மன்மத வருடம் புரட்டாதி மாதம் 03 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்ஹஜ் பிறை 06
SUNDAY SEPTEMBER 20 2015

Print

 
கவிதை மஞ்சரி

சிந்தையை உலுக்கும் ஹஜ் ஜ_ப் பெருநாள்

இ.ஷமீலா இஸ்மத்

வெண்ணிற ஆடை பூண்டு செல்லும்
ஹஜ்ஜாஜிகள் ஏராளம் பேர்
இறுதிக் கடமைக்காக பயணம்
வைத்து நிறைவேற்றுகின்றனர்
இவர்களது ஹஜ்ஜுப் பெருநாள்

இவ்வுலகில் முஸ்லிமாக பிறந்து விட்ட
ஒவ்வொருவரும் கொண்டாடும்
தியாகத் திருநாள் இதுவே
எவரது மனதையும் உலுக்கி
எழும்பச் செய்யும் பெருநாள்

குர்பான் என்ற ஒன்று
அனைவரையும் இணைக்கச் செய்யும்
எவரெவர் வீட்டிலும் இது
சரிபடவே திகழும் தியாகமான
ஒரு உண்மைச் சம்பவப் பெருநாள்

தொன்று தொட்டு நடைபெறும்
இவ்வழக்கத்தை மாற்றாது கடைப்பிடிக்க
எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு
அளித்துள்ள இந்நாள் என்றும்
தொடர எம் பிரார்த்தனை உரித்தாகட்டும்

இறுதிக்கடமை புனித ஹஜ் !

பாத்திமா முஹம்மத் ஸாதிக், மருதானை பேருவளை

அல்லாஹும்ம லெப்பைக்
அல்லாஹும்ம லெப்பைக்கென
சொல்லாலினிய இறை அறைகூவலான
வல்லோனின் அழைப்பேற்று
இறையில்லம் புனித கஃபாவில்
இறுதிக்கடமை ஹஜ் புரிய
தொலைதூரமதில் நின்று
புறப்பட்டு வந்து விட்டோம் இதோ
வந்து விட்டோம் உனை நாடி!

ஒற்றுமை வலியுறுத்தும்
இறுதிக்கடமையே, ஹஜ்
ஒன்றுபட்டு யாவருமே
சகோதரத்துவத்தை நிலைநாட்ட
சர்வமும் வந்து சேரும்
சர்வதேச மகா நாடேயது!

இறை நெருக்க நபி இப்றாஹிம்
மறை குர்ஆன் வழி சொன்ன
வரையில்லா நல்வாழ்வையே
ஹஜ்ஜின் பின்னணியாக
உறுதி செய்த வல்லோனின்
வழிமுறையேற்று புரியும் ஹஜ்
ஹஜ்ஜூக்கான நன்மை சுவர்க்கமே
தூயவன் ஆணைக்கேற்ப
தூதர் நபி இப்றாஹிம்
அருமை மகனைப் பலியிட
மனங்கொண்டு செயல்பட
தியாகச் செம்மலின் அர்ப்பணிப்பை
கண்டறிய இறையாணையால்
மகன் உயிர்பெற வழிவகுக்க!

மணிக் கவிதை

பீ.ரீ.அkஸ், கிண்ணியா - 07

திடம்கொள்
தவறியது
தவறியது தான்
கலக்கமடையாதே!
உன்னை
திடப்படுத்திக் கொள்!
தவறியதை விட
பெறுமதியானது
உனக்கு கிடைக்கும்!

மோகன வண்டுகளின்
வருகை நாடி
இதழ் விரிந்து காத்திருக்கும்
மலர்கள்
எத்தனை நாளைக்குத்தான்
தம் இளமையினை
தக்கவைக்கும்!

ஹஜ்ஜீப்பெருநாள்

ஹkமா றபாய்தீன், நீர்கொழும்பு

கஃபதுல்லாக் கட்டிடச் சரிதம்
கற்பனை கலவா நித்திய யதார்த்தம்
கண்ணீர் மல்கிடக் கதையாய்க் கூறும்
கண்ணியமிக்க திருநாளே வருக!

