மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
அடித்த கை அணைத்தது

சேது ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் அவன் தந்தை ஒரு தொழிலாளியாயினும் தன் மகனைப் பிடிக்க வைக்க வேண்டுமென்பதில் கருத்தாயிருந்தார். சேது நகரிலுள்ள வித்தியாலயத்தில் கற்கலானான். படிப்பில் கெட்டிக்காரன் அந்த வித்தியாலய அதிபர் இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வுபெற வேண்டியிருந்தது. அவர் மாணவர்கள் பால் அதுவும் தோட்டங்களிலிருந்து வரும் ஏழை மாணவர் மீது இரக்கம் கொண்டவர்.

சேது க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றான். அவன் பெற்ற புள்ளிகள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திட போதுமானதாயிருக்க வில்லை. எனினும் நல்ல பெறுபேறு.

சேது வேலை தேடலானான். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாயிருந்தது. அவனுக்கு அரசியல்வாதிகள் எவரையும் தெரியாது. இப்படியே ஒரு வருடம் கழிந்தது.

ஒருநாள் சேதுவின் தந்தை மகனிடம் தொழில் பற்றி பேசலானார். ‘அப்பா, படித்து பாஸ் பண்ணி விட்டால் மட்டும் போதாது. பெரிய இடத்து சிபாரிசு தேவை. நாமோ ஏழைகள். எங்களுக்கு எந்த பெரிய இடமும் தெரியாதே” என்றான். மகனின் நிலைமையையும் தனது கையாளாகாத் தனத்தையும் எண்ணி நொந்து கொண்ட சேதுவின் தந்தை சில விநாடிகள் கழித்து “ஏம்ப்பா, நம்ம பெரிய சேர்கிட்ட கொஞ்சம் பேசிப் பாத்தா என்ன? அவர் நிச்சயம் ஒதுவுவாரு” என்றார். சேதுவுக்கும் அது சரியெனப்பட்டது. மறுநாள் காலையிலேயே அவரைப் பார்ப்பதாய் சொன்னான்.

அன்று வெள்ளிக்கிழமை சேது காலையிலேயே பாடசாலைக்குச் சென்றான். அவனது பள்ளித் தோழர்கள் அவனைச் சூழ்ந்தப்படி பல்வேறு கேள்விகளைக் கேட்கலாயினர். தான் ஒரு முக்கிய விசயமாக அதிபரைக் காண வந்ததாய் கூறிவிட்டு அதிபரின் அறைக்குள் நுழைந்தான். ஏதோ ஒரு ஆவணத்தில் கவனமாயிருந்த அதிபர் தம் முன்னே நிற்கும் சேதுவை உற்று நோக்கினார். எப்படி சேது? என்ன விஷயம்?” கேட்டார். “சேர் பரீட்சையில் தேறி ஒரு வருடமாகிறது. எந்த வேலையும் கிடைப்பதாயில்லை. அதுதான் உங்கள் உதவியைப் பெறலாமென்று வந்தேன்” என்றான்.

அதிபர் சற்று நேரம் கண்களை மூடியபடி யோசிக்கலானார். பிறகு “சேது, என்னிடம் படித்த ஒரு மாணவன் பக்கத்துத் தோட்டமொன்றில் தலைமைக் குமாஸ்தாவாக இருக்கிறான். அவனிடம் பேசி தோட்டத்தில் ஏதாவது தொழிலில் சேர்க்க முடியுமா என்று கேட்டுப் பார்த்து உனக்கு சொல்கிறேன். உன் போன்ற அறிவுள்ள நேர்மையான ஏழை மாணவர்களுக்கு உதவுவதே எனது ஆசை” என்றார்.

அதிபர் தலைமைக் குமாஸ்தாவை சந்தித்து சேது பற்றி கூறினார். “உங்களுக்கில்லாத உதவியா சேர். எங்கள் தோட்டத்தில் சுப்பர் வைசர் வேலைக்கு ஆள் தேவை. அந்த மாணவனை அவனது சான்றிதழ்களுடன் ஒரு புதன்கிழமையன்று எங்கள் காரியாலயம் வரச் சொல்லுங்கள்” என்றான்.

