மன்மத வருடம் ஆடி மாதம் 31 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 துல்கஃதா பிறை 01
SUNDAY AUGUST 16 2015

Print

 
“மாந்திரீகம் ஒரு தற்காப்புக்கருவி; கொலைக் கருவியல்ல...”

“மாந்திரீகம் ஒரு தற்காப்புக்கருவி; கொலைக் கருவியல்ல...”

கிழக்கிலங்கையில் மாந்திரீகர்களுக்கு பேர்போன இடம் கோளாவில். இந்தக் கிராமத்தில் பில்லி சூனியம் வசியம் கழிப்பு போன்ற வித்தைகளில் தேர்ந்த மாந்திரீகர்கள் பலர் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள். மட்டக்களப்பு பிரதேசத்தில் எந்த வீட்டில் ஒரு கழிப்பு நிகழ்ந்தாலும் அது கோளாவில் மாந்திரீகரொருவரால் நிகழ்த்தப்படுமாயின் அதன் மதிப்பும் பயனும் விசேட மாயிருக்கும். மட்டும் மாவட்டப்பகுதி மாந்திரீகர்கள் யாராயிருந்தாலும். அவர்கள் எப்படியும் கோளாவிலுடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

அப்படிப்பட்ட தியாகி பெற்ற கோளாவில் கிராமத்தைச் சேர்ந்தவர், அண்மையில் காலஞ் சென்ற கணபதி இளையதம்பி என்ற முதியவர். அவர் மாந்திரீகத்துடன் சித்தவைத்தியத்தையும் தமது தொழிலாகச் செய்துவந்தார். அவரது இளமைக்காலத்தில் காரைதீவில் சித்துக்கள் விளையாடிய சித்தானைக் குட்டி சுவாமிகளை தான் சந்தித்தகால கட்டங்களில் நடந்த மெய்சிலிர்க்கும் சம்பவங்கள் சில வற்றை திரு. இளையதம்பி உயிரோடு இருந்தபோது என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவற்றிலொன்றை அவர் வார்த்தைகளிலேயே இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீ சித்தானைக் குட்டி சுவாமிகளோடு எனது தமயன் வெள்ளையன் பரிகாரி என்பவர் நகமும் சதையுமாக இருந்தவர். காரைதீவிலிருந்து கோளாவில் 12 மைல் இத்தனை தூரத்தையும் நடந்தே வந்து வெள்ளையரைச் சந்திக்குமளவுக்கு சுவாமிகளின் நட்பு இருந்தது. வெள்ளையரும் அப்படித்தான். நினைத்தநேரத்தில் நேரம் காலமென்றில்லாமல் சுவாமிகளைப் பார்க்க அவரது ஆசிரமத்திற்குப் புறப்பட்டுவிடுவார். சாதிமுறை தீவிரமாயிருந்த அந்தக்காலத்தில் “நந்தனார்” குலத்தைச் சேர்ந்தவரென்று சுவாமிகளால் போற்றப்பட்ட வெள்ளையன் பரிகாரியின் வீட்டில், வைதீகம் பார்க்கும் பல உயர்சாதி ஆசாரசீலர்களை சமமாகப் பந்தியிருத்தி போசனம் செய்வித்த பெருமை சுவாமிகளுக்குண்டு. தமயனார் கொண்டிருந்த நட்பால் எனக்கும் சுவாமிகளோடு தொடர்பு கொள்ளும் பேறுகிட்டியது. தமயனிடம் காட்டிய அதே பிரியத்தை அவர் என்னிடமும் காட்டியதையெண்ணி நாம் மகிழ்ச்சி யடைந்தேன்.