நெருப்பில் விழுந்து சோதனை பெற்றும்
நெறியுடன் வாழ்ந்த இப்ராஹீம் நபியின்
நேரிய வாழ்வைச் சுவையுடன் சொல்லும்
நன்னாள் உனக்கு மர்ஹபா! மர்ஹபா!

இஸ்மாஈல் நபியின் இணையற்ற வீரம்
இறைவனுக்காய் அக்குடும்பத்தின் தியாகம்
தந்தையும் மகனையும் நினைவில் நிறுத்தி
தரணி வியக்க வரும் பொன்னாளே வருக!

அருமை அன்னையாம் அன்னை ஹாஜரா
அடங்கப்பட்ட புண்ணிய ஸ்தலமது
அற்புத “ஸம்ஸம்” அருமையைச் சொல்லும்
அந் நாள் உனக்கு அஹ்லன்! வஸஹ்லன்

மஹ்ஷர் வெளியை மறைவாய்க் காட்டும்
மனிதர் கூட்டம் அரபா வெளியில்
சகோதர சமத்துவம் என்றும் நிலைக்க
சங்கை மிகு பெருநாளே வருக! வருக!

இரட்சிப்பாயா?

அ. கெளரிதாசன், ஆலங்கேணி கிழக்கு

கன்னலாய் மொழிகள் சிந்தும்
கன்னியர் உறவை நித்தம்
பன்னெடுங் கால மாகப்
பாவியான் துய்த்து நின்றேன்!
இன்னலே சூழ்ந்த தன்றி
இன்பமோ தொடரவில்லை!
இன்றுயான் திருந்தி விட்டேன்
இறைவனே இரட்சிப் பாயா?
*
புகளுரை மயக்கில் எந்தன்
பொருள்பணம் இழந்த தன்றி
சொகத்திலே நன்மை காணேன்!
சிறுமதி கொண்ட பேர்க்கு,
தகமைசேர் தலைவ னானேன்!
தரணியில் நல்லோர் தம்மின்
பகைமையைத் தேடிக் கொண்ட
பாவியை இரட்சிப் பாயா?
*
மதுதரும் போதை யாலென்
மதியினை இழந்து நின்றேன்!
புதுப்புது உறவா லெந்தன்
புகழெலாம் இழந்து விட்டேன்!
வதுவையே இரண்டு கண்டேன்
வாழ்க்கையே அதுதா னென்றேன்!
அதுவெலாம் மறந்தே னின்று
ஆண்டவா இரட்சிப் பாயா?
*
கட்டிய மனைவிக்கு ஆற்றும்
கடமைகள் மறக்க லானேன்!
வட்டியால் பலபேர் தேட்டம்
வாழ்வெலாம் பறிக்க லானேன்!
மட்டிலா மகிழ்ச்சி யோடு,
மண்ணிடை வாழ்ந்த காலம்
இட்டமாய் உந்த னெண்ணம்
இல்லைநீ, இரட்சிப் பாயா?
*
“கோட்டி”லே நானே வெற்றி
கொண்டிடும் ஆசையால், பொய்ச்
சாட்சிகள் சொல்ல வைத்தேன்!
சகலமும் நானே யென்ற
மாட்சியால் கெட்டேன்! இன்றும்
மனிதனின் உருவத் தோடு,
காட்சியான் தருகின் றேனே
கடவுளே இரட்சிப் பாயா?

மனித மகிமை

விவேகானந்தனூர் சதீஸ், கிளிநொச்சி

பெண்ணுக்கு வேண்டும் பொறுமை
ஆணுக்கு வேண்டும் உண்மை
இரண்டும் குலத்துக்குப் பெருமை
அயல் மீது வேண்டாம் பொறாமை
அவனியில் காட்டு திறமை
அன்பினில் காட்டு நேர்மை
தாய்மீது காட்டு மேன்மை
தாரத்திடம் காட்டு தாய்மை
வீட்டினில் வேண்டாம் வறுமை
அயல் நாட்டினில் வேண்டாம் கயமை
வாக்கினில் வேண்டும் வாய்மை
வாழ்க்கையில் வேண்டும் மகிமை

அன்புள்ள அயிலனுக்கு

பாத்திமா சதீக்கா சித்தீக், திருகோணமலை

நிரந்தர துயில்கொண்ட
உன் தோற்றம்
என் மனவரிகளைத் தட்டி
சில கவிவரிகளை எழுதவைக்கின்றது

