புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்

நல்லவர் தாழ்வதும் தீயவர் வாழ்வதும்

உலகில்,

நல்லவர்கள் வாழ்வார்கள்,

கெட்டவர்கள் தாழ்வார்கள் என்பது பொதுவிதி

இது பொதுவிதியே தவிர, முழு விதியன்றாம்.

விதி என்று வந்துவிட்டாலே, விதிவிலக்கும் இருக்கத்தான் செய்கிறது.

அவ்விதிவிலக்குகளுக்கான காரணங்களை,

உறுதிபட எவராலும் உரைக்க இயலாது.

கெட்டவனுடைய நல்வாழ்வும், நல்லவனுடைய கேடும்,

அறிஞர்களால் இது ஏன் நிகழ்ந்ததென நினைக்கப்படும் என்றார்

வள்ளுவர்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

செவ்வியான் கேடும் நினைக்கப்படும் என்பது குறள்.

விதிபற்றி முன்பு பேசியபடியால்,

இவ்விதிவிலக்கு பற்றியும் பேச வேண்டும் போல் தோன்றுகிறது.

***

அந்த மனுஷன் நல்லவன் அவனுக்கு நல்ல சாவுதான் வரும் என்றும்,

இந்தளவு அநியாயம் பண்ணுறான்.

எக்கணம் இவன் நிம்மதியாய்ச் சாகமாட்டான். புழுத்துத்தான் சாவான்

என்றும்,

ஊரில் சிலரைப் பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அது முழுமையான உண்மை இல்லை.

ஒரு மனிதனின் மரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு,

அவன் நல்லவனா? கெட்டவனா? என்று நிச்சயம் கூற முடியாது.

***

துர்மரணம் ஏற்படுகிறவர்களெல்லாம் கெட்டவர்களாக இருந்தால்,

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவும்,

சுட்டுக்கொல்லப்பட்ட காந்தியும்,

யானை எறிந்து செத்த பாரதியும்,

புற்றுநோயால் இறந்த ரமண மகரிஷியும்

கெட்டவர்களாய் அல்லவா இருந்திருக்க வேண்டும்.

உத்தமர்களான இவர்களுக்குத் துர்மரணம் வாய்த்ததல்ல ஆச்சரியம்

பல கொடுமைகளைச் செய்தும்,

சிலர் துன்பமின்றி நல்ல மரணம் எய்துகிறார்களே.

அதுதான் அதைவிடப் பெரிய ஆச்சரியம்!

***

எனது தாயாரின் ஊருக்கு முதல் முதலில் நாங்கள் போனபோது,

ஊரே கண்டு நடுங்குகிற ஒரு வில்லன் அங்கு இருந்தான்.

சிவபாதம் என்பது அவனது பெயர்.

நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.

நல்ல உத்தியோகத்தில் இருந்தவன்.

ஆனால், தீய குணங்கள் அத்தனையினதும்,

உறைவிடமாய் அவன் ஆகியிருந்தான்.

***

ஒரு வகையில் அவன் எங்களுக்குச் சொந்தக்காரன்.

எங்கள் ஊர் ஐயனார் கோயிலின் முதல் உரிமை,

அவன் சந்ததியினருக்குத்தான் என்பார்கள்.

ஊரில் அவனோடு பேசவே எல்லோரும் அஞ்சுவார்கள்.

அவனைக்கண்டாலே, ஊரார் காததூரம் ஓடி ஒழிப்பார்கள்.

அவனைப் பற்றிய பல கொடிய கதைகள்,

உண்மையும், கற்பனையுமாக, ஊரில் உலா வந்தன.

எங்கள் வீட்டின் நேர் முன்புதான் அவனின் வீடும் இருந்தது.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாக்களில் காட்டுவது போல,

அவனையும், அவனது குடும்பத்தையும், ஊர் ஒதுக்கியே வைத்திருந்தது.

அவன் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல் வாழ்ந்து வந்தான்.

***

ஊருக்குத் தெரிய அவனுக்கு மூன்று மனைவிகள்.

முதலில் உறவுக்குடும்பத்தில் திருமணம் செய்திருந்தான்.

அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள்.

அடி, குடி என இவனது கொடுமைகள் தாங்காமல்,

அந்தப் பெண் தன் பிள்ளைகளோடு ஓடியே போய்விட்டாள்.

அதற்குப் பிறகு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்தான்.

அந்தப் பெண்ணோ சில நாட்களில் இறந்து போனாள்.

இவன்தான் கொன்றான் என்றும் அப்போது ஒரு பேச்சு அடிபட்டது.

***

பிறகு மூன்றாவதாகவும்,

வேற்று ஜாதிப் பெண்ணொருத்தியை அழைத்து வந்து,

வீட்டில் வைத்திருந்தான்.

