மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை

நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

* நாட்டின் முப்பது வருடகால யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய சூழலில் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களது நலன்கள் தொடர்பில் தங்களது அரசின் திட்டங்கள் என்ன?

யுத்தம் இல்லாத இன்றைய சூழலில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முதற்படியாக சிறுபான்மை மக்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது மிகவும் அவசியமாகும். இந்த மக்களுடன் இணைந்து முதலில் நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்தி அதன் பின்னர் அம்மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை வளர்ச்சிக்குட்படுத்துவதே எமது குறிக்கோளாகும். சிறுபான்மை மக்களின் குறிப்பாக யுத்தத்தினால் நேரடியாகப் பாதிப்புக்குள்ளான வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் நாம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது. தேசியப் பிரச்சினை தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவை நாம் நியமிப்போம். அத்துடன் தீர்வு விடயத்தில் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றே நாம் செயற்படவுள்ளோம். இதற்கான ஆலோசனைகளை நாம் சர்வதேச நாடுகளிலிருந்தும் கோரவுள்ளோம்.

* தேசியப் பிரச்சினைக்கான தீர்வு காணும் விடயத்தில் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனும் தங்களது அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்துமா?

நிச்சயமாக, அவர்களுடன் பேச்சு நடத்தி எடுக்கப்படும் தீர்மானங்களே பூரணத்துவம் கொண்டதாக அமையும் என்பதே உண்மை. எனவே தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றே நிரந்தரமானதொரு தீர்வினைக் காணத் திட்டமிட்டுள்ளோம். நாட்டில் நல்லிணக்கத்தை முன்னகர்த்துவதே எமது அரசாங்கத்தின் பிரதான திட்டமாக உள்ளது. பிரச்சினைகளுடன் எம்மால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இன ரீதியான பிரச்சினைக்கு நாம் முடிவு கட்டி நல்லிணக்கம் மற்றும் இன மதங்களுக்கிடையிலான ஒற்றுமை விடயத்தில் நாட்டை முன் நகர்த்த வேண்டியுள்ளது. புதிதாக அமைக்கப்படும் எமது அரசாங்கத்தில் இதனை நாம் அமுல்படுத்துவோம்.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தங்களது அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தினால் அதனை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறும் அரசியல்வாதிகளும் நாட்டில் உள்ளனர். இதனை நீங்கள் எவ்வாறு சமாளிப்பீர்கள்?

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது என்னை தோற்கடிப்பதற்காக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டு என்னை தோற்கடித்தமை தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாவிடின், நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலனை கருத்திற் கொண்டு நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் எமது செயற்பாடுகளால் மட்டும் எவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். அது மாத்திரமின்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனை நாட்டிற்கு அழைத்து வந்தபோது அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தமை அவர்களுக்கு அன்று தெரியவில்லையா என நான் கேட்கிறேன். எனவே இவ்வாறு விதண்டாவாதம் செய்பவர்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நாம் நல்லது செய்தால் எவருக்கும் அஞ்சத் தேவையில்லை.

* இலங்கை விவகாரம் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவாவில் ஐ.நாவினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்குத் தங்களது அரசாங்கம் எவ்வாறு முகங்கொடுக்கவுள்ளது?

இவ்விடயத்தில் அரசாங்கம் வெற்றிகரமான முறையில் முகங்கொடுக்கும். அதற்கான திட்டம் எம்மிடம் உள்ளது. தேசிய நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச ஒத்துழைப்புடன் விசேட பொறிமுறையொன்றை நாம் ஆரம்பிப்போம். உண்மையில் நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையில் சர்வதேசத்தை இந்த பிரச்சினையில் தலையிடவைத்தது மஹிந்த ராஜபக்ஷவே. அவரே சர்வதேச விசாரணைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். நாட்டில் உள்ளக பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் வாக்குறுதி அளித்து அதனை மீறி செயற்பட்டமையினாலேயே சர்வதேச அழுத்தங்கள் இலங்கைக்கு எதிராக திரும்பியமைக்குப் பிரதான காரணமாகும். ஜெனிவா குழுவின் அறிக்கை என்பது எமக்கு புதியதொன்றல்ல. பல தடவைகள் குறித்த அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த அறிக்கை தொடர்பில் முன்னைய அரசின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எவ்வாறு செயற்பட்டார் என்பது எமக்கு தெரியாது. இருந்து போதிலும் இந்த அறிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுக்கும்.

