புத் 67 இல. 32

மன்மத வருடம் ஆடி மாதம் 24 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 23

SUNDAY AUGUST 09 2015

 

 
அரசியலில் ஈடுபட்டால் சொன்னதை செய்யவேண்டும்

அரசியலில் ஈடுபட்டால் சொன்னதை செய்யவேண்டும்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க

உள்ளதைச் சொல்லி, சொல்வதைச் செய்யும் பழக்கம் குடும்பத்தில் இருந்து வரவேண்டும். அப்போதுதான் நாட்டிலும் நடைமுறைப்படுத்தி சிறந்த அரசியல் வாதியாகத் திகழ முடியும் என்கிறார் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க. தாம் இதை யதார்த்தமாகக் கடைப்பித்து வருவதாகக் கூறும் அவர், லலித் அத்துலத் முதலியின் அரசியல்வழியில் தடம் பதித்து வந்தவர். தாம் கொண்ட கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர். அதனால்தான் பத்தொன்பது வருடகாலமாகக் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டு இலங்கை அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

"நான் பிறப்பால் சிங்கள கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன். காதலித்துக் கரம்பிடித்தது மலே இனப்பெண். வர்த்தகத்தில் அநேகமானோர் தமிழர்கள். ஆகவே நாட்டின் நல்லிணக்கத்திற்குக் குடும்பத்திலிருந்தே முன்னுதாரணத்தைக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். தொழில் ரீதியாகக் கணக்காய் வாளரான அவர் துடிப்பான அரசியல் செயல்பாட்டிற்காக 2000ம் ஆண்டில் சிறந்த இளம் அரசியல்வாதிக்கான விருதி னையும் பெற்றுக்கொண்டு இற்றைவரை தோல்வியில்லாத ஓர் அரசியல்வாதியாக மிளிர்கிறார்.

"மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் அதாவது 1988-89 காலப் பகுதியில் அரசியலுக்குள் பிரவேசித்த நீங்கள், குறுகிய காலத்தில் மக்களின் செல்வாக்கினைப் பெற்றுக்கொண்டிருக்கிaர்கள் இஃது எப்படி சாத்தியமாயிற்று?"

"நான் அதிர்ஷ்டவசமாகவே அரசியலில் பிரவேசித்தேன். அரசியலில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் பணியாற்றக் கிடைத்தமைதான் மக்களைக் கவர்வதற்கான காரணம் என நினைக்கின்றேன். லலித் அத்துலத் முதலி அவர்களின் வழிகாட்டலும் எனக்குப் பக்கபலமாகவிருந்தது."

"சில வருடங்களிலேயே கோட்டை தொகுதி அமைப்பாளராகவிருந்து தேர்தலில் போட்டியிட்டு, நான்கு இலட்சத்து 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டீர்கள். அந்த நிலைமை மாற்றம டைந்திருக்கிறதா, அல்லது அவ்வாறே காணப்ப டுகிறதா?"

"அன்றைய நிலையைவிடவும் தற்போது வளர்ச்சியடைந்துள்ளதென்றே சொல்வேன். விசேடமாக இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பர்கர் இன மக்கள் ஒன்றாக வாழ்வதற்கான தலைமைத்துவத்தை என்னால் கொடுக்கமுடிந்துள்ளது. வட கொழும்பு தொகுதியில் அந்த மாற்றத்தைச் சுட்டிக்காட்டுவதற்கு என்னால் முடியும்."

"அதிர்ஷ்டவசமாக அரசியலுக்குள் பிரவேசித்ததாகச் சொன்னீர்கள். அரசியலில் உங்களின் நோக்கு என்னவாகவிருந்தது?"

"ஓர் இளைஞராக அதுவும் ஒரு தொழில்வாண்மையுள்ள இளைஞர் குழாம் கட்சியில் இணைந்துகொண்டபோது நானும் இணைந்தேன். அதனால், சவால்களுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது எங்ஙனம் என்பதைப்பற்றிச் சிந்தித்தோம். பின்கதவால், தேசியப்பட்டியிலில் வராமல், ஏன் போட்டியிட முடியாது எனச் சிந்தித்தோம். அந்த இடத்தில்தான் எனது அரசியல் பாதை விசாலமானது"

"உங்களின் அந்த இலக்கு இற்றைவரை நிறைவேறியிருப்பதாகக் கருதுகிaர்களா?"

"நாம் நினைத்தோம், அரசாங்கமொன்றை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று. எனவே அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டோம்"

"உங்களின் அனுபவத்தைக்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எத்தகைய யோசனைகளை முன்வைத்திருக்கிaர்கள்?"

"இந்த 184 நாட்களில் எமது திறமைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை நிருபித்திருக்கின்றோம். கடந்த பதினொரு ஆண்டுகளாக முடியாதுபோனவற்றை நாம் செய்து காண்பித்தி ருக்கின்றோம். நாட்டைத் திருத்த முடியுமா? என்பதைவிட, அதற்கான அக்கறை உண்டென்பதை வெளிப்படுத்தியிருக்கிறோம்."