அதிபர் சேதுவைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல அவன் அதிபரை கையெடத்துக் கும்பிட்டு நன்றி தெரிவித்தான்.

சேது படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் கெட்டுக்காரன். பாடசாலையில் மாணவர் தலைவனாகவும் இருந்துள்ளான். சாரணர் பயிற்சியும் பெற்றிருந்தான். அவற்றிற்கான சான்றிதழ்களோடு தோட்டக் காரியாலயம் சென்று தலைமைக் குமாஸ்தாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

தோட்ட மனோஜர் தமது கடித வேலைகளை முடித்துக் கொண்டு கதிரையில் சாய்ந்தபடி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். அத்தருணம் பார்த்து அவரிடம் சென்ற தலைமைக் குமாஸ்தா சேதுவைப் பற்றிக் கூறவே, அவனை வரும்படி கூறினார். சேது மானேஜரின் அறைக்கு முன்னால் கதவோரமாக நின்றபடி “குட் ஆப்டர்னூன் சேர்” என்றான் பணிவாக.

அவனை ஏற இறங்கப் பார்த்த மானேஜர் “இங்கே சுப்பர்வைசர் வேலை காலியாக உள்ளது. நீ என்ன படித்திருக்கின்றாய்?” என்று கேட்க சேது தனது கையில் வைத்திருந்த பைலை அவரிடம் நீட்டினான். பைலைப் புரட்டுப் பார்த்த மானேஜரின் முகத்தில் திருப்தி தென்பட்டது. “நீ கெட்டிக்காரன். நாளையே வேளையில் சேர்ந்துவிடு. ஒரு கங்காணியிடம் உன்னை ஒப்படைப்பேன். அவரிடம் தேயிலை சம்பந்தமான எல்லா நுணுக்கங்களையும் கற்றுக் கொள். மற்றது தொழிலாளர்களோடு நெருங்கிப் பழகக் கூடாது. நீ ஒரு ஸ்டாப் என்பதை நினைவில் வைத்துக் கொள். ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு உன்னை நிரந்தரமாக்குவேன். பயிற்சிக் காலத்தில் ஒரு தொழிலாளியின் தினச் சம்பளம் உனக்கு வழங்கப்படும். நிரந்தரமான பிறகு ஸ்டாப் சம்பளம் தருவோம்” என்றார்.

சேது மானேஜரை வணங்கிவிட்டு வெளியேறினான். அவன் வருமட்டும் வீட்டு வாசலில் காத்திருந்த அவன் தந்தை அவனைக் கண்டதும் “எப்படீப்பா, வேலை கெடச்சிதா?” என்று கேட்டார். சேது அனைத்தையும் கூறக் கேட்டு மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்ட அவனது தந்தை சேதுவுக்கு பத்து வயதாயிருக்கும் போது காலமான தனது மனைவியின் படத்தின் முன் நின்று அதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரது விழிகளில் கண்ணீர் வடிந்தது. அது மனைவியை இழந்த சோகக் கண்ணீர். மகனுக்கு வேலை கிடைத்ததால் வெளியான ஆனந்தக் கண்ணீர் இரண்டுமே.

மாயாண்டி கங்காணி முதல் நாளே சேதுவை அழைத்துக் கொண்டு தோட்டத்து மலைகளையெல்லாம் காட்டினார். அவற்றின் இலக்கங்களையும், ஒவ்வொரு மலையின் ஏக்கரையும் குறிப்பிட்டார். சேது ஒரு டயறியில் அவற்றைக் குறித்துக் கொண்டான்.