அவளைத் திருமணம் செய்தானா இல்லையா? என்பது கூட,

ஊரில் எவருக்கும் தெரியாது.

***

அவளுக்கும் மூன்று பிள்ளைகள்.

கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில்,

அவள் அயல் பெண்களோடு,

கணவன் தனக்குச் செய்யும் கொடுமைகளைப் பகிர்ந்து கொள்வான்.

ஆனால், எங்கள் உறவுப்பெண்கள் சிவபாதத்தின் பயத்தில்,

அவளோடு பேசக் கூட விரும்பமாட்டார்கள்.

***

சிவபாதம் வேற்றூரிலிருந்து பல பெண்களை அழைத்து வந்து,

சில காலம் அவர்களோடு வாழ்ந்து விட்டு,

பிறகு அவர்களை தனது காணிக்குள்ளேயே கொன்று புதைத்து

விடுவான் என்றும்,

ஒரே நேரத்தில் பல பெண்களை வைத்திருந்தான் என்றும்,

அவர்களை அடித்தும் சுட்டும் கைகால்களை முறித்தும்,

வீட்டுக் கோழிக்கூட்டுக்குள் அடைத்து வைத்திருப்பான் என்றும்,

பல கதைகள் அப்பொழுது ஊருக்குள் உலாவந்தன.

பிற்காலத்தில் அவன் இல்லாமல் போன பிறகும் கூட,

மேற்கதைகள் உண்டாக்கிய பயத்தால்,

அவனது காணியை மலிந்த விலைக்குக் கூட,

யாரும் வாங்க முன்வரவில்லை.

***

நான் அப்போது ஓ.எல்.படித்துக்கொண்டிருந்தேன்.

அவனது வீட்டுக்காணி மட்டும்,

மாயாவியின் குகை போல எப்போதும் இருந்து வந்தது.

அவனது வயதான தாயும், தந்தையும் அவனோடு இருந்தார்கள்.

அவர்களை அவன் படுத்தியபாட்டுக்கு ஓர் அளவில்லை.

குடித்துவிட்டு வந்து வயதான தாய் தந்தையரின் மீது,

சுடுதண்ணியால் ஊற்றுவானாம்.

பெற்றோர் என்றோ, வயதானவர்கள் என்றோ பார்க்காமல்,

முள்முருக்கம் தடி முறித்து அடி அடி என்று அடிப்பானாம்.

சத்தம் போட்டு அழுதால் குரல்வளையை நெரிப்பானாம்.

அந்த பெற்றோர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில்,

சாப்பாட்டுக்கோப்பையை காலால் உதைவானாம்.

***

இதெல்லாம் அவனது மூன்றாவது மனைவி மூலம் கசிந்த செய்திகள்.

இந்தக் கொடுமை எல்லாம் அவளுக்கும் நடக்குமாம்.

அவள் ஒருத்திதான் தன் வறுமையின் காரணமாக,

சிவபாதத்தின் கொடுமைகளை எல்லாம் சகித்து,

தொடர்ந்து அவனோடு வாழ்ந்து வந்தாள்.

***

எங்களின் ஐயனார் கோயிலுக்கு,

அவன் தான் முதல் உரித்துக்காரன் என்று சொன்னேன் அல்லவா?

அவனது கொடுமைகளைக் கண்டு வெறுத்து,

ஊரார் எல்லாம் ஒன்று சேர்ந்து,

அவனுக்கு எதிராக கோர்டில் வழக்குப்போட்டு, (தொடரும்)

கோயிலை ஊருக்குப் பொதுவாக்கினார்கள்.

கோர்டில் தான் தோற்றுப்போனதை சகிக்க முடியாமல்,

யாரும் நினைக்க முடியாத ஒரு கொடிய காரியத்தை அவன் செய்தான்.

ஒரு நாள் இரவோடிரவாக ஓடு கழட்டி கோயிலுக்குள் இறங்கி,

அங்கிருந்த பெரிய ஐயனாரதும் சக்திகளதும் விக்கிரகங்களை,

சாக்கில் கட்டி தூக்கிக்கொண்டு போய்,

கோடரியால் அந்த விக்கிரகங்களைத் துண்டு துண்டாக வெட்டி,

இரவோடிரவாக யாரிடமோ கொண்டு சென்று விற்றுவிட்டான்.

மறுநாள் காலையில் விக்கிரகங்கள் காணாமல் போனது தெரிந்தவுடன்,

ஊரார் அவனைத்தான் சந்தேகப்பட்டனர்.

அவர்கள் பொலிஸ¤க்கு அறிவிக்க.

