புத் 67 இல. 38

மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06

SUNDAY SEPTEMBER 20 2015

 

 
நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரத்தை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்க்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்) இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.

பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த நேரத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிaர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்றால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.

நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.

நீங்கள் பசிக்காமல் மூன்று வேலையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது.

தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ.... அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

குறைந்த இரத்த அழுத்தமும் இதய பிரச்சினையை தடுக்குமாம்

குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லதென நம்பப்பட்டு வந்த நிலையில், குறைந்த இரத்த அழுத்தமும் இதய பிரச்சினையை தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே.மைக்கல் காஸியானோ தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.

இவர் தலைமையிலான குழு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட 9 ஆயிரத்து முன்னூறு பேரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில் குறைந்த இரத்த அழுத்தம் இதய பிரச்சினைகளை போக்கி மாரடைப்பை தடுக்கும் என தெரியவந்துள்ளது. இதுவே இத்துறையில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வாகும்.

இந்நிலையில் ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 120க்கும் கீழேயும், அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு 140 - 150 வரையும் இரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என இந்த மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கால் வீக்கம், நரம்பு சுருக்கமா?

அலட்சியம் காட்டினால் சிக்கல்

கால்களில் வீக்கம், நரம்பு சுருக்கம் இருந்தால் அலட்சியம் காட்ட வேண்டாம். அது இரத்தக் குழாய்களில் சிக்கலை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்கிறார், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனை, இரத்த நாள அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெயக்குமார்.

பிரச்சினைகள் குறித்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

1. இரத்த நாள பிரச்சினை என்றால் என்ன?

நல்ல இரத்தம் தமனி (arteries) வழியாகவும், கெட்ட இரத்தம், இதயத்திற்கு சிரை (veins) வழியாகவும் செல்கிறது. இந்த பகுதிகளிலும், திசுக்களுக்கு பிராண வாயு அல்லது சக்திக்கான பொருட்களை கொண்டு செல்லும் நுண்ணிய பிரத்தியேக குழாய்களிலும், மால் பார்மேசன் பாதிப்பு ஏற்பவதையே, இரத்த நாள பிரச்சினை எனப்படுகிறது.

2. அதனால், எந்த மாதிரியான பாதிப்பு வரும் இரத்தப் போக்கு இருக்கும் என்கிறார்களே?

தமனியின் இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, குழாயின் சுவற்றில் பலூன் மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தும். நாட்கள் ஆக ஆக பெரிதாகி, ஒரு கட்டத்தில் வெடித்து, இரத்தப்போக்கு ஏற்படும். சத்து, பிராண வாயுவை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருந்தால், அவற்றை சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கை, கால்கள், உறுப்புகளை அகற்றும் நிலையும் வரும்.

3. இதற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாமா?

இதயத்திற்கு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது போன்று, இரத்தக்குழாயின் அடைப்பை நீக்க, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யலாம். இரத்தக்குழாய் அடைப்பு உள்ள பகுதியில், நவீன முறையில் ஊசி மூலமாக, பலூனை செலுத்தி அழுத்தம் கொடுப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யலாம். குழாய் வெடித்து இரத்தப்போக்கு வந்தால், பாதிப்புள்ள பகுதியில், ஊசி வழியாக வலைப்பின்னல் (sented craft) ஒன்றை பொருத்தி, இரத்த ஓட்டத்தை சீரடையச் செய்து, மேலும் வீக்கம் அடையாத வகையில் சீரமைக்கலாம்.

4. பாதிப்புக்கு என்ன காரணம் மரபு சார்ந்த நோயா?

பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்தும், சரியான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மரபு ரீதியாக வரலாம் அதிக நேரம் நின்று வேலை செய்வோர், அதிக உயரம் உள்ளோருக்கும் இதுபோன்ற பாதிப்புகள் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதை இரண்டு வகையாக சொல்கின்றனர். ஒன்று, காரணம் இல்லாமல் வருவது. இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இரண்டாவது வகை, ஏதேனும் காரணங்களால் வருவது. டாப்ளர் பரிசோதனை மூலம் கண்டறியலாம். கால்களில் வீக்கம் ஏற்படுதல், கால்களில் நரம்புகள் சுருண்டு காணப்படுதல். இவற்றை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாது.

5. அலட்சியம் காட்டினால், உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும் என்று, கூறப்படுகிறதே?

கால் வீக்கத்தை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரத்தக்குழாயில் உள்ள கட்டி, இதயத்தை அடைத்துக் கொண்டு, நுரையீரல் செல்லும் இரத்தக்குழாய் வரை பாதிக்கும் என்பதால், சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அலட்சியம் காட்டினால் உயிரிழப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது நல்லது.

6. பாதிப்பு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்?

கால் பெரிதாக வீங்கி, அதிக வலி இருந்தால், பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் நடக்கக்கூடாது. கால்களை உயரமாக தூக்கி வைக்க வேண்டும். இரத்தம் உறையாமல் இருக்க தேவையான மருந்து, மாத்திரைகள் தர வேண்டும். ஒரு வாரத்திற்குப்பின், கிரிப் போட்டுக் கொண்டோ, ஸ்பெஷல் சாக்ஸ் போட்டுக் கொண்டோ நடக்கலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, ஆறு மாதங்கள் மாத்திரைகளை தொடர்ந்தால், குணமாகிவிடும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முற்றிலும் குணப்படுத்தலாம். தாமதமாக சிகிச்சை எடுத்தால், முற்றிலும் குணமடைந்து கால் பழைய நிலைக்கு திரும்பும் என, எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில், கால்களில் வீக்கம், நரம்புகளில் சுருக்கம் இருந்தால், அலட்சியம் காட்டாமல், உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதே சிறந்தது.

இருதய இரத்தக்குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்

உரிய மூலப்பொருள்கள்

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் பூண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ் சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற் கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்பூன் பானத்தை அருந் துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருந்துங்கள். சுவை யாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

டாக்டர் ஷேத்திரபாலன்

அட்லாண்ட வைத்தியசாலை

மருதனார்மடம்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.