மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
வார்த்தைகள் மாறினால் வாழ்க்கையே மாறும் பெயர் மாறினால் தலை எழுத்தே மாறும்

வார்த்தைகள் மாறினால் வாழ்க்கையே மாறும் பெயர் மாறினால் தலை எழுத்தே மாறும்

8ஆம் எண்காரர்களைத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் வரும் என்று கடந்த வாரம் எழுதியதைப் படித்துவிட்டு அதனால் பாதிப்படைந்த அந்த எண்காரர்கள் பலரும் தொடர்பு கொண்டு கதைத்தார்கள். சிலர் நேரடியாகவே தங்கள் பிரச்சினைகளைச் சொன்னார்கள். இன்னும் சிலர் மறைமுகமாகப் பேசினார்கள். அப்படிப் பேசிய ஒரு பெண்மணி இப்படிச் சொன்னார்,

சேர் நான் வவுனியாவில் இருந்து பேசுகிறேன். தினகரன் வாரமஞ்சரியில் நீங்கள் எழுதிவரும் கட்டுரை தொடரை நான் விடாமல் படித்து வருகிறேன். கடந்த வாரம் எனது எண்ணைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நானும் 3ஆம் திகதி பிறந்தவள்தான்.

ஆனால் 8ஆம் எண்காரரைத் திருமணம் செய்துகொண்டவள். நீங்கள் எழுதியதைப் படித்துவிட்டு உண்மையிலேயே நான் வியப்படைந்துவிட்டேன். 8ஆம் எண்காரரைச் சமாளிக்க முடியாது. சரியான சந்தேகப் பிராணி. இப்போது நாங்கள் இருவரும் பிரிந்துதான் வாழ்கிறோம். விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்றும் கேட்டார்.

என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு விபரமாக எடுத்துச் சொன்னேன்.

எண்களுக்கு இருக்கும் சக்தியைக் கேள்விப்பட்டதும் உண்மையிலேயே அவர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

நல்லதை நினைத்து செயல்பட்டால் எல்லாம் நல்லபடியேதான் நடக்கும்.

இயக்குநர் சங்கரின் படம் ஒன்று வந்தது. இந்தப் படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். படத்தின் பெயர் நண்பன் அதில் நடிகர் விஜய் அடிக்கடி ஒரு வார்த்தையைச் சொல்லுவார். அது என்ன வார்த்தை தெரியுமா?

“ALL IS WELL” பிரச்சினைகள் ஏற்படும்போது அடிக்கடி இந்த வார்த்தையைச் சொல்லுங்கள் என்று தனது நண்பர்களுக்கு சொல்லுவார். அப்படியென்றால் என்னவென்று அவர்கள் கேட்க “எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என்று நம்பிக்கையை இது ஊட்டுகிறது என்பார்கள் என்று சொல்லுவார்.

இதற்குப் பெயர்தான் VIBRATION எண் சோதிடத்தில் முக்கியமானது இந்த VIBRATION தான். நான் தினமும் பயன்படுத்துகின்ற வார்த்தையில்தான் நமது வாழ்க்கையே அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. ஒரு சிலர் பேசுகின்ற வார்த்தைகளினால் அவர்களின் வாழ்க்கையே மாறிப்போவதுண்டு. இதேபோல் பெயரை அதிர்ஷ்டமாக மாற்றிக் கொள்வதன் மூலம் அவர்களின் தலை எழுத்தே மாறிப்போவதும் உண்டு.

வார்த்தைகள் மாறிப்போனதால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறிப்போனது என்பதை இப்போது பார்ப்போம்.

திருமணமாகாத ஒரு பெண் அந்தக் குடும்பத்திற்கு அவள் ஒரே மகள். திடீரென்று அவளது செயல்களில் மாற்றம் ஏற்பட்டது. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாள்.

ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டாலும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. மகளின் மாற்றத்திற்குக் காரணம் புரியாமல் பெற்றோர்கள் தவித்தார்கள். இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மனோ தத்துவ நிபுணர் ஒருவரிடம் போய் ஆலோசனை கேட்டார்கள். விபரங்களைக் கேட்டறிந்த டாக்டர் மகளை அழைத்து வரும்படி சொன்னார்.

அதன்படி மகளை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் போனார்கள். மகளை தனியே அழைத்து விசாரித்தார்.

நான் ஒருவரைக் காதலித்தேன். அவர் என்னை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.

“சரி... எப்போது தற்கொலை செய்து கொள்ளப் போகிறாய்?”

“இன்னும் முடிவு செய்யவில்லை” இப்படிச் சொன்னால் சரி வராது எப்போது தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்பதை இப்போதே முடிவு செய். அதற்கு நானும் உனக்கு உதவி செய்கிறேன். என்று டாக்டர் உறுதியுடன் சொன்னார்.

டாக்டரை வியப்புடன் பார்த்த அந்தப் பெண், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு குறிப்பிட்ட ஒரு திகதியைச் சொன்னாள்.

மெல்லச் சிரித்துக் கொண்ட டாக்டர் நான் உனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறேன் அதைத் தினமும் நீ சொல்லிக் கொண்டே இரு என்றார்.

என்ன மந்திரம்? என்று வியப்புடன் கேட்டாள் அந்தப் பெண்.

பொதுவாக காதலர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்கிற வார்த்தைகள் தான். நானின்றி நீ இல்லை.... நீ இன்றி நான் இல்லை. இதைக் கொஞ்சம் மாற்றி நான் இன்றி நீ இல்லை நீ இன்றி நான் உண்டு என்று சொல்லிக் கொண்டிரு என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அந்தப் பெண் சொல்லிச் சென்ற திகதிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே அவளுக்கு போன் செய்த டாக்டர், என்ன.... நாளை மறுதினம் தற்கொலை செய்து கொள்வாய் தானே என்று கேட்டார்.

“ம்.... அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கொஞ்சம் தடுமாறியபடியே சொன்னாள்.

“சரி.... சரி யோசி” என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் டாக்டர்.

தற்கொலை செய்து கொள்ளப் போகும் நாள் வந்தது.

காலையிலேயே டாக்டர் அவளுக்குப் பண்ணினார். என்ன எல்லாம் ரெடியா? என்று கேட்டார். சிறிது நேரம் வரையில் அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

“ஹலோ என்ன தற்கொலை செய்து கொள்ள ரெடியா?” மீண்டும் டாக்டர் கேட்டார். “இல்லை....” ஒருவித கலக்கத்துடன் பதில் வந்தது.

“இல்லையா....? ஏன்?”

“இல்லை டாக்டர் நான் இன்றி நீ இருக்கும் போது நீ இன்று நான் ஏன் இருக்கக் கூடாது. அதனால் நீ இன்றி நான் உண்டு என்று வாழ்ந்து காட்டப் போகிறேன். இந்த ஒரு வார காலம் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை உச்சரிப்பு என்னை சிந்திக்க வைத்து விட்டது. அதனால் ஏற்பட்ட முடிவுதான் இது... உங்களுக்கு தேங்ஸ் டாக்டர்” என்றாள். இப்போது அவள் பேச்சில் தெளிவு ஏற்பட்டிருந்தது.

“ஓகே. இதைத் தான் நான் எதிர்பார்த்தேன். என் வாழ்த்துக்கள்” என்று சொல்லி போனை வைத்து விட்டார்.

பார்தீர்களா அந்த வார்த்தைகளின் மாற்றத்தினால் அவளது வாழ்க்கையே மாறி விட்டது.

இதேபோல் உங்களது பெயரிலுள்ள எழுத்துக்களை மாற்றி அல்லது பெயரை மாற்றி அமைத்தால் உங்களது வாழ்க்கையின் தலை எழுத்தே மாறிவிடும்.

அடுத்த வாரமும் சந்திக்கும் வரை ஐயங்களைப் போக்கிக் கொள்ள அழுத்த வேண்டிய எண்கள். 07776867741


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]