மன்மத வருடம் ஆடி மாதம் 16 திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஷவ்வால் பிறை 17
SUNDAY AUGUST 02 2015

Print

 
தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்

தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்

தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது என்பது இயல்பாக நடைபெறும் விடயம். ஆனால் அது நாகரிகமானதாக இருக்க வேண்டும். அத்த கைய நாகரிகமான விமர்சனங்களை வைத்தே மக்கள் அந்தந்த அரசியல்வாதிகளை எடை போடுகிறார்கள். அதே போன்றுதான் தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயற்பாடு களும் பக்கச் சார்ப்பற்றதாக அமைய வேண்டும். தாம் ஆத ரவு தெரிவிக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு அல்லது அரசி யல்வாதிக்கு அளவு கடந்து சென்று விளம்பரம் கொடுத்து அடுத்தவரைத் தாக்க இடம் கொடுப்பது என்பது எவ்வகை யிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு விடயம்.

ஆனால் இன்று எமது நாட்டில் இந்தத் தேர்தல் காலத்தில் நடப்பது என்ன? அரசியல்வாதிகளில் பலரும், ஊடகங் களில் பலவும் அருவருக