புத் 67 இல. 37

மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21

SUNDAY SEPTEMBER 06 2015

 

 
சீனாவின் உய்குர் முஸ்லிம்கள்

சீனாவின் உய்குர் முஸ்லிம்கள்

உய்குர் முஸ்லிம்கள் மீதான சீன அரசாங்கத்தின் பாய்ச்சல்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வருட ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு அரசினால் விதிக்கப்பட்ட தடை சீனாவிலுள்ள கம்யூனிஸ்ட் அரசாங்கம் மீது தீவிர அதிருப்தியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளன.

பொதுவாக உலகிலும் குறிப்பாக முஸ்லிம் உலகிலும் மதச் சுதந்திரத்திற்கு எதிரான இந்த அணுகுமுறை பாரிய விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. 1940களில் சோவியத் யூனியனில் ஸ்டாலின் முஸ்லிம்களின் கலாசார, மத சுதந்திரத்தின் மீது விதித்த தடைகள் போன்று இன்று சீனாவில் கம்யூனிஸ்ட் அரசின் கீழ் இத்தகைய அடக்குமுறைகள் தொடர்வதாக அரசியல் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கட்டுப்படாத முஸ்லிம்கள் ஸ்டாலினின் காலத்தில் பனிக் கட்டியில் உறைந்துபோன சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர். பள்ளிவாயல்கள் இழுந்து மூடப்பட்டன. இராணுவ பயிற்சி முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டன.

சில இடங்களில் அவை பிராந்திய கவர்னர்களின் நீச்சல் தடாகங்களாக மாற்றப்பட்டன. அதற்கும் மேலாக, சோவியத் யூனியனின் கீழிருந்த முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் பன்றிப் பண்ணைகளாகவும் பயன்படுத்தப்பட்டன. 1940களின் இந்தக் கசப்பான அனுபவங்கள் இன்று சீனாவில் முஸ்லிம்களைச் செறிவாகக் கொண்டுள்ள சிங்கியாங் மாகாணத்தில் நடைபெற்று வருகின்றமை கவலைக்குரியது.

சீனா கம்யூனிஸ்ட் நாடாக கொள்கையளவில் அடையாளம் காணப்படுகின்றபோதும் வேகமாக முதலாளித்துவத்தை நோக்கிச் சரிந்து வருகின்றது. இன்று பொருளாதார அடிப்படையிலான வர்க்கங்களும் சமூக அடுக்கமைவும் அங்கு தோன்றியுள்ளன.

 பொருளாதார ஏற்றத்தாழ்வு எல்லை மீறிச் செல்லும் நாடுகளுள் சீனாவும் ஒன்று. சீனாவின் இந்த மாற்றம் துணை ஸஹாரா வையும் லத்தீன் அமெரிக்காவையும் விஞ்சுவதாக உள்ளது. இதன் ஒட்டு மொத்த விளைவாக புவியியல் சார்ந்த வர்க்கப் பிரிவினைகளும் இன நெருக்கடிகளும் இந்நாட்டில் தலைதூக்கியுள்ளன.

நாட்டின் ஆட்சியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவில் அமைதியான சமூகம் நிலைநாட்டப்படுவதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த அரசாங்கமே அதற்கெதிராக செயல்படுகின்றது. தனது சொந்தப் பிரஜைகளை பொருளாதார ரீதியிலும் அரசியலிலும் பழிவாங்கும் சீன அரசாங்கம், சிறுபான்மை உய்குர் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தைப் பச்சையாகவே மீறத் தொடங்கியுள்ளது.

சிங்கியாங் பிராந்தியம் உய்குர் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டது. ஒரு காலத்தில் தனி முஸ்லிம் குடியரசாக விளங்கிய இப்பிராந்தியம், சீனாவோடு இணைக்கப்பட்டது. உய்குர் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். பீஜிங்கின் கண்ணோட்டத்தில் அவர்கள் சிறுபான்மையினர்.

குடியேற்றப்பட்ட பின்னர் ஹான் சிறுபான்மையினர் அரசாங்க உதவியோடு வர்த்தகத் துறையிலும் நிருவாகத்திலும் முஸ்லிம்களை முந்திக் கொண்டு முன்னேற்றமடையத் தொடங்கினர். பீஜிங் அரசாங்கத்தின் ஏஜெண்டுகளாகவே அதன் தலைவர்கள் பயன்படுத்தப்பட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அவர்கள் கட்டவிழ்த்தனர். கம்யூனிஸ்ட் அரசு அதற்கு பின்னணியில் இருந்தது.