இக்காலத்தைப்போல் அக்காலத்தில் எனக்கு அஹிம்சாதர்மத்தில் நம்பிக்கை இருந்ததில்லை. கண்ணுக்குக்கண், பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் குணமே என்னிடம் மிகுந்திருந்தது. அன்பு, தியாகம் போன்ற மெல்லிய உணர்வுகளுக்கு இடமளிக்காமல் நான் வாழ்ந்த முரட்டுத்தனமான வாழ்க்கை, பழகிய சூழல், இவைகளெல்லாம் அதற்குத்துணை செய்தன. பழிக்குப்பழி என்னும்போது இதையெல்லாம் நான் நேருக்கு நேராகவே செய்தேன் என்கிaர்களா? அதுதானில்லை. எனக்குத் தீங்கு செய்தவன் எவனோ, அவனுக்கு நயவஞ்சகமாகச் சூனியம் செய்தேன். அவன் வீழ்ச்சியில் உள்ளூர ஆனந்த மடைந்துவந்தேன். என்னிடம் வருவோரும் இத்தகைய காரியங்களுக்காகவே என்னை நாடி வந்தனர். ஏற்ற சன்மானங்கள் தந்தனர்.

இப்படியாக, சொந்தக் குரோதத்திற்காகவும், காசு தருகிறார்களேயென்பதற்காகவும். இது முற்றிலும் சரியென்று எனக்குள்ளாகவே தீர்மானித்து விட்ட ஒரு தடத்தில் கண்ணை மூடிக்கொண்டு நடந்த என்னை, தடுத்து நிறுத்தி அதற்கு சித்தானைக் குட்டியையே சாரும். அது எப்படியென்று கேட்கிaர்களா?

நானும் அக்கரைப்பற்றில் வசித்த வைத்த என்ற தனக்காரப் போடியாரும் நண்பர்கள். வைத்திக்கு மாந்திரீகத்தில் நல்ல ஈடுபாடு. தனது நெற்செய்கை சரியான விளைச்சல் காணாமை குறித்து அதனை நிவர்த்திசெய்ய ஒரு விடங்கு செய்வது சம்பந்தமாக ஒரு தினம் என்னை நாடிவந்தவர். அன்றிலிருந்து எனக்கு நண்பராகி வீட்டிற்கு வரப்போகத் தொடங்கிவிட்டார்.

வயலுக்குச் செல்லும் வேளைகளைத் தவிர மற்ற வேளைகளில் அவரை அநேகமாக என் வீட்டில் காணலாம். இருவரும் கூடிக்குடித்து முஸ்பாத்திகள் பண்ணுவோம். அவரது சாதிக்காரர்களில் யாரும் எங்களுடன் இப்படித் தொடர்பு வைத்துக்கொண்டதுமில்லை. குடித்துக் கும்மாளம் போட்டதுமில்லை. வைத்தியின் மூத்தமகன் கணபதிக்கு, தங்கள் குலத்துக்கு இப்படி ஓர் அவப்பெயரை தன் தந்தை உண்டாக்குகிறாரேயென்று ஒரேமனத்தாங்கல். தந்தையை நான்தான் கெடுப்பதாக என்மீது ஒரே ஆத்திரம். தகப்பனைத்தடுக்க அவனால் முடியவில்லை. அதனால் கோபத்தை என்மீது காட்டத் தொடங்கினான். எந்த வேளையில், எந்த இடத்தில் என் தலைக் கறுப்பைக் கண்டாலும் காரணமின்றி ஏசத் தொடங்கினான்.

முதலில் இதையெல்லாம் நலன் பொருட்படுத்தவில்லை. ஒருநாள் அக்கரைப் பற்றுச் சந்தையில் வைத்து, பலர் முன்பாக என்னை வலிய வம்புக்கிழுத்து நீதியீனமாகப் பேசிவிட்டான். காலை ஓங்கிக் கொண்டு உதைக்கவும் வந்து விட்டான். மற்றவர்கள் தடுத்து விலக்கிவிட்டார்கள்.

