மன்மத வருடம் ஆவணி மாதம் 20 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 21
SUNDAY SEPTEMBER 06 2015

Print

 
கவிதை மஞ்சரி

உயிர்ப்புள்ள நொடிகள்

பவித்ரா, கண்டி

அன்னையின் அரவணைப்பில் ஆனந்தமாய் தூங்கியே
ஆத்மாவின் கீதத்தை உணர்கின்ற போது
என்னவோ என்னுள்ளே ஏகாந்த வெளியொன்றில்
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது.
*
தந்தையின் தோள்களில் தூங்கிய பொழுதுகள்
தனயனென் சிந்தையைத் தென்றலாய்த் தீண்ட
எந்தையே உந்தனை எண்ணிடும் போதெல்லாம்
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது.
*
தங்கையின் அண்ணனாய்த் தாங்கிய நாட்களின்
தித்திப்பு நெஞ்சினில் திகட்டாது சுவைகூட்ட
எங்களின் ஆட்சியை இன்றுமே நினைத்திட்டால்
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது
*
தோழியாய் வந்து மனதினைத் தொட்டெழுப்பி
தூங்க விடாமலே துரத்திய சிநேகிதி
ஆழமாய் என்னுள்ளே எழுதிவிட்ட உயிலொன்று
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது
*
நண்பனாய் நுழைந்து நாடி நரம்பெங்கும்
நிசத்தினை உணர்த்தி நடந்திட்ட தோழனே
எண்ணத்தின் உணர்வுள்நீ ஊடுருவும் போதெல்லாம்
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது
*
சகியவள் சிந்தையில் சாகசம் புரிந்தென்னை
சதியின் வலைக்குள் சிக்கவைத்தே சிதைத்திட
தகித்திடும் எண்ணங்கள் தவிப்புக்குள் விழுந்தே
ஒவ்வொரு நொடியும் உயிர்ப்போடு மலர்கிறது

தூக்கம்... என் கண்களை தழுவட்டுமே.....

சாய்ந்தமருதூர் கே.எம்.ஏ.அkஸ்

தூக்கம் என் கண்களைத் தழுவி
இன்றோடு பல மாதங்கள்
விழிச் சாளரம் மட்டும்
பழியை எதிலோபோட்டுவிட்டு
தன்னிச்சையாய் தாழ்ப்பாள் இட
எண்ணங்கள் சி(த)ற (க) டிக்கின்றன,
இமயம் நோக்கிய எதிர் நீச்சலில்..
ஒரு நாளைக்கு குறைந்தது
எட்டவர் தூக்கமாம்
உடம்புக்கு நல்லதாம்
சுகாதாரப் பகுதியின்
சுப, சோபன செய்திக்கு
சாவு மணியடித்து
இன்றோடு பல மாதங்கள்,
மாத்திரைக்கும் மசியாது,
மரணித்துப் போனது தூக்கம்
ஆத்திரத்தால்
அங்குமிங்கும் அசைகிறேன்
காசி கொடுத்தும்,
விலைக்கு வாங்க முடியாத
கண்றாவியின் இஸ்றைக்கால்
நிலை குலைந்து
நிம்மதி இழந்து
உணர்ச்சியற்ற எவறும்
பொம்மை போல உடல்
ஊசலாடுகிறது
தூக்கம் என் கண்களை
தழுவட்டுமே என்ற
சோக பாடலை தினமும்
முகாரியாய் இசை மீட்டியவாறு

யாசீன்பாவா ஹுஸைன், பொத்துவில்

உயிர் வலி
மெளனத்தைப் போன்றது,
மண்ணறைகளின்
மரண தாகம் தீரும் வரை...

அழ முடியாத நிசப்தங்கள்
தாங்கித்தான் ஆக வேண்டும்
பிறக்கும்போதே
இறக்கும் உண்மை சுமந்ததனால்....

உதிரும்
இலைகள் சருகாகும் போது
மரத்தின் உறவு
மறந்து போகும்...

முழுமையான வானம்
முன்னர்போல் கண்ணீர் வடிப்பதில்லை
அது,
பனிக்காலம்
இன்றோ அடைமழை..

இறை நியதி நீளும் போது
பாவத்தின் ஆயுள்
மரணப்படுக்கை தேடும்
மனித மரபுகளுக்கு அப்பாலிருந்தபடி...

விரல்களுக்கிடையில் சிக்குண்ட
எழுதுகோல்களின் வலியும்
நிஜமற்ற மரணமாகலாம்
ஆனால்,
உதிரம் விழுங்கிய
ஊணங்களின் பொய்கள் புலரும்போது...

நீ வா! சாகலாம்
என்பது தத்துவ அழைப்பல்ல
சத்தியத்தின் ஏதோவொரு பக்கமது,
இறைவனும் இவனைப் போன்றென்றால்
அவனும்
இறந்திருப்பான் அப்போதே...

இனியும்
மனித சிந்தனைக்குச் சிக்காத
ஒரு விடயம்தான்
மரண வார்த்தைகள்...