ஹான் சமூகத்தோடு உய்குர் மக்களை உள்Zர்ப்பதன் மூலம் கலாசாரத் தனித்துவத்தை இல்லாதொழிக்கலாம் என்று கம்யூனிஸ்ட் அரசு கனவு கண்டது. ஆனால், அது சாத்தியமாகவில்லை.

நேரடியான இராணுவ அடக்கு முறையில் அரசு இறங்கியது. சிங்கியாங் பிராந்தியத்தில் இனக் கலவரங்கள் மூட்டப்பட்டன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் குறிவைக்கப்பட்டன. அரச நிருவாகத்தில் முஸ்லிம்கள் ஈடுபடாதவாறு தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டனர்.

உய்குர் முஸ்லிம்களுக்கான உண்மையான அரசியல் சுயாதீனமோ, சுதந்திரமோ சீன அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. வர்த்தகத்துறை அனுபவமும் ஈடுபாடும் கொண்ட உய்குர் இனத்தவர்கள் அரசாங்கத்தின் பாகுபாடான கொள்கையினால் வணிகப் பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டுள்ளனர். வணிகம், நிருவாகம் என்பவற்றின் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், தற்போது மத, கலாசாரத் தளங்களுக்குள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பள்ளிவாயல்கள் அனைத்தும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படுகின்றன. அரச துறையில் பணியாற்றும் முஸ்லிம்கள் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுக்கப்பட்டுள்ளதோடு, பகலில் அனைத்து உணவகங்களும் திறந்திருக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்றது. ஒன்றுகூடும் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

சிங்கியாங் பிராந்தியத்தில் அல்லது கிழக்கு துர்கிஸ்தானில் இடம்பெற்று வரும் இன அடக்கு முறைகளுக்கும் வன்முறைகளுக்கும் சீன அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். அதை விடுத்து அமைதியாகச் செயல்படும் இஸ்லாமிய இயக்கமான கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தின் மீது குற்றங்களை அடுக்குவது அரசாங்கத்தின் கீழ்த்தரமான தந்திரோபாயம் என்று விமர்சிக்கப்படுகிறது.

அங்கு நடைபெறும் அனைத்து இனக் கலவரங்களுக்கும் இஸ்லாமியவாதிகளை காரணம் என்று அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கின்றது.

சீனா உய்குர் இன முஸ்லிம்கள் மீது கடந்த 50 ஆண்டுகளாக கட்டவிழ்த்து வரும் இனப் படுகொலைகள் தற்போது கலாசாரப் படுகொலையாக விரிவுபெற்றுள்ளது. ரஷ்யா, செச்னியாவில் நிகழ்த்தும் இனப்படுகொலைகளை ஒத்ததே கிழக்கு துர்கிஸ்தானில் சீனா நிகழ்த்தி வரும் படுகொலைகளாகும். சீனா அதற்கு ஒருபடி மேலே சென்று கலாசாரப் படுகொலையிலும் இறங்கியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் பிராந்தியத்தில் அமைதிச் சமூகம் பற்றிய கனவு முற்றாகவே உடைந்து போய்விடும். 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமையம் சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதுவரை ஒரு பலமான கண்டனக் குரலை வெளிப்படுத்தவில்லை என்பது இஸ்லாமிய உலகில் பரந்துபட்ட அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து அறபு - முஸ்லிம் நாடுகள் காத்து வரும் நீண்ட மெளனத்தின் ஒரு பகுதி இது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசுகளின் தலையீடு இன்றி உய்குர் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டப் போவதில்லை. இனத்தால் துருக்கியர்களாக விளங்கும் உய்குர் மக்கள், தற்போது துருக்கியின் உதவியை நாடி நிற்கின்றனர்.

துருக்கி அரசாங்கமும் உய்குர் மக்களின் கோரிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆனால், சீன அரசாங்கத்தை அது எவ்வாறு கையாளப் போகின்றது என்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே உள்ளது.

...-ரவூப் ஷெய்ன்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.