எனக்கோ சொல்ல முடியாததுக்கம்; ஆத்திரம், அவமானம் ஒரு வாரத்திற்குள் யார்யாருக்கோ இலஞ்சம் கொடுத்து அவனது காலடி மண்ணை எழுத்துவரச் செய்தேன். சூனியத்திற்கான சடங்குகளைச் செய்து மண்ணை மந்திரித்து ஊமக்கொட்டை (காய்ந்த பனங்கொட்டை) ஒன்றினுள் அடைத்து பாம்புப்புற்று ஒன்றினுள் போட்டுவிட்டேன். இந்த ஊமக்கொட்டையானது புற்றினுள் கிடந்து நாள் தோறும் உக்கி உடைந்து சிதிலமாகி மண்ணோடு மண்ணாவதுபோல், இதனுள் அடைக்கப்பட்ட காலடி மண்ணுக்குரியவனும் வியாதியாய் படுக்கையில் விழுந்து நாள்தோறும் அவஸ்தைப்பட்டு நலிந்து இறந்துபோவான். உயிர்கொல்லும் சூனியங்களுன் இந்தக்காலடி மண்ணை எடுத்துச் செய்யும் சூனியம் கொடுமையானது. அதைச் செய்தவனே மனமிரங்கி அதற்கு மாற்றுச் செய்தாலன்றி பாதிக்கப்பட்டவ¨ன் மீட்பது அரிது.

இதனைச் செய்த சிலநாளில் கணபதியென்பவன் வாதம் வந்து படுக்கையில் வீழ்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அவனது கால் ஒன்று முற்றாகவே செயலிழந்து போய்விட்டதாகவும், அந்தக்காலில் சதா நெருஞ்சி முட்கள் தைப்பது போன்ற குத்துவலியும், தீப்பட்டது போன்ற எரிவும் கண்டிருப்பதாகவும் அவனது தகப்பனே வந்து என்னிடம் முறையிட்டார். நான் வெளிக்கு அனுதாபப்பட்டாலும் உள்ளூர ஆனந்தமடைந்தேன். அன்றைக்கு அத்தனைபேர் முன்னிலையில் எனக்கு காலை ஓங்கிக் கொண்டு வந்தானல்லவா? அதற்குகத்தகுந்த பரிசு.

இது நடந்து சில நாட்கள் கழித்து ஒரு தினம் காரைதீவில் சுவாமிகளுக்கு ஊரவர்களால் ஏதோ அசம்பாவிதம் நேர்ந்ததாக கேள்விப்பட்டு எனது தமயன் அவரை விசாரித்தறிய போனார். அவருடன் கூட நானும் போனேன்.

சுவாமிகளுடன் வாழ்க்கை எப்போதும் மனத்தாலொன்று, உடலாலொன்று என்று இரண்டு வதிமாயிருந்தது. அவர் மனசு எவ்வளவு சுத்தமாயிருந்தது. கருணை நிறைந்து ததும்பியிருந்தது என்பதற்கு அவரது சித்துவிளையாட்டுகள் மாத்திரமல்ல, அவரோடு ஆழ்ந்து பழகிய அனைவரோடும் அவர் நடந்து கொண்டவிதமும் வெளிப்பாடாயிருந்தன. அதற்கு எதிர்மாறாக அவரது தோற்றமும் கிரியைகளும் அசிங்கமாயிருந்தன. தம்மைக் கருவியாக்கி சித்துக்களை நன்மைகளை அடைந்தால் மட்டும் போது மென்று தம்மை நாடிவந்து மனதால் ஒருவித மாற்றமும் அடையாளமல் திரும்பிச் செல்கிறவர்களுக்கு ஒருபாடம் புகட்டவே அவர் தம்மிடம் அசிங்கமான நடவடிக் கைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். கட்டிய கோவணத்தைத் தவிர ஒரு சாதுக்குரிய எந்த வெளி அடையாளங்களையும் காட்டாமலிருந்தார். பச்சைத்தூஷணங்களாலேயே தம்மை நாடி வருகிறவர்களோடு மாத்திரமல்ல, ஊரவர்களோடும் பேசினார்.