போகாவுறவும்
கேளாக் கடனும் கெடும்

மஜீத் ராவுத்தர், கிண்ணியா

பிறப்பாலான உறவெனினும்
பிணைப்பாலான உறவெனினும்
சிறப்பாக்கச் சீராய்
சென்று வருதலினிது

போய் நெருக்கம் வைத்து
போதுமாய் சுகம் விசாரித்து
உய்த் துணர்க் துறவாடா
உறவு கெடும் சளித்து

கொடுத்த கடன் கேளாமல்
கெடும், அது சேராமல்
அடுத்து பகை மூளாமல்
அதைக் கேளும் நோகாமல்

போகா வுறவு பகை
கேளாக் கடன் கெடும்
ஆகா(த) அவல நிலை
உறவை போய் அணைத்து
அறவாகாக் கடனைக் கேட்டு
அறவாக்கு உறவை வளர்த்து

தெளிந்துவிடு

பkனா பைஸல், அம்பாந்தோட்டை

நாய்க்குட்டிகள் போல்
உன் பிள்ளைகள்
உன்னைப் புடை சூழ
நீயோ!... நடுத்தெருவில்
வீழ்ந்து கிடக்கிறாய்
ஊரார் வேடிக்கைப்
பார்க்க....

கல்வி எனும் அமுதினை
உன் பிள்ளைகளுக்கு
ஊட்ட வேண்டிய நீ...
வயிறு முட்ட கல்
எனும் அமுதினை
உண்டு கல்லாய் நிற்கிறாய்!

பாழாய்ப் போன
குடி போதையால்
பாழாகிப் போனது
உன் பிள்ளைகளின்
எதிர்கால இலட்சியங்கள்

வசந்தம் வீசிட
வேண்டிய அவர்கள்
வாழ்வில் புயற்காற்றை
ஏன்? அள்ளி வீசுகிறாய்
மாற்றங்கள் நாளை
வரும் என்று
காத்திருக்கும் உன்
மனைவிக்கு
கிடைப்பதோ
ஏமாற்றம் ஒன்று
தான்

சிந்தித்துப் பார்....
தள்ளாடியது போதும்
தெளிந்து விடு...
உன்னால் முடியும்!
இந்த சிறிய
உலகை வெல்ல

உறவுகள்

சுந்தரம் சுபத்ரா

கையில்
கனமிருந்தால்
காணாத உறவெல்லாம்
கண்ணிமைக்கும் முன்னாலே
காலடியில்
கரம் சோர்ந்து
களைத்து விட்டால்
சொந்த உறவுகளும்
தொலைதூரம்
தொலைந்துவிடும்....

நீ கவி தை

ராணி பெளசியா, கல்லான.

கவிக்கும் கவிக்கும்
புரியும் மொழி
தாவும் கவிக்கோ
புரியா மொழி
கவி தை
நீ
தைந்தாலும்
நெய்தாலும்
நயத்து உடன்
கரும மாற்று
வரிக்கும் வரிக்கும்
இடையுறாத்
தொடர்பு வை
வரியானாலும்
அடியானாலும்
கருத்தாழ மிக்க
அடித்தள மிடு.

பயணம்

பீ.ரீ.அkஸ், கிண்ணியா - 07

வாழ்க்கைப் பயணம்
ஒரே இருள் மயம்
வழி காட்டி வந்த
நம்பிக்கை நட்சத்திரங்கள்
மங்கி மறைகின்றன
துன் முட்களை
மிதிக்கின்ற போது
சோக மலைகளும்
மோதுகின்றன.
இன்பத் தென்றலின்
தழுவலை நினைப்பதில் மட்டும்
ஆனந்தக் களிப்படைகிறது
மனசு

சிதைந்து போகும் சிட்டுகள்

எம்.ஐ.எம். அஷ்ரப், சாய்ந்தமருது.

மலிந்துவிட்டன வல்லூறுகள்
சின்னஞ்சிறு சிட்டுக்களை
நேரம் பார்த்து
சாதகத்தை வரவளைத்து
வலிந்து தூக்கிச் செல்கின்றன
இன்றைய ‘ஸ்பெசல்’ களாய்

இது வாழ வேண்டியது
உலகாசை உணர்ச்சிகளால்
பின்னலிடப் பட்டது
தன்மானம் மிகைத்தது
இமயமென சாதித்திட
எதிர்பார்ப்புகள் பலதேக்கி
வெளியே நடமாடி வருகின்றன

விரும்பிய உணவு கொடுத்து
வேண்டிய உடையளித்து
தலைவாரி பூச்சூடி
அழகுபார்த்து அனுப்பிவிட்டு
வழிமேல் விழிவைத்து
மீள் வருகைக்காய்
பார்த்திருக்கிறது பெற்றவயிறு

இந்தப் பிஞ்சுகள் தனித்ததல்ல
சொந்த பந்தங்களால்
புடைசூழப் பெற்றதென்பதை
புரிந்து கொள்ள திராணியற்ற
வக்கிர புத்திகளே எங்கும்

இந்தப் பெண்மை
பெறுமானமற்ற தொன்றாய்
உயிரற்ற ஜடங்களாய்
அப்பாவி முயல்களென
வெகுளி மான்களென வேட்டையாடி
கொத்திக் குதறிச்
சிதைத்துச் செல்லப்படுகின்றன
ஓநாய் முகங்களால்
வெகு தூர இடைவெளி
இதற்கும் மனிதத்திற்கும்

ஒழுக்கம்

எஸ்.எம்.மனாசிர், அனுராதபுரம்

வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்வதற்கு
தேவையடா நேர்மை
நேர்மை வருவதென்றால்
தேவையடா பொறுமை
பொறுமை வருவதற்கு
தேவையடா பணிவு
பணிவு வருவதற்கு
தேவையடா அறிவு
அறிவு வருவற்கு
தேவையடா ஒழுக்கம்
அனைத்தையும் உள்ளடக்கியது
ஒழுக்கமடா

என் தாயே...