சேது காலை 6.00 மணிக்கே பிரட்டுக் களத்தில் இருக்க வேண்டும். தனது தோட்டத்திலிருந்த தான் வேலை செய்யும் தோட்டத்துக்கு ஆறு மைல் தூரம். அதிகாலை நான்கு மணிக்கே புறப்பட்டு விடுவான். இது அவனுக்கு சிரமமாய் காணப்பட்டது. கங்காணியிடம் எங்காவது தங்க இடம் கிடைக்குமா என்று கேட்டான். அவனது நிலைமையக் கண்ட கங்காணிக்கு அவன் பேரில் அனுதாபம் ஏற்பட்டத்து. “முந்தி இருந்த சுப்பர்வைசர் கணக்குப்பிள்ளை வீட்டில்தான் தங்கினார். நான் வேணும்னா கேட்டுப் பார்க்கிறேன்” என்றார் சேதுவுக்கு அது ஆறுதலாயிருந்தது.

கங்காணி கணக்குப்பிள்ளையிடம் சேதுவைப் பற்றி குறிப்பிட்டார். கணக்குப்பிள்ளை தம் மனைவியிடம் கூறினார். அவரது மனைவி உடனே ஒப்புக் கொண்டார். வாடகைப் பணம் அவருக்குத்தானே! கணக்குப்பிள்ளை கங்காணியிடம் சம்மதம் தெரிவித்தார்.

அன்று ஞாயிறு விடுமுறை நாள். சேது ஒரு சூட்கேசோடு கணக்குப்பிள்ளை வீடு சென்றான். கணக்கப்பிள்ளையும் அவரது மனைவியும் அவனை வரவேற்றனர். அவனது அறை காண்பிக்கப்பட்டது. சிறிய அறை. ஒரு படுக்கை, ஒரு மேசை, ஒரு நீண்ட கண்ணாடி மட்டுமே காணப்பட்டன. அவை சேதுவின் தேவைக்கு அதிகமானதே. வெளியே ஒரு பைப்பும், நீர்த்தொட்டியும் காணப்பட்டது. அங்கே குளித்துக் கொள்ள முடியும். சாப்பாட்டுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய்.

கணக்குப்பிள்ளைக்கு சேது நல்லவன்போல் காணப்பட்டான். அவருக்கு திருப்தி. அனைத்தையும் இரண்டு கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன. ஆம், அது கணக்குப்பிள்ளையின் ஒரே மகள். அவள் சேதுவைக் கண்ட மாத்திரத்தில் அவனை உருவத்தில் மயங்கி விட்டாள்.

சேது இப்போது கணக்குப்பிள்ளை வீட்டிலிருந்தே வேலைக்குச் செல்லலானான். அவன் தேயிலை பயிர்ச் செய்கை சம்பந்தமாய் போதிய அறிவைப் பெற்றிருந்தான். அவனுக்கு ஒரு மலை தனியாக ஒதுக்கப்பட்டது. அந்த மலையில் தமிழ்ப் பெண்களோடு சிங்களப் பெண்களும் வேலை செய்தனர். அவர்களிடம் சேது கண்டிப்பாகவும், சாமர்த்தியமாகவும் நடக்கலானான். அந்த மாதக் கடைசியில் அவனது மலையிலிருந்து பெறப்பட்ட தேயிலை எப்போதுமில்லாத அளவு கூடுதலாயிருந்தது. மானேஜருக்கு அவன் பேரில் நம்பிக்கை ஏற்பட்டது. அவனை பழக்கியெடுத்த கங்காணிக்க இரண்டிப்பு சந்தோஷம்.

கணக்குப்பிள்ளை வீட்டில் சேதுவுக்கு இறைச்சி, மீன் என்று நல்ல சாப்பாடு. உணவும் சுவையாயிருந்தது. அதற்குக் காரணம் கணக்குப்பிள்ளையின் மனைவியா மகளா என்று அறிந்து கொள்ள முடியவில்லை.