பொலிஸின் தேடலில் அந்த துண்டாடப்பட்ட விக்கிரகங்கள் கிடைத்தன.

சிவபாதம் ஜெயிலுக்குப் போனான்.

மறியலுக்குப் போய் திரும்பி வந்த பிறகும்,

அதே கொடுமைகளை விடாது செய்தான் அவன்.

எந்தக் கொடியவனுக்கும் பிள்ளைப்பாசம் இருக்கவே செய்யும்.

சிவபாதத்திற்கு அதுவும் இருக்கவில்லை.

தனது குழந்தைகளையும் அவன் படாதபாடு படுத்தினான்.

பச்சை மட்டையாலும், பாலைமட்டையாலும்,

அந்த பத்து வயது கூட ஆகாத சிறு பிள்ளைகளை,

ஒருநாள் அவன் மிருகத்தனமாய் அடித்ததை பார்த்து,

நான் நடுநடுங்கிப்போனேன்.

தந்தையின் முரட்டுத்தனத்திற்கு அந்தப் பிள்ளைகள் பழகியிருந்தார்கள்.

ஒருநாள் நான் கண்ணால் கண்ட காட்சி என்னை அதிர வைத்தது.

இந்தப் பிறவியில் அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது

அதென்ன காட்சி என்கிaர்களா? சொல்கிறேன்!

ஒருநாள் மதியம் ஒன்று ஒன்றரை மணியிருக்கும்.

சிவபாதம் நன்றாகக் குடித்துவிட்டு வந்து,

பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என எல்லோரையும் அடித்து

நொருக்கிவிட்டு,

வெறியில் முற்றத்திலிருந்த மாமரத்திற்குக் கீழ் மயங்கி விழுந்துவிட்டான்.

ஒருகால் நீட்டி ஒருகால் மடித்து,

உடுத்திருந்த சாறம் மேல் ஏறிக்கிடப்பது தெரியாமல்,

அலங்கோலமாய்க் கிடந்தான் அவன்.

அவனிடம் அடிவாங்கிய அவனது மூத்த மகன்.

தந்தை மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான்.

பிறகு சுற்றும் முற்றும் தன்னை யாராவது பார்க்கிறார்களா என

பார்த்தான்.

யாரும் தன்னை பார்க்கவில்லை எனத் தெரிந்த பின்,

மெல்ல எழும்பி அருகிலிருந்த சிரட்டை ஒன்றை கையில்

எடுத்துக்கொண்டு,

பக்கத்திலிருந்த முருங்கை மரத்திற்கு அருகில் சென்றான்.

அது நல்ல கோடை காலம்.

கறுத்தக்கம்பளியால் போர்த்தாப்போல,

முருங்கையின் அடி மரத்தை மசுக்குட்டிகள் மொய்த்துக் கிடந்தன.

அதன் அருகில் போன பையன்,

ஒரு தடியை எடுத்து,

தான் கொண்டு போன சிரட்டைக்குள்,

பத்துப்பதினைந்து மசுக்குட்டிகளைத் தட்டி எடுத்தான்.

பிறகும் ஒருதரம் சுற்றும் முற்றும் பார்த்தான்.

ஒருவரும் இல்லை என்று தெரிந்ததும்.

மெல்ல தந்தைக்கருகிலே சென்று,

திறந்து கிடந்த அவனது சாறத்திற்குள்ளே,

அந்த மசுக்குட்டிகளைக் கொட்டிய பின்,

சிரட்டையைத் தூர எறிந்து விட்டு,

ஓடிப்போய் தாயின் அருகிலே ஏதும் தெரியாதவன் போல்

படுத்துவிட்டான்.

அடுத்த வளவுக்குள் ஆட்டுக்கு தண்ணீர் வைக்க சென்ற நான்,

வேலி இடுக்கால் தெரிந்த அக்காட்சியைக் கண்டு,

விதிர்விதிர்த்துப் போனேன்.

இந்த இடத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த,

இன்னொருவர் பற்றியும் சொல்ல வேண்டும்.

அவருக்குப் பெயர் குலநாயகம்.

அவரை நாங்கள் குலநாயகம் அப்பு என்று தான் சொல்வோம்.

முறுக்கு மீசை, புகைக்கண்ணாடி, எந்த நேரமும் சிரித்த முகம்,

ஆறடி உயரம், வெற்றுடம்பில் ஒரு சால்வைத் துண்டு,

இவை அவரது அடையாளங்கள்.

சிவபாதம் எங்கள் ஊரின் துரியோதனன் என்றால்,

குலநாயகம் அப்புதான் எங்கள் ஊரின் தர்மன்.

எல்லோரையும் நேசிக்கிறவர் அவர்.