"உங்கள் கட்சியின் விஞ்ஞாபனத்தைத் தவிரவும், உங்களின் அனுபவங்களைக்கொண்டு நாட்டு மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட ரீதியில் முன்வைத்துள்ள யோசனைகள் யாவை, மீண்டும் நிதியமைச்சர் பதவியினை ஏற்பீர்களா?"

"முதலில் நியமனம்பெற வேண்டும். அது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கரங்களில் தங்கியுள்ளது. அதற்கான நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன். எம்மை ஓரக்கண்ணால் பார்ப்பதை நிறுத்துமாறு மக்களுக்குச் சொல்ல வேண்டும். நாம் சொல்வதைச் செய்பவர்கள் என்பதாலும் கட்சியைவெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதாலும், நாம் முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தின் ஊடாக நாம் மக்களிடம் சொல்லியிருக்கின்றோம்,

நான் சொல்வதை நம்புவதற்கு முதல் நாம் செய்ததை நம்புமாறு. சம்பள உயர்வு, விலைவாசி குறைப்பு, கர்ப்பிணித்தாய்மாருக்கான போஷாக்குத் திட்டம் முதலானவற்றை நாம் மேற்கொண்டபோது, எப்படிச் செய்ய முடியும் என்று கேள்வி கேட்பதைவிடுத்து, எப்படிச் செய்திருக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும்"

"கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் வர்த்தக சமுகத்தினரின் வளர்ச்சியை முடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நினைக்கிaர்கள்?"

"அவர்கள் அனைவருக்கும் உரிய இடம் வழங்கப்படும். தமிழர்களுக்குப் பொருத்தமான இடம். சிங்களவர்களுக்குப் பொருத்தமான இடம், முஸ்லிம்களுக்குப் பொருத்தமான இடம், கிறிஸ்தவர்களுக்கு, பெளத்தர்களுக்கு என அவரவர்க்கு உரிய இடத்தை வழங்குவோம். முன்பு அடிப்படைவாதிகள் நிர்வகிக்க முயற்சித்தார்கள். ஒருவருக்குத் திறமையிருக்குமாயின் அந்தச் சந்தர்ப்பத்தை அவர் பெற்றுக்கொள்ள வேண்டும். அஃது முதற்கட்டம். இரண்டாவது தொந்தரவு செய்யப்படுவதை நிறுத்த வேண்டும். இறக்குமதி செய்தால் சுங்கப் பிரச்சினை உண்டு. அது சாதாரணமானது. உயர் மட்டத்தில் தூய்மை என்றால், கீழ் மட்டத்திலும் தூய்மையை எதிர்பார்க்க முடியும்."

"நீங்கள் நுகர்வோர் விவகார அமைச்சராகவிருந்தபோதும் நிதியமைச்சுப் பதவியை ஏற்றதன் பின்னரும் உங்கள் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வேளையில் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்களா?"

"உண்மையில் அதற்குச் சரியான பதிலை வழங்கியவுடன், மக்களே நிலைமையைப் புரிந்துகொண்டார்கள். அதாவது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி என்பது தெரியவந்தது. அவர்கள் பாணை ரூபாய் 3.50 இற்கு விற்பனை செய்யப்போய் செய்தது எதுவுமில்லை. பொருளாதாரத்தைச் சீர்செய்து கொடுத்தோம். ஆனால், ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பதின்மூவாயிரம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இப்போது மக்களுக்கு உண்மைத்தன்மை எதுவென நன்கு தெரியும்"

"வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குப் புதிய அரசாங்கத்தில் எவ்வாறான திட்டங்களை அமுல்படுத்தவுள்Zர்கள்?"

"தற்போது நாம் முன்வைத்துள்ள திட்டத்தின் ஊடாக ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவை ஐந்தாறு ஆயிரங்களால் குறைத்துள்ளோம். பல்கலைக்கழக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. முன்கொண்டு செல்வதற்கு இதுவே போதுமானது. உலக சந்தையில் விலைவாசி குறையும்போது அதன் அனுகூலத்தை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கம்"

"அதைச் சொன்னது மஹிந்த ராஜபக்ஷ அல்லவா! நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு என்னால் வழங்க முடியாததை, நீங்கள் எவ்வாறு வழங்குவீர்கள் என்று கேட்கிறார். செய்ய முடிந்தவற்றைக்கூடச் செய்யாமல் இருந்துவிட்டுக் கேள்வி கேட்கிறார்கள். அரச ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என்கிறார். அவருக்குத் தெரியவில்லை, அரச ஊழியர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைப்பது. இதனை நடைமுறையில் சாதித்துக்காண்பித்தது முக்கியமான விடயம்"

"அப்படியாயின் இந்தத் தேர்தலில் நீங்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் யாவை, சவால்கள் இல்லை என்கிaர்களா?"