ஒருநாள் கணக்குப்பிள்ளையின் மகள் சேதுவின் அறையை சுத்தமாக்குவதில் ஈடுபட்டாள். அங்கே நாற்காலி மேல் காணப்பட்ட சேதுவின் காற்சட்டையையும் கமிசையும் எடுத்துத் துவைத்துக் காயப்பட்டாள். சேது பகல் உணவுக்கு வந்த போது தனது உடுப்புகளைக் காணாது வெளியே சென்று பார்த்தான். அவனது உடைகள் ஒரு கயிற்றில் காயப்போட்டிருந்ததைக் கண்டான். உடனே கணக்குப்பிள்ளையின் மனைவியிடம், “எண்டி, எனது உடுப்பை நானே கழுவிக் கொள்கிறேன். நீங்கள் அது பற்றி மெனக்கெட வேண்டாம்” என்றான். நான் துவைக்கவில்லையே, மகள் ஏதும் துவைத்திருப்பாளோ என்றெண்ணியப்படி மகளிடம் கேட்டாள்.

அவள் தான்தான் சேதுவின் உடைகளைத் தவைத்ததாய் கூறினாள். அவளுக்கு தனது மகள் செய்ததில் தவறெதுவுமில்லையென்றாலும் சேதுவுக்கு விருப்பமில்லா விட்டால் இனிமேல் துவைக்க வேண்டாம்” என்றாள்.

கணக்குப்பிள்ளையின் மகள் சேதுவோடு தனித்துப் பேச எவ்வளவோ முயன்றும் சேது அவ்வாறான சந்தர்ப்பத்தைத் தவிர்த்திட்டான். அவனுக்கு அப்பெண்மீது விசேஷமான விருப்பம் இருக்கவில்லை. ஏதாவது ஏடாகூடமாக நடந்து விட்டால் கணக்குப்பிள்ளை தன்னை விரட்டிவிடுவார் என்பதை அறிவான்.

சேது இப்போது சேவையில் நிரந்தரமாக்கப்பட்டான். அவனுக்கு தனியாக ஒரு குவாட்டர்ஸ¤ம் கிடைத்தது. கணக்குப்பிள்ளைக்கும், அவர் மனைவிக்கும், மகளுக்கும் நன்றி கூறிவிட்டு வீட்டைக் காலி பண்ணினான். கணக்குப்பிள்ளை தனது கணக்கு பிழைத்து விட்டதை எண்ணி வருந்தலானார். அவரது மனைவியோ தனது வருவாயை இழக்க வேண்டி ஏற்பட்டதால் வருந்தினாள். அவர்களது மகளோ தான் போட்ட தூண்டிலுக்கு சேது விழவில்லையே என்று கவலைப்பட்டாள்.

சேது இப்போது ஒரு ஸ்டாப். புதிய வீட்டில் குடியேறினான். அவனுக்கு சமையல் செய்ய தோட்டக் கணக்கில் ஓர் ஆளைக் கொடுத்தார்கள். லீவு கிடைக்கும் போதெல்லாம் தந்தையைப் பார்க்கப் போவான். ஒருநாள் தன் தந்தையிடம் “அப்பா, இனி நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம். பிராவிடன்ட் பண்ட் பணத்தைப் பெற்றுக் கொண்டு என்னோடு வந்து தங்குங்கள்” என்றான். அவரும் அவ்வாறே செய்தார்.

ஒருநாள் வேலைத் தலத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் கணக்குப்பிள்ளை சேதுவின் குவார்ட்டர்ஸ் பக்கமாக சென்றார். சேதுவின் தந்தை காய்கறித் தோட்டத்துக்கு நீர் இரைத்துக் கொண்டிருந்தார்.

நீங்கள் சேதுவின் தகப்பனாரா? என்று கேட்டார். சேதுவின் தந்தை ஆமாம் ஐயா என்றார்.

பையனுக்கு நல்ல உத்தியோகமும் கிடைத்து விட்டது. வயசும் சரிதான். காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தை முடித்து வைத்தால் நல்லது தானே. எனக்கும் அவன் மேல் ஒரு பற்று உள்ளது. நீங்கள் விரும்பினால் அவனை நான் மருமகனாக்கிக் கொள்ள முடியும். பையனிடம் இது பற்றி பேசிப் பாருங்கள் என்று கூறிவிட்டு நடக்கலானார்.

