புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு

உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுணர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கு

மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்துமாறு வலியுறுத்து

பயங்கரவாதம், ஆட்கடத்தல், போதைவஸ்து கடத்தல் மற்றும் இயற்கை அனர்த்தம் போன்றன இன்று உலகளாவிய ரீதியில் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு கருப்பொருளாகும். இது தொடர்பில் உலகின் சகல நாடுகளும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தான் பெற்ற அனுபவங்களை ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் முக்கியமானது, காலத்தின் கட்டாய தேவையானதும் ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களாக நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துறைசார் நிபுணர்களின் பாராட்டை பெற்றது.

ஏனெனில் இலங்கை பூகோள ரீதியில் உலகில் முக்கிய இடத்தை வகிப்பதைப் போன்று எமது நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் பல்வேறு தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்ற இலங்கையின் பாதுகாப்புப் படையினரும் உலகளாவிய ரீதியில் இராணுவங்களுக்கு மத்தியில் முதன்மை இடத்தை வகிக்கின்றனர். இதன் மூலம் இலங்கையின் முப்படையினருக்கு சர்வதேச மட்டத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டே 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கை நிறைவுற்றது முதல் அதாவது 2010 ஆம் ஆண்டு தொடக்கம் தமது நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் தத்தமது படைகளின் நிகழ்ச்சி நிரல்களில் புதிய விடயங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ளனர்.

அவற்றின் ஓர் அங்கமாக இலங்கை கடற்படையினர் கோல் டயலோக் என்ற தலைப்பில் கடல்சார் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உலக நாடுகளுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டையும், இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கருத்தரங்கு என்ற தலைப்பில் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டையும், ‘நீர் காகம் தாக்குதல்’ என்ற தலைப்பில் தாக்குதல் பயிற்சியையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றது.

இதற்கமைய ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் என்பது இராணுவக் கலண்டரின்படி முக்கிய மாதமாகும். ஏனெனில் கடந்த இரு தினங்களாக கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கும், கடந்த மூன்றாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகின்ற நீர்க்காகம் பயிற்சியும் முக்கிய மானதாகும்.

ஒவ்வொரு ஆண்டும் சமகாலத்துடன் தொடர்புடைய விடயங்களுக்கு எவ்வாறு தமது தொனிப் பொருளை உருவாக்கி பாதுகாப்பு படையினர் இந்த மாநாட்டை நடாத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பூகோள அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு என்ற தொனிப் பொருளில் இம்முறை இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டின் ஆரம்ப நாள் பிரதான உரையை ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயியும், நிறைவு நாள் பிரதான உரையை ஐக்கிய இராஜ்ஜியத்திற்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஷ் நோனிஸ¤ம் நிகழ்த்தினர்.

பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிராஷாந்த த சில்வா ஆகியோரின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் சவூதி அரேபியாவின் ரோயல் படையின் தளபதி ஜெனரல் ஈத் பின் அவாத் அல் ஷல்வாரி, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர் டாக்டர் அரவிந்த குப்தா ஆகியோர் உட்பட சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த 66 இராஜதந்திரிகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 350 பிரதிநிதிகளும் இம்முறை கலந்து சிறப்பித்தனர்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயி பயங்கரவாதத்தை பொது எதிரியாகவும், பொதுவான அச்சுறுத்தல்களாகவும் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளாத வரை அது தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஷாயி தெரிவித்தார்.

சர்வதேச அரசியல் பலம் சமமாக பேணப்பட வேண்டிய அதேசமயம், மனிதத்துவத்தை முதன்மைப்படுத்தி உலகின் சகல நாடுகளும் தத்தமது கொள்கைகளை பொதுவாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் எவ்வளவு மோசமானது என்பது பற்றி எனக்கு நன்றாக தெரியும் ஏனெனில் ஆப்கானிஸ்தான் முன்னர் அமைதியான நாடாகும் பின்னர் பல்வேறு தரப்பினர் தமது நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கில் எமது நாட்டிற்குள் பயங்கரவாதத்தை திணித்தார்கள். இதனால் நாடு பாரிய அச்சுறுத்தல்களை கண்டது இந்த சவால்களுக்கு 13 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்து முகம் கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு. எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் அதனை வைத்து சில அறிவுரைகளையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மதவாதம் மற்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே வன்முறைகளும் பயங்கரவாதமும் உருவெடுக்கின்றது. அதனை சிலர் ஊக்குவிக்கின்றனர்.

அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தவொரு தனிநபருக்கோ குழுக்களுக்கோ நாடற்றவர்களுக்கோ பின்னணியில் ஒத்துழைப்புக்கள் இன்றி பயங்கரவாதத்தை கொண்டு செல்ல முடியாது. எனவே தான் விரும்பும் ஒன்றை ஏனைய நாடுகளுக்குள் திணிக்க பயங்கரவாதத்தை பயன்படுத்தினால் எப்போதாவது அதே பயங்கரவாதம் தன்னையும் வந்து தாக்கும் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். டாக்டர் அரவிந்த குப்தா

முன்னெப்போதும் இல்லாதவாறு இலங்கை மற்றும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்து காணப்படுவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரதி ஆலோசகர் டாக்டர் அரவிந்த குப்தா தெரிவித்தார். பொருளாதார கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளுக்கான இடமாகவும் இந்து சமுத்திரம் கருதப்படுவதால் இதன் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பொருளாதார பலத்தின் பங்கு, பாதுகாப்பு மறுசீரமைப்பு, பயங்கரவாதம், பின்னடைவு கண்ட பொருளாதாரம் மற்றும் வளங்களுக்கான போட்டி போன்றவற்றுக்கு கவனம் செலுத்த வேண்டும். எமது பொருளாதாரம் அதேபோன்று இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்திற்கு பாதுகாப்பு மற்றும் தொலைத் தொடர்பு முக்கியமானதாகும். இதன் மூலம் அவற்றை உன்னிப்பாக அவதானிக்கலாம். எழுந்து வரும் பொருளாதார பலத்தை மேம்படுத்த மறுசீரமைப்பு அவசியம், இவற்றிற்கு கடல்சார் பாதுகாப்பிற்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும். எமது பிராந்தியத்திலுள்ள நாடுகள் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் முக்கியத்துவம் வழங்க வேண்டும். எனவேதான் இலங்கை இரு தரப்பு கடல் பாதுகாப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

விசேட பேச்சாளர்கள்

இதுதவிர லண்டன் பொருளாதார கல்லூரியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியர் கிரிஸ்டோபர் குகர், வெனிஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியர் கலாநிதி மத்தயோ லெக்ரென்ஸி, இலங்கைக்கான இந்திய உர்ஸ்தானிகர் யஸ்வர்தன் குமார் சின்ஹா, இந்தியாவின் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான திணைக்களத்தின் தந்திரோபாய கற்கை மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியர் லோரன்ஸ் எஸ். பிரபாகர், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் செயத் ஷகீல் ஹுஸைன், ஐக்கிய இராச்சிய பாதுகாப்பு போரத்தின் முன்னாள் தலைவி ஒல்கா மேய்ட்லகன்ட் அம்மையார், ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பிரதிநிதி டாக்டர் உத்தம் சின்ஹா, டாக்டர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவு திணைக்களத்தின் பேராசிரியர் ரiதுஸ் ஸமான், இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸியேன்ங்லியேங், இராணுவ தலைமையகத்தின் பதவி நிலை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் அநுர பெரேரா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசன்த கோதாகொட ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதற்கு மேலதிகமாக புதுடில்லியிலுள்ள முரண்பாட்டு முகாமைத்துவத்திற்கான நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினரும், நிறைவேற்று பணிப்பாளருமான டாக்டர் ஆஜய் சஹ்னி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் மனிதாபிமான விவகார ஒத்துழைப்புக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதம இணைப்பாளர் விவியான டி அனுன்டிஸ், எயார் வைஸ் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் (பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய கற்கை) ரியர் அட்மிரல் டி.எம்.பி. வேத்தேவ, வன்னி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபயகுணசேகர, சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, சார்க் அமைப்பின் முன்னாள் செயலாளர் நாயகம் நிஹால் ரொட்ரிகோ, சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் சிங்ஹராஜ் தம்மித தெல்கொட, இஸ்லாமாபாத் பஹ்ரியா பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ விஞ்ஞான திணைக்களங்களின் விரிவுரையாளர் முஹம்மத் அப்பாஷ் ஹஸன் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் டாக்டர் கிரிஷ் நோனிஸ் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இரு நாட்கள் நடைபெற்ற அமர்வுகளின் போது உரை நிகழ்த்தினர்.

ஸாதிக் ஷிஹான்...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.