ஏ.எறிக் பிறையன், பண்டாரவளை

கருவறை என்னும் இருளில் - அன்பு
என்னும் ஒளியால்
என்னை சுமந்தவள் நீ.....

என் பசியைப் போக்க - உன்
உதிரம் பாலாய் மாற
பருகத் தந்தவள் நீ.....

பரந்த இந்த உலகை - பத்து
விரலால் அடக்க
சொல்லித் தந்தவள் நீ......

கடவுளை உன்னால் காண்கிறேன்
என சொல்ல மாட்டேன்
ஏனென்றால்
உன்னை தவிர கடவுள் - எனக்கு
வேறில்லை

என் தாயே........
என்றும் நான் உன்னோடு
இருப்பேன்
உன் மகனாக அல்ல
உன் உயிராக

அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்

பூகொடையூர் அஸ்மா பேகம்

அடுப்பில் விறகோடு
அடுக்கப்படுவதாய்
பெண்ணின்
ஏக்கங்களும்
எதிர்பார்ப்புகளும்....

அடுப்பூதப் படிப்பெதற்கு
என்ற காலம்
கொஞ்சம் வளர்ந்து
படித்துவிட்டு
அடுப்பூதும்
பரம்பரை இது

தினமும்
எத்தனை முறைதான்
செய்து மாய்வதுவோ
அதே
சோடியம் குளோரைட்டு
பரிசோதனையை....

அடுக்களை
அந்தப் புரத்தின்
ஓய்வில்லா
எந்திரங்கள்!

ஆற்றல்களை
அடுப்போடு
எரித்து
அறுசுவை படைக்கும்
இயந்திரப் பெண்கள்!

காய்ச்சலோ,
கர்ப்ப உபாதையோ,
காரணங்கள் அல்ல,
சமைப்பது என்பது
சட்டமாக்கப்படாத
சட்டம்

உள்ளங்கையில் உலகம்,
கண்ணிமைப்பதிலும்
விஞ்ஞானம்
எல்லாம் வந்த போதும்

பாரதி கண்ட
புதுமைப் பெண்
வரவேயில்லை
அடுக்களையை விட்டு

ஐம்பது ஆண்டுகளில்
ஒரு பெண்ணின்
பத்தாண்டுகள்
சமையலோடு
சாம்பலாவதை
சாட்டைக் கவியால்
சொல்ல - இன்று
பாரதிகள் இல்லை

மனிதம்

கவிநேசன் நவாஸ்

மொழிகளோடு
வார்த்தைகள் குடைப்பிடித்த நடக்க,
கிளைவிரித்து கலாசாலைகளில்
கற்றுக் கொடுத்தவராகவே
கடமைப் புரிந்தவர்தான்
இந்த அப்துல் கலாம்!

இந்தியாவுக்கு
தன்மான ஆடைவழங்கி
இளைய இதயங்களுக்கெல்லாம்
புதிய இரத்தம் பாய்ச்சியவர் அல்லலவா இவர்!

இவரின்
அழுக்குப்படாத கைகளால்
இந்தியா ஆளுமை அடைந்திருக்கிறது.
ஏ... இழப்பை நினைத்து
அழுகிறதே....
இந்திய கண்கள் மட்டும்தானா
இல்லை,
இதயமுள்ள எல்லா கண்களும்தானே!

நிஜத்திலிருந்து
தீக்குச்சி வார்த்தைகள்
பிறப்பெழுத்ததே
உங்கள் விஜயத்திற்கு பிறகுதான் கலாம்!

உலக போர்குணத்தை அடக்கிய
இந்திய நெருப்புகளம் நீங்கள்!
உங்கள் ஈரப்பணிகளில்
ஊறி திளைத்திருக்கிறது
சூரிய கிரணமும் தான்!

நினைவு துயரங்கள்
என்றும் எங்கள் உயிருடன்
ஒட்டியிருக்கும் வரை
ஜன்ம ஜன்மங்களாகவே
உங்கள் ஜனனம்
இன்னும் நெருக்கமாகவே
பேசப்படும் நாளையும்!

ஒரு சிறந்த மனிதச் சேமிப்பை
இழந்த பிறபிப்போடு,
எங்கள் இமை ஜன்னல்ளெல்லாம்
சப்தமில்லாமல் சாத்தப்படுகிறதே கலாம்
வடியும் கண்ணீர்களோடு...!


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]