அன்று மாலை சேது வேலை முடித்து வீடு வந்தான். குளித்து விட்டு சாரம், பெனியன் அணிந்துக் கொண்டு மேசை மீது வைக்கப்பட்டிருந்த தேநீரை அருந்தலானான். அப்போது அவன் தந்தை கணக்குப்பிள்ளை கூறியதை அவனிடம் சொன்னார். திருமணம் என்ற சொல்லைக் கேட்டதும் அவன் மனக்கண் முன் லீலாவதி தோன்றினாள்.

லீலாவதி அவனது மலையில் கொழுந்து பறிக்கும் பக்கத்து கிராமப் பெண். அவனிடம் சுமார் இருபது சிங்களப் பெண்கள் வேலை செய்தனர். அவர்களிடமிருந்து லீலாவதி வேறுபட்டுக் காணப்பட்டாள். சிவந்த நிறம் செதுக்கப்பட்ட மேனி. ஓர் உண்மையான அழகுராணி தெரிவு செய்யப்படுவதாயிருந்தால் லீலாவதி நிச்சயமாக முதலிடம் பெறுவாள். மேக்கப் இல்லாமலேயே இவ்வளவு அழகாயிருந்தால் மேக்கப் செய்த பின்னர் ரதி போன்று காட்சியளிப்பாள். அவளது அழகு போல் அவளது குரலும் இனிமையானது. அவளது அழகில் சேது தடுமாறினான்.

மலையில் கொழுந்து பறிக்கும் ஒவ்வொரு பெண்ணிடமும் சென்று அவர்கள் விடும் பிழைகளை எடுத்துக் காட்டி திருத்திவிடுவான். லீலாவதியிடம் சென்றால் மட்டும் பகிடி பண்ணுவதில் தவறுவதில்லை. அவனது குள்ளநரித்தனத்தை அறிந்த லீலாவதியும் அவனிடம் பற்றுக் கொண்டாள்.

ஒருநாள் லீலாவதியின் வீடு எங்குள்ளது என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை லீவு நாள். நன்றாக உடுத்திக் கொண்டு கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். லீலாவதியின் வீட்டைக் கண்டுபிடித்தான். வீட்டின் முற்றத்தில் லீலாவதியும் அவளது பெற்றோரும் நின்றனர்.

சிரித்தபடியே அவர்களை நோக்கிச் சென்றான். லீலாவதி தன் பெற்றோரிடம் “இவர்தான் எங்கள் மலையின் மாத்தயா” என்று அறிமுகப்படுத்தினாள். அவர்கள் அவனை வரவேற்று அமரச் செய்தனர். ஒரு காற்சட்டை அணிந்த கனவான் தங்கள் வீட்டிற்கு வந்ததை பெருமையாக எண்ணினார். அவனுக்கு தேநீர் வழங்கி உபசரித்தனர். பின்னர் தாயும் தந்தையும் வெளியே சென்று வீட்டுத் தோட்டத்தில வேலையில் ஈடுபட்டனர். தனியே விடப்பட்ட சேதுவும் லீலாவதியும் கதைக்கலாயினர். சேது லீலாவதியிடம் தான் அவனை நேசிப்பதாகவும் கூறினான். இனத்தைக் காரணம் காட்டி அவள் பெற்றோர் விரும்பாவிடில் தான் தொந்தரவு செய்யப் போவதில்லை என்றான். “மாத்தயா, இனமாவது மண்ணாங்கட்டியாவது நாம் எல்லோரும் மனிதர்கள் தானே! எனக்கு இருக்கும் பிரச்சினை நீங்கள் ஒரு ஸ்டாப்.

நான் ஒரு தொழிலாளி. உங்களுக்கு நான் தகுந்தவளா என்பதே பிரச்சினை என்றாள். “உனது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன். இப்படி எல்லோரும் சிந்தித்தால் இந்நாட்டில் இனப்பிரச்சினை ஒன்று ஒன்று இருக்காது. முதலில் உனது பெற்றோர் சம்மதிக்க வேண்டுமே, நான் தமிழன். நீ சிங்களத்தி. இதற்கு நீதான் ஒரு முடிவு தேட வேண்டும். உனது பெற்றோர் இணங்கினால் எல்லாம் முடிந்த மாதிரிதான்” என்றான்.

