவர்களுக்கு நிச்சயம் ஷரீஆ தீர்ப்பு தான் சரியான பதில் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவுத்துள்ளார்.

 இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் இரகசிய பொலிஸாரிடம் வேண்டுகோள்விடுத்துள் ளார்.

தற்போது இது குறித்து விசாரணை செய்யும் பொறுப்பு, குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.