"நிச்சயமாக சவால்கள் உண்டு. காய்க்கிற மரத்திற்குக் கல்லெறி விழும் என்பதைப்போல. வேலை செய்கிறபோது சவால்கள் எழும். நன்றாகச் செய்துகொண்டு போகிறபோது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவார்கள்"

"ஜனாதிபதித் தேர்தலின்போது உங்களின் பெயரும் அடிபட்டது. ஆனால், மறைந்துவிட்டது. எதிர்காலத்தில் நாட்டிற்குத் தலைமைதாங்கும் நோக்கம் எதுவும் உண்டா?"

"உண்மையில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகவிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை நாம் நம்பினோம். அந்தநம்பிக்கையில் பொது வேட்பாளரைக் களமிறக்கி, ரணில் பிரதமராகப் பதவி ஏற்றார். எமக்கிருந்த கனவு இதுதான். ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோர் தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. இந்தத் தேர்தலின் பின்னரும் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை நீண்டநாள் நடத்திச்செல்வதே எமது எண்ணம். அந்த வெற்றிப்பாதையில் எமது திறமைகளையும் வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படும். அதன் பின்னர் தீர்மானிக்க முடியும். அவ்வாறு நாட்டுக்குத் தலைமைதாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்"

"தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தை ஏன் நம்ப வேண்டும் என்று நீங்கள் சொல்கிaர்கள்?"

"இவ்வளவு காலமாக அவர்கள் நம்பிய பாதை தவறு என்பது தெரியுமல்லவா. எம்மைச் சந்தேகித்ததால் பெரும் பாதிப்பும் ஏற்பட்டது. நாம் எந்தவேளையிலும் அரசியல் செய்வதை விடுத்து, நாட்டைப் பற்றியே சிந்தித்தோம். ஆகவே தமிழ் மக்களும் சரி, முஸ்லிம் மக்களும் சரி எம்மைச் சந்தேகக் கண்ணில் பார்ப்பதை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். தேர்தல் காலத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்ப வேண்டாம். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டபோது ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் ஆஜராகியிருக்கிறோம். நள்ளிரவு வேளையில் கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சித்தபோது நாம் அந்த இடத்தில் இருந்தோம். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை உடைத்தபோது நாம் அந்த இடத்தில் இருந்தோம். வேறு சிலரைப்போன்று ஒளிந்துகொண்டிருக்காமல் நாம் துணிந்து முன்வந்தோம். எதிர்க்கட்சி இருக்கும்போது நாம் அவ்வாறு செயற்பட்டிருந்தால், ஆளும் கட்சியாக இருந்துகொண்டு என்ன செய்ய முடியாது!"

"கொழும்பு மாவட்ட மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிaர்கள்?"

"நாட்டில் அடிப்படைவாதிகள் இல்லை என்பதைக் காண்பிப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம். இன்று தமிழர்களும் முஸ்லிம்களும் முன்வந்து ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். மஹிந்த ராஜபக்ஷாக்கள் சிறுபான்மையினர் அவசியம் இல்லை எனச் சொன்னார்கள். நாம் அவ்வாறல்ல"

"தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஏற்கப்போவதில்லை என்று கூறியிருக்கிaர்கள். தேசிய பிரச்சினை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?"

"அவர்களின் அரசியல் வாக்குறுதிகளுக்கு நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லையே! ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினையைத் தீர்ப்பதாக நாம் தெரிவித்திருக்கிறோம். தேர்தல் காலத்தில் மாத்திரம் அதைத் தருகிறோம் இதைத்தருகிறோம் என்று சொல்வதில் அர்த்தமில்லை. நாம் கொடுப்போம் என்றால் கொடுப்போம். நாம் கொடுக்காமல் அவர்களால் எடுக்க முடியாது. அவர்களின் அரசிய லென்பது பிரச்சினையை உருவாக்குவது. எமது பயணத்தில் நாம் சொல்வதைச் செய்வோம். அவர்கள் மக்களுக்குத் தவறான அர்த்தத்தைக்கொ டுக்கிறார்கள். உண்மையைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்பதே எமது விருப்பம். தமிழ் மக்கள் ஒருபோதும் உதவி கோரி வரமாட்டார்கள். எந்த இடையூறும் இன்றி வாழவிடுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கை. வேலை வாய்ப்புகூடக் கேட்கமாட்டார்கள். ஆகவே, வட கொழும்பு மக்களிடமும் நாம் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால், உண்மை நி¨யைப் புரிந்துகொண்டு ஒன்றிணையுங்கள் என்பதுதான்"

"நிதியமைச்சராக இருக்கும் உங்களிடம் ஒன்றைக்கேட்க வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுக்க புதிய அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்பீர்களா?"

"தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அது கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. அதனை அந்தத் துறைக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு செய்ய வேண்டும். தொழிற்துறையைச் சீர்குலைக்காமல் உரிய சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்"

என்று நியாயமாகச் சொல்கிறார் நிதியமைச்சர் ரவி.

(பட உதவி லிலியன்)

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.