“அவர்களை எப்படியும் சம்மதிக்க வைத்திடுவேன். ஆனால், உங்களது தந்தை விரும்புவாரா?” எனக் கேட்டாள்.

“எனக்கு இருப்பது அப்பா மட்டும்தான். அவர் எனது விருப்பத்துக்கு தடையாயிருக்க மாட்டார். அது பற்றி கலைப்படாதே” என்றான். உனது பெற்றோர் அனுமதியைப் பெற்று என்னிடம் சொல். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி விடை பெற்றான்.

கணக்குப்பிள்ளையின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்குமுகமாக “அப்பா அவரிடம் சொல்லுங்கள் நான் இப்போதைக்கு திருமணத்துக்கு தயாரில்லை என்று. இரண்டு வருடமாவது உழைத்து பணம் சேர்த்தப் பின்னரே திருமணம் பற்றி முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான் தந்தையிடம்.

மறுநாள் வேலைக்கு வந்த லீலாவதி தனது பெற்றோரின் ஒப்புதலைப் பெற்று விட்டதாய் கூறினாள். சேது ஒரு ஆறுதல் பெருமூச்சு விட்டான்.

சேதுவும் லீலாவதியும் இப்போது பகிரங்கமாகவே சிரித்துப் பேசலாயினர். இது ஏனைய தொழிலாளர்கட்கும் தெரியலாயிற்று. இவர்களது உறவு பற்றி மானேஜருக்கும் யாரோ சொல்லி விட்டனர்.

மறுநாள் காலையில் மானேஜர் சேதுவை காரியா¡லயம் வரும்படி பணித்திட்டார். சேதுவுக்கு விஷயம் விளங்கியது.

காலையில் மானேஜர் முன் நின்ற சேது அவருக்கு வணக்கம் சொன்னான். “என்ன சேது உன்னைப் பற்றி தொட்டமெல்லாம் பேச்சாயிருக்கிறதே. யாரோ இங்கு வேலை செய்யும் கிராமத்துப் பெண்ணோடு உனக்கு உறவாமே. இந்த வயதில் காதல் ஏற்படுவது இயற்கை தான். நானும் உன் வயத்தைக் கடந்தவன்தானே. ஆனால் நீ ஒரு ஸ்டாப். ஒரு தொழிலாளியைக் கட்டிக் கொண்டு இங்கு தொடர்ந்தும் வேலை செய்ய முடியாது. இங்கே நான் தொழிலாளர்களிடையே ஒழுக்கம் பேண வேண்டியுள்ளது. நீ வேண்டுமானால் அவளை திருமணம் செய்து கொள். ஆனால் தோட்டத்தைவிட்டு வெளியேற வேண்டும். “உத்தியோகமா தொழிலாளப் பெண்ணா? உன் முடிவை நாளைக்கு எதிர்பார்க்கிறேன்” என்றார்.

சேது சிந்திக்கலானான். உத்தியோகமா? லீலாவதியா? லீலாவதி வேண்டுமானால் உத்தியோகம் இல்லை. உத்தியோகம் வேண்டுமானால் லீலாவதி இல்லை.

வீட்டிற்குச் சென்று சிந்திக்கலானான். ஒரு முடிவுக்கு வந்தான். தன் தந்தையைக் கூப்பிட்டு அவருக்கு எவ்வளவு பிராவிடண்ட் பண்ட் நிதி கிடைக்கும் என்று கேட்டான். அவன் தந்தை சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் இருக்குமென்றார். “ஏனப்பா என்ன விஷயம்?” எனக் கேட்டார்.

சேது கூறலானான். “அப்பா உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நான் இத்தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அவளையே மணம் முடிப்பதாய் இருக்கிறேன்.