சிரியாவின் சிறு பாலகனாகிய நீ
இன்று சுவனத்தின் பாலகனாக மாறினாலும்
ஏனோ என்னாலயே உன் இழப்பைத் தாங்க முடியவில்லை
உன் தந்தையின் நிலையை சொல்லத் தேவையில்லை

அடைக்கலம் தரக்கூட மறுத்த இரும்புள்ளங்களை
அள்ளி வழங்குமளவு மாற்றியுள்ளது
உன் உயிரற்ற தோற்றம் - உன் மறைவு
உள்ளங்களை மட்டுமல்ல உணர்வுகளையும் உலுக்கிவிடுகிறது

உன் ஒருவனுடைய இழப்பால்
இன்று எத்தனையோ அகதிகளுக்கு விடிவு ஏற்படுமளவு
நீ ஓர் ஆதவனாய் மாறியுள்ளாய்
மக்களின் அகவானில்

உன் தந்தையின் பிரார்த்தனை மட்டுமல்ல
உன் இழப்பின் மூலம் எழுச்சி பெற்ற
ஒவ்வொரு உள்ளங்களும்
உனக்காக இறைவனிடம் கையேந்தும்!

மணக்கும் முல்லை!

மாத்தளை கமால்

நீயும் நானும்
ஒருதாய் பிள்ளை
நினைவில் பதித்தால்
ஏதொரு தொல்லை?

உனக்குள் ஓடும்
இரத்தம் சிவப்பு
எனக்குள் இல்லை
அதனால் கசப்பு!

உனக்கும் எனக்கும்
உண்டாகும் பசி
சாப்பிடும் போதில்
சமமாகும் ருசி!

உடலில் ஏற்படும்
நோய்கள் பொதுதான்
பிரிவினை பேசா
வலியும் இதுதான்!

பசிக்கும் ருசிக்கும்
சாதிகள் உண்டா?
நோய்க்கும் நொடிக்கும்
இனங்கள் உண்டா?

எழுதும் உண்மை
இதயம் ஏற்கும்
பொழுது புலர்ந்தால்
பொய்மை தோற்கும்

உன்னைக் கெடுக்க
எண்ணிடவில்லை
என்னின் மனமோ
மணக்கும் முல்லை!

மட்டம் தட்டுகின்றார்கள்

வெலிமடை ஜஹாங்கீர், புறக்கோட்டை

“கவாத்து”க்
கத்தியினைப் போலே
கூர்மையானவர்கள்
சம்பளம்
கொடுப்பவர்களும், துரையும்
க(ங்)ண்காணிகளும்

அம்பலத்தில்
படுத்துறங்கினாலும்
சம்பளம்
எடுப்பவர்கள்
அதைவிடவும்
நேர்மையானவர்கள்

தோளுக்கு மேலே
தொழிலாளர்
வளரக்கூடாது
என்பதற்காகவோ
என்னவோ
“கவாத்து”ப்
பண்ணப்படுகின்ற
தேயிலைச் செடியினைப்போலே
தோட்டத்
தொழிலாளர்களையும்
மட்டம்
தட்டுகின்றார்கள்!

அறிவின் சாவி

இராணி பெளசியா, கல்வளை

துஞ்சிடும் மடமையை
தூர ஓட்டிடும்
பென்சிலுக்கு உண்டு
பேராற்றல் என்று
ஐவிர லிடுக்கில்
அறிவின் சாவி
பென்சிலை இடுக்கு

அஞ்ஞான இருளோ
பஞ்சாகப் பறக்கும்
விஞ்ஞானம் என்றும்
மெஞ்ஞானம் என்றும்
வியத்தகு விந்தை
புரிந்திடும் கலைகள்
அடித்தளம் என்ன?
எழுத்தறி வாற்றல்
என்றால் மிகையோ....?

தினம் ஒரு நூலின்
சில பக்கமேனும்
கருவிழி நகர்த்தல்
கருத்தினில் ஏற்று
அறிவுச் சுடர் உன்
அகத்தொளி சேரும்
ஈருலகிலும் நல்ல
ஏற்றம் பெறலாம்


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]