* நாட்டில் குறிப்பாக கொழும்பில் பாதாள உலகக் குழுக்கள் மீண்டும் தலைதூக்கி வருவதாகக் குறை கூறப்படுகிறது. அதனைக் கட்டுப்படுத்த அல்லது இல்லாதொழிக்க தங்களது அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது?

நாட்டின் எப்பாகத்திலும் பாதாள உலகக் குழுக்கள் தலைதூக்கவோ அல்லது இயங்குவதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. அண்மையில் புளுமெண்டல் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு பாதாளக் குழுக்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கருதிவிட முடியாது இவ்விடயத்தில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாகவே உள்ளது.

* கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு செயலகத்திற்கு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடை பெறுகின்றனவா?

ஆம், நிச்சயமாக. சகல முறைப்பாடுகளுமே உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு செயலகத்திற்கு கடந்த அரசாங்கம் தொடர்பில் இதுவரை 285 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 177 முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பில் 115 முறைப்பாடுகளும், இலஞ்சம் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் 35 முறைப்பாடுகளும், குற்றச் செயல்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். குற்றம் இழைத்த எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது அரசாங்க அதிகாரியோ அல்லது பொது மகனோ தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இந்தச் செயலகம் எந்தவிதமான அரசியல் ஆதிக்கமோ அல்லது அழுத்தமோ இல்லாது சுயாதீனமாகச் செயற்பட்டு வருகிறது.

* கடந்த ஆட்சியில் சில குறிப்பிட்ட முதலீட்டாளர்களே இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். சில முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வரப் பயப்பட்டனர். இன்னும் சிலர் இங்கு வர விருப்பமில்லாதவர்களாகக் காணப்பட்டனர். இத்தகையவர்களைக் கவர தங்களது அரசிடம் ஏதாவது திட்டங்கள் உள்ளனவா?

நிச்சயமாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வராத மற்றும் புறக்கணிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களை எமது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு அழைத்து வருவோம். மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் தரகு பணம் கோரினர். வர்த்தகத்தில் பங்கு கோரினர். இதனால், முதலீட்டாளர்கள் வரவில்லை. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்படும். பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஸ்திரமான அரசாங்கம் அமைந்ததும் தாம் இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய தயாராக இருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர். இதனை விடவும் வேறு என்ன சான்று தேவை.

* ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் புதிய ஆட்சியை அமைத்ததும் அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படுவதுடன் மற்றும் பல சலுகைகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அது குறித்து....

ஆம், அது எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளவாறு அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு கால சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும். அத்துடன் அரச ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் சம்பளத்துடன் சேர்க்கப்படும். அரசாங்க ஊழியர்களுக்கு இன்னும் பல சலுகைகளை எமது அரசாங்கம் வழங்கும். அத்துடன் ஓய்வூதியக்காரர்களுக்கும் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்க நாம் சிபார்சு செய்துள்ளோம். அதுவும் விரைவில் அமுலுக்கு வரும். அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சுயாதீனமாக கடமையாற்றக்கூடிய ஒரு சூழ்நிலையை எமது அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளது.

* அண்மையில் தலவாக்கலையில் இடம்பெற்ற ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம் எனக் கேட்டிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன?

ஆம், ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனா இணைந்து இருக்கின்றார் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதையே அன்று நான் கேட்டேன். ஏனெனில் மக்கள் குறிப்பாக அவரது தொகுதி மக்கள் இவ்விடயத்தில் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்கள். அவர் இரண்டு தலைவர்களது படங்களையும் மாறி மாறி அச்சிட்டு போஸ்டர்களை ஒட்டி வருகிறார். அதனாலேயே இந்தச் சந்தேகம் எனக்கும் எழுந்தது.