ஆனால், அவள் ஒரு சிங்களப் பெண். இருந்தாலும் மிகவும் நல்ல குணம் படைத்தவள். அவளை மணம் முடித்தால் இங்கு வேலை செய்ய முடியாது. அதாவது ஒரு ஸ்டாப் ஒரு தொழிலாளியை மணமுடிக்க முடியாது என்பது தோட்டத்துச் சட்டம். எனவே, நாம் வெளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போய்விடுவோம். எனக்கு மிக விரைவில் ஒரு வேலை தேட முடியும்” என்றான்.

அவன் கூறியதைக் கவனமாக செவிமடுத்த அவது தந்தை மகனின் முடிவுக்கு அனுமதி வழங்கினார்.

சேது தனது பதவி விலகும் கடிதத்தை தோட்ட மானேஜருக்கு அனுப்பி வைத்தான். கடிதத்தை வாசித்த மானேஜர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தப்படி மேலே சிலிங்கைப் பார்த்து சிந்திக்கலானார். சேது மிகவும் கெட்டிக்காரன் அவன் வந்த பின்னர்தான் தோட்டத்தில் இலாபம் காணப்பட்டது. எதுவிதமான தொழிலாளர்கள் முரண்பாடும் வந்ததில்லை. அவனை இழப்பது தோட்டத்துக்கு நட்டம். இருந்தாலும் அவன் ஒரு தொழிலாளி பெண்ணை மணப்பதை கம்பெனி ஏற்றுக் கொள்ளாது. இறுதியாக அவளது விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

சேது விலகிப் போவதைக் கேட்ட தொழிலாளர்கள் வேதனைப்பட்டனர். அவன் தொழிலாளர்களை மிகவும் நேசித்தான். தொழிலாளரின் குற்றங்களை சுட்டிக்காட்டித் திருத்துவானே தவிர மேலதிகாரிகட்கு தெரியப்பட்டுத்தமாட்டான். தொழிலாளர்கள் கூடி அவனுக்கு ஒரு சிறந்த பிரியாவிடை உபசாரம் அளித்தனர். ஒவ்வொரு தொழிலாளியும் தங்கள் ஒரு நாள் சம்பளத்தைச் சேர்த்து அவனிடம் வழங்கிய தங்கள் நன்றியையும். பாசத்தையும் தெரிவித்தனர். இதுபோன்ற ஒரு பிரிவுபசாரம் நடந்ததுமில்லை இனி நடக்கப்போவதுமில்லை. சேது கண்ணீர் மல்க விடைபெற்றான்.

பின்னர் சேது நகரில் ஒரு வீட்டை கூலிக்கு வாங்கி தந்தையுடன் குடியேறினான். அதற்கிடையில் அவனது தந்தைக்கு ஈ.பி.எப். பணமும் கிடைத்தது. பிறகென்ன? ஒரு நல்ல நாளில் லீலாவதியைக் கரம் பிடித்தான். அவனது கலியாணத்துக்கு கிராமதத்தவர்களும், தோட்ட மக்களும் சமுகமளித்தனர். அந்த கலியாணத்துக்கு வந்திருந்த கணக்குப்பிள்ளை மனேஜர் கொடுத்ததாய் ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார். அதில் அவனுக்கு வாழ்த்து தெரிவித்து இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் அனுப்பியிருந்தார். அதைக் கண்ட சேதுவின் விழிகள் நனைந்தன.

அதுமட்டுமல்ல, மனேஜர் தமது சக துரையுடன் பேசி சேதுவுக்கு ஒரு கண்டக்டர் வேலையையும் பெற்றுக்கொடுத்தார்.

இப்போது சேது தனது அழகிய மனைவியுடன் மீண்டும் புதிய தோட்டத்தில் வேலை செய்கிறான். அவனது தந்தையும் அவர்களோடு தங்கலானார்.

அன்று இரவு அவனது வானொலியில் ஒரு பழைய பாடல் ஒலிபரப்பானது “அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும்” என்பதே அப்பாடல். அதை ரசித்துக் கேட்ட சேது வானொலியை அணைத்துவிட்டு லீலாவதியை அணைத்தபடி கட்டிலில் சாய்ந்தான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]