தம்மிடம் சித்துக்களை எதிர்பார்த்து குறைகளோடு வருபவர்களுக்கு இப்படியெல்லாம் பரீட்சை வைத்து, அவர்கள் அதில் தேறிய பின்னரே, தமக்குள்ள அசாத்திய வல்லமையினால் அவர்கள் குறைபோக்கினார். இன்னும் வெளி ஆசாரங்களை மேலுக்குக் கடைப்பிடித்துக்கொண்டு உள்ளத்தை நகரக் கிடங்காக்கி வைத்திருப்பவர்களை எள்ளி நகையாடவே தாம் இவ்விதம் வேஷம் போட்டா¡ர். இதுவே அவருக்கு அநேக எதிரிகளைத் தேடிக்கொடுத்தது. காரைதீவு வாசிகளே அவருக்கு எதிரிகளானார்கள். அவரது பேச்சிலும் செய்கைகளிலும் வெகுண்டு அவரது உயிருக்கு உலைவைக்கப்பல தடவைகள் முயன்றார்கள். அத்தனை தடவைகளிலும் அவர் அற்புதமாய் உயிர்தப்பியிருந்தார். சமீபத்திலும் ஓரிரவு கல்முனைக்குடியிலிருந்து சுவாமிகள் கள்ளுவெறியோடு தள்ளாடியப்படி தன்னந்தனியாக ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருக்கும்போது, அவர்தனியே வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த ஊரவர்களில் சிலர் அவரை வழிமறித்து அடித்து, குற்றுயிரும் குலையுயிருமாக்கி, பற்றையும் புதரும் சூழ்ந்த ஓர் ஒதுக்குப்புறத்தில் போட்டு மேலே குப்பை கூளங்களையும் கட்டைகளையும் போட்டுமூடி தீமூட்டி விட்டனர். தீ நன்கு பற்றியெரிந்து சுவாலைகள் வானளாவ எழும்வுரை பார்த்திருந்துவிட்டு ஒழிந்தான் துரோகி என்று வெற்றிப் பெருமிதத்துடன் ஊருக்குத் திரும்பியபோது, வழியில் ஓர் உருவம் இருட்டோடு இருட்டாக நின்றவாறே அவர்களை வரவேற்றது.

“என்னப்பா தம்பிமாரே...? ஆனைக்குட்டி செத்துப் போயிட்டானா?” என்று எகத்தாளமாய் சிரித்தவாறே கேட்டது. அவர்கள் திடுக்கிட்டனர். அஞ்சிப்பதறி மூலைக்கு மூலை சிதறி ஓடினர். அந்த உருவம் சாட்சாத் சித்தானக்குட்டிச் சுவாமிகள்தான்.

அந்தச் சம்பவத்தைப்பற்றி காரைதீவிலிருந்து அக்கரைப்பற்று பொத்துவில் வரை பேச்சு அடிப்பட்டது. அதைக் கேள்விப்பட்டு அண்ணனும் நானும் அவரைப் பார்க்கப் போனோம். நாங்கள் போன நேரம் முற்பகல் பத்துமணியிருக்கும். சுவாமிகள் ஆசிரமத்திற்கு முன்னாயிருந்த மாமரநிழலில் அமர்ந்து தம்மைச் சுற்றியிருந்த பலருடன் பேசிக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் முகமன் கூறி வரவேற்றார். முதலில் அண்ணனின் யோகசேமங்களை விசாரித்துவிட்டு பின்னர் என்னிடம் கேட்டார்.

“என்னப்பா இளையதம்பி? இந்தக் காரைதீவுச்சனங்கள் என்னைச் சாகடிக்கப்பாத்தாங்களே, இவங்களுக்கு ஒரு சூனியம் செய்வமா?

எனக்குத்திக் கென்றது. எதற்காக எடுத்தாற்போல் என்னிடம் இப்படிக் கேட்கிறார்? ஒருவேளை...

“அதுசரி, அந்தக் கணபதியின் உயிருக்கு எத்தனை நாள் தவணை குறித்திருக்கிறாய்?” என்று கேட்டார் மறுபடியும். எனது உள்ளுணர்வை அறிந்து கொண்டவர்போல.