ஊரில் எவர் வீட்டில் ஒரு துன்பம் என்றாலும்,

அவர்தான் முதலில் நிற்பார்.

காலையில் கொக்கச்சத்தகத்துடன் புறப்பட்டு,

ஊர் முழுக்கச் சுற்றி வருவார்.

ஊரில் அங்கங்கே இருக்கும்,

நல்ல பொருட்கள் அனைத்தையும் பிடுங்கி வந்து,

வீடு வீடாய்க் கொடுப்பார்.

ஊரிலிருக்கும் அத்தனை பச்சிலைகளின் பெயர்களும் அவருக்கு

அத்துப்படி.

மனிதருக்கென்றில்லை ஆடு, மாடு, நாய், கோழி என்று,

எதற்கு நோய் வந்தாலும் அவரிடம் தான் ஓடுவோம்.

தன் கை வைத்தியத்தால் எல்லா நோயையும் துரத்துவார்.

மொத்தத்தில் ஊர் முழுவதினதும் அபாயரட்சகர் அவர்.

கோயில் விஷயத்தில்,

சிவபாதத்திற்கு எதிராய் வழக்குத் தொடுத்து,

கோயிலை மீட்டெடுப்பதில் முன் நின்றவர் குலநாயகம் அப்பு தான்.

கோயிலடியையே சுற்றிச் சுற்றி வருவார்.

கோயிலுக்குத் தேவையான தொண்டு அனைத்தும் செய்வார்.

எங்கள் ஐயனாரின் பரமபக்தர் அவர்.

இந்த இருவருக்கும் கட்டுரைத் தலைப்புக்கும்,

என்ன தொடர்பு என்று கேட்கிaர்களா?

அதைத்தான் சொல்லப்போகிறேன்.

தெய்வம், தந்தை, தாய், மனைவி, பிள்ளை என்று,

ஒருவரையும் மிச்சம் விடாமல், பெரும் கொடுமைகள் செய்த சிவபாதம்,

ஒருநாள் மத்தியானம் நன்றாகக் குடித்துவிட்டு,

மனைவி சமைத்து வைத்திருந்த ஆட்டிறைச்சிக்கறியை சாப்பிட்ட பின்,

முற்றத்திலிருந்த மாமரத்தின் கீழ் படுத்தவன்தான்.

ஆட்டம் அசைவில்லாமல் அவன் உயிர் பிரிந்துவிட்டது.

ஊரிலிருந்த எல்லோருக்கும் நன்மை செய்து,

ஆடு, மாடு, கோழி, மரம் என அத்தனையிலும் அன்பு காட்டி,

ஐயனார் கோயிலைச் சுற்றிச்சுற்றி தொண்டு செய்து வந்த

எங்களது தவநாயகம் அப்பு,

ஆறு மாதம் படுக்கையில் கிடந்து.

படுக்கையிலேயே மலசலம் கழித்து,

படுக்கைப்புண் வந்து வருந்தித்தான் செத்தார்.

புழுத்துச்சாவான், அழுந்நிச்சாவான், வருந்திச்சாவான் என்றெல்லாம்.

பலரிடமும் திட்டு வாங்கிய சிவபாதம்,

துன்பமோ, வேதனையோ இன்றி நிம்மதியாய்ச் செத்தான்.

அவனிடமிருந்து கோயிலை மீட்டெடுக்கவும்,

தெய்வத்தை மீட்டெடுக்கவும் படாதபாடு பட்டு,

ஊர் முழுவதற்கும் நன்மை செய்து,

ஊராரால் தெய்வப் பிறவி என்றும், நல்ல மனுசன் என்றும்,

கடவுள் அவதாரம் என்றும் பாராட்டப்பட்ட குலநாயகம் அப்பு,

கடும் துன்பத்திற்கும், வேதனைக்கும் ஆளாகி நிம்மதியின்றி இறந்து

போனார்.

இப்போது சொல்லுங்கள்.

ஒரு மனிதனின் மரணத்தை வைத்து,

அவனது வாழ்வை முடிவு செய்ய முடியுமா?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்,

செவ்வியான் கேடும் கூட,

உலகியற்கையில் இருக்கத்தான் செய்கிறது.

அதனால்தான் சொல்லுகிறேன்.

ஒரு மனிதனின் மரணத்தை வைத்து.

அவனது வாழ்வை தயவு செய்து முடிவு செய்து விடாதீர்கள்.

பழைய சினிமாப்பாடல் நினைவுக்கு வருகிறது.

நல்லவர் தாழ்வதும், தீயவர் வாழ்வதும்,

செய்வதேனோ? இது தர்மம் தானோ?

உலகியலிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

நல்லவன் தாழலாம். தீயவன் வாழலாம்.

அது விதிவிலக்குகளின் விதி!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.