* மலையகப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது சம்பளப் பிரச்சினை இதுவரை முழுமையாகத் தீர்த்து வைக்கப்படாத நிலையில் காணப்படுகிறது. அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுபவர்களாகவே உள்ளனர். இதற்குத் தங்களது அரசாங்கம் தலையிட்டு ஏதாவது ஒரு தீர்வைக் காணுமா?

நிச்சயமாக, இவ்விடயம் தொடர்பாக எனக்கு மலையகத் தலைவர்களான வேலாயுதம், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் உட்படப் பலரும் முறையிட்டுள்ளனர். தேர்தலின் பின்பு பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இவர்களுக்கு நியாயமான சம்பளம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இந்த பேச்சுவார்த்தை எம்முடன் இணைந்து இருக்கும் தொழிற்சங்கங்களையும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து தோட்ட கம்பனிகளுடன் முன்னெடுக்கப்படும். அத்துடன் மலையகத்தை பொறுத்த வரையில் நுவரெலியாவை ஒரு உல்லாச மையமாக மாற்றுவதற்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், பண்ணை தொழிலாளர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எந்தெந்த காலத்தில் எல்லாம் ஆட்சி செய்ததோ அந்த காலத்தில் எல்லாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அவர்களுடைய நலன் சார்ந்த விடயங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது.

* ஐக்கிய தேசியக் கட்சி ஒற்றையாட்சி தொடர்பில் அவதானம் செலுத்தும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி ஆட்சி முறைமையைக் கோரி நிற்பதனூடாக தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் மீண்டும் கால தாமதம் ஏற்படுவதாக அமையாதா?

இல்லை, அப்படி நான் நினைக்கவில்லை. ஏனெனில் எமது கட்சியைப் பொறுத்தவரையில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் (ஒற்றை ஆட்சி) குறித்து நிற்கிறது... ஐக்கியத்திற்கும், ஒரே இலங்கைக்கும் (ஒற்றை ஆட்சி) இடையில் எந்தவிதமான வித்தியாசமில்லை. ஆங்கில சொற்பிரயோகத்தில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிங்களத்தில் இல்லை. ஐக்கியப்படுத்துதல் என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம். அரசியல் வேலைத்திட்டம். கலாசார வேலைத்திட்டம். ஒற்றையாட்சி என்பது நீதிமன்ற நடவடிக்கையாகும். ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதனூடாக தேசிய பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதை எவ்வகையிலும் காலந்தாழ்த்தாது. பேச்சினூடாக தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு இதில் எவ்விதத் தடையும் இல்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க இரண்டுமே ஒருவகையான புரிந்துணர்வுடன் மக்கள் பணியாற்றுவதனால் இதுவொரு பாரிய பிரச்சினையாக இருக்காது. இதுவொரு விடயமே அல்ல.

* வடக்கு கிழக்கில் யுத்தத்தின்போது காணாமற்போனோரைக் கண்டுபிடிக்கவும், அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் விசேட செயலணி ஒன்றை உருவாக்குவதாகக் கூறியிருந்தீர்கள். அது குறித்து....

ஆம், இதற்காக நாம் குறிப்பிட்டவாறு விசேட செயலணி ஒன்றை நிச்யயம் உருவாக்குவோம். முதற்கட்டமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய முறையில் கொடுப்பனவுகளை வழங்குவோம். இதேபோன்று யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்.

அத்துடன் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எந்த இனத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கக்கூடிய சட்டநிபுணத்துவம் கொண்ட முறைமையை உருவாக்க நாம் முயல்வோம். மக்களுக்குச் சொந்தமான காணிகளை அவர்களுக்கு மீளக் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். வலி.வடக்கில் ஆயிரம் ஏக்கர்களை விடுவித்துள்ளோம். தேசிய பாதுகாப்புக்கு ஒரு சில பகுதிகளை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை விரைவில் விடுவிப்போம். யுத்தத்தில் அழிந்த ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களை மீள அமைப்போம். தமிழர்களும் முஸ்லிம்களும் யுத்தத்தால் இழந்த வீடுகளை மீளவும் நிர்மாணிப்போம். இவ்விடயத்தில் எமக்கு உதவ இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

* நீங்கள் கடந்த வாரம் வடக்கிற்கு தேர்தல் பிரசார நடவடிக் கைகளுக்காகச் சென்றிருந்தபோது வடக்கு மக்களின் வாழ்வா தாரத்தை உயர்த்தும் வகையில் அங்கு பல அபிவிருத்திகளை ஏற்படுத்தவுள்ளதாகக் கூறியிருந்தீர்கள். அது பற்றிக் கூற முடியுமா?