எனக்கு வியர்த்துவிட்டது. கையும் மெய்யுமாய்ப் படிபட்ட ஒரு குற்றவாளிபோல தலைகுனிந்து நின்றேன்.

“இஞ்சபார் இளையதம்பி, என்னை அடிச்சிச்சுட்டு சாம்பலாக்க வந்தவங்களையே நான் ஒண்டும் செய்யல்ல. கேவலம் உன்னைவிட வயசிலும் அறிவிலும் அனுபவத்திலும் குறைஞ்பொடியன். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு ஏசி அடிக்கவந்தான் எண்டுறதுக்காக அவனுக்குச் சூனியம் செய்திருக்கிaயே... இது நியாயமா?”

சுவாமிகளின் பேச்சைக்கேட்டு என் அண்ணன் உட்பட அங்கு கூடியிருந்த அனைவரும் என்னை ஒரு தினுசாகப் பார்க்கவே எனக்கு என்னவோ போலிருந்தது. “நீங்க என்ன சுவாமி சொல்லுaங்க?” என்று கேட்டு சிரித்து மழுப்பப் பார்த்தேன்.

சுவாமிகள் பெரும் சத்தமாய்ச் சிரித்ததார். பிறகு கணபதி எனக்கு அடிக்கவந்தது முதற்கொண்டு நான் சூனியம் செய்து அவனைப் படுக்கையில் வீழ்ந்தியதுவரை ஒவ்வொன்றையும் அட்சரம் பிசகாமல் வரிசையால் கடகடவென்று சொல்லிவந்து கடைசியில், “மாந்திரீகம் ஒரு தற்காப்புக்கருவியே தவிர கொலைக்கருவியல்ல; தகுந்த வகையில் அதனைப்பயன்படுத்தி வந்தால்தான் உனக்குப் பின்னால உண்ட பரம்பரையிலும் அது உயிர் வாழும். என்ன, தெரிஞ்சுதா? என்றார்.

நான் வாயடைத்துப் போய் நின்றேன்.

“இப்போ என்ன சொல்லுறாய்? அவனுக்கு வச்ச சூனியத்த விலக்கிவிடுறியா? இல்லாட்டிநான் ஏத்துக்கொள்ளவா?” என்றார் தொடர்ந்து.

ஏற்றுக் கொள்வதென்றால் வாதம் வந்து கிடக்கும் கணபதியின் நோயையும் அவஸ்தையையும் தான் ஏற்றுக்கொள்வது. இந்தத் தியாககுணம் அவரிடமுள்ள சிறப்புகளில் தலையாயது. இந்த அருங்குணத்தின் முன்னே என் மனத்திலிருந்து வன்மம் குரோதம்மெல்லாம் போன இடம் தெரியவில்லை.

“இல்லச் சுவாமி, நான் விலக்கிவிடுறன். இனிமேல் இப்படியான தப்பான வழிக்கெல்லாம் போகவேமாட்டன் சுவாமி” என்று மனம் கசிந்து மன்னிப்பும் கேட்டேன் அவரிடம் நாத்தழுதழுக்க.

அன்று பிற்பகல் அவரிடமிருந்து விடைபெற்று ஊர்சென்றதும் நான் செய்தமுதல் வேலை, மாற்றுவிடங்கொன்றைச் செய்து கணபதிக்குச் செய்த சூனியத்தை பயனிழக்கச் செய்ததுதான்.

அத்துடன் கணபதிக்கு நானே மருந்து செய்து ஒரே வாரத்தில் அவரது நோயைக் குணமாக்கினேன். அவனும் தான் செய்த குற்றத்திற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்டான். சுவாமிகளின் உபதேசப்படி அன்றிலிருந்து இன்றுவரை தீமையான எந்த வழிக்குமே நான் மாந்திரீகத்தை பயன்படுத்தியதில்லை.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]