புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
அகதிகளும் படகு விபத்துகளும்...

அகதிகளும் படகு விபத்துகளும்...

 

 

 

 

 

 

 

 

டகாக இருந்தாலும் சரி, பரிசலாக இருந்தாலும் சரி, பயணத்தின்போது உயிர் காக்கும் ஆடை அணிய வேண்டும். படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆள்களை ஏற்றக் கூடாது, படகுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் உள்ளன.

ஆனால், இந்த விதிமுறைகளை படகு உரிமையாளர்கள் யாரும் கடைப்பிடிப்பதில்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

அரசையும், அதிகாரிகளையும் குறைகூறும் அதேவேளையில், நாம் என்ன செய்கிறோம் என்பதையும் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

படகில் செல்லும்போது, உயிர் காக்கும் சாதனங்கள் உள்ளனவா, படகு நல்ல நிலையில் உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு பயணிகளுக்கும் உள்ளது.

சுற்றுலாப் பயணிகள், வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வரும் அகதிகள், அதிகமான கூட்டத்தைக் கண்டு, படகு கிடைத்தால் போதும் என்ற அவசரத்தில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் படகுப் பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்ற விபத்துகளில் சிக்கும்போதுதான் தங்களது தவறுகளை உணர்கின்றனர்.

இந்தப் படகு விபத்துக்களில் சிக்குபவர்கள் பெரும்பாலும் அகதிகள்தான். ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குத் தப்பிச் செல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணம் மட்டும்தான் அவர்கள் மனதில் இருக்கும்.

இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் படகு உரிமையாளர்கள் அகதிகளிடமிருந்து கூடுதல் தொகையைப் பெற்றுக் கொண்டு, பாதுகாப்பில்லாத பயணத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றனர்.

நிகழாண்டு மட்டும் (கடந்த ஜனவரி முதல்) படகு விபத்துக்களில் பலியான அகதிகளின் எண்ணிக்கை 13,000 இருக்கலாம் எனத் தெரிய வருகிறது. லிபியாவில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக, அந்த நாட்டு மக்கள் அருகே உள்ள இத்தாலி, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இதுபோல், கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி லிபியாவிலிருந்து இத்தாலிக்கு தஞ்சம் புகச் சென்ற சுமார் 700 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். டைட்டானிக் கப்பல் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம் என்று ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் தெரிவித்தார்.

இச்சம்பவம் நிகழ்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு இரு படகுகள் விபத்துக்குள்ளானதில் 450 பேர் உயிரழந்தனர். நிகழாண்டு மட்டும் லிபியா, இத்தாலி இடையிலான கடல் பகுதியில் சுமார் 2,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதேபோல், இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குத் தஞ்சமடையச் செல்லும் அகதிகளும் ஆபத்தான பயணம் மேற்கொண்டு உயிரிழப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.

அடுத்ததாக, படகு விபத்தில் உயிரிழப்பவர்களில் அதிகம் பேர் சுற்றுலாப்பயணிகள், கொச்சியில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சுற்றுலாப் படகுடன் மீன்பிடிப்படகு மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஜூலை 22ஆம் திகதி எகிப்து நாட்டில் நைல் நதியில் படகு சுவாரி செய்த 19 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவுக்கு அருகே பத்மா ஆற்றில் கடந்த ¦ப்ரவரி 22ஆம் திகதி படகு கவிழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் யாங்டிஜ் நகரில் கடந்த ஜனவரி 17ஆம் திகதி சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவில் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி நிகழ்ந்த படகு விபத்தில் 58பேர் உயிரிழந்தனர்.

மேற்கூறிய அனைத்து விபத்துகளும் நிகழாண்டு மட்டும் நிகழ்ந்தவை கடந்த பல ஆண்டுகளைக் கணக்கிட்டால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும்.

இந்த விபத்துகள் அனைத்தும் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்திருந்தாலும், இந்த விபத்துகள் அனைத்துக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. மேற்கண்ட படகு விபத்துக்களில் பயணம் செய்த யாரும் உயிர்காக்கும் ஆடை அணியாதது தான் உயிரிழப்புக்குக் காரணமாகும்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 30 ஆம் திகதி நிகழ்ந்த பரிசல் விபத்துக்கும் இதுபோன்ற அலட்சியமே காரணம். இந்த விபத்திலும் எல்லா விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன.

சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ரஞ்சித், தனது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் 9 பேருடன் ஓகேனக்கல்லுக்கு சுற்றுலாசென்றார். அருவியில் குளித்த அவர்கள், பரிசலில் சென்று அருவியில் அழகை சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு உயிர் காக்கும் கவசம் அணியாமல் பரிசலில் ஏறியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக சுற்றுலா சென்றதால் 9 பேரும் சேர்ந்து ஒரே பரிசலில் பயணம் செய்துள்ளனர்.

அதிக பாரம் காணரமாக அந்தப் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், பரிசல் ஓட்டி உள்பட 10 பேரும் நீரில் மூழ்கினர். இவர்களில் 3 பேரை பரிசல் ஓட்டி காப்பாற்றி விட்டார். ஆனால், ரஞ்சித் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற 6 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.

எனவே, அகதிகளாக இருந்தாலும், சுற்றுலா செல்பவர்களாக இருந்தாலும் பயணிகள் தங்களது பாதுகாப்பை முதலில் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே படகுப் பயணம் உள்ளிட்ட எந்தப் பயணங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் படகுகள் பராமரிப்பில் அதன் உரிமையாளர்களும் அக்கறை காட்ட வேண்டும். படகுகளின் பாதுகாப்புத் தன்மையை அரசும் அவ்வப்போது உறுதி செய்ய வேண்டும். படகுகளில் உயிர்காக்கும் சாதனங்களை கண்டிப்பாக இடம்பெறச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் படகு விபத்துகள் தவிர்க்கப்படும், பயணிகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.