ஆம், அங்கு குடி நீர்ப்பிரச்சினை உள்ளது. விவசாயத்திற்கும் நீர் தேவையாக உள்ளது. அதனால் அங்கு குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக உயரிய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவோம். விவசாயத்திற்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு இரணைமடுத் திட்டம் பற்றி ஆராயப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வளங்கள் நிறைந்த பல்கலைக்கழகமாக மாற்றுவோம். அதி விசேட தொழில்நுட்ப மையமாக யாழ்ப்பாணத்தை மாற்றுவோம். ஆட்சிப் பீடமேறிய ஐந்து வருட காலத்துக்குள் 10 இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவிக்கை எடுப்போம். வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் இதனை செய்வோம். வடக்கில் பொருளாதார வலயங்களை உருவாக்கும் அதேவேளை தீவகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவோம். கிளிநொச்சி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதுடன் குளங்களையும் புனரமைப்போம். மீனவர் சமூகத்தின் வளர்ச்சிக்காக புதிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவோம்.

* கடந்த ஆட்சியில் குற்றமிழைத்த அரசியல்வாதிகள் பலரைச் சிறைக்கு அனுப்பக் கூடியதாக சான்றுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் உங்களது அரசாங்கம் அவ்வாறு நடவடிக்கை எதனையும் எடுக்காதுள்ளது. இது ஏன்?

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தைப் போல நாமும் செயற்பட்டிருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராஜபக்ஷ குடும்ப அங்கத்தவர்கள் உட்படப் பலரைச் சிறையில் போட்டிருக்கலாம். நாம் ராஜபக்ஷவைப் போன்று மக்களைத் தண்டிக்கமாட்டோம். இல்லாவிட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரையும், அவருடன் இருந்த பலரையும் சிறையில் போட்டிருக்கலாம். நாம் சட்டத்துக்கமையவே செயற்படுகிறோம். விசாரணை செய்ய எமக்கு பொறிமுறையொன்று தேவைப்படுகிறது. ஏனெனில்’ இந்த மோசடிகளில் பல மூளையைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே சட்டம் தனது கடமையைச் சரிவரச் செய்யும். அதுவரை பொறுத்திருப்போம்.

* மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக எதிர்க்கட்சியினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து.....

எமது அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளையுமே அவர்கள் விமர்சிக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று. மத்திய வங்கியின் பிணை முறி வழங்களில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அதனை மூடி மறைப்பதற்கான எந்தத் தேவையும் எமக்கு இல்லை. இவ்விடயத்தை நாம் தட்டிக்கழிக்கவில்லை. ஏற்கனவே விசாரணைகளை நடத்தியுள்ளோம். எதிரணியினருக்கு இன்னமும் சந்தேகம் இருக்குமானால் இந்தப் பிணை முறிகள் தொடர்பில் அடுத்த பாராளுமன்றத்தில் மற்றொரு தெரிவுக்குழு நியமித்து அது சம்பந்தமாக ஆராய்ந்து பார்க்கப்படும்.

* முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி விவாதத்திற்குத் தங்களை அழைத்திருந்தார். ஆனால் நீங்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்Zர்கள். அதற்கான காரணம் என்ன?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் இல்லை. இதனால் அவருடன் எவ்வித விவாதத்திற்கும் செல்ல தான் தயாராக இல்லை. மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் இல்லை என அந்த கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களே திட்டவட்டமாக கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷதான் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளர் என ஜனாதிபதி மைத்திரிபால கூறுவாராயின், அப்போது அவரின் சவாலை ஏற்று அவருடனான விவாதத்திற்கு நான் தயார். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல இதுவரை விவாதத்திற்கு வருமாறு எனக்கு எவ்விதமான அழைப்பும் விடுக்கப்படவில்லை. சில ஊடகங்களில்தான் நானும் பார்த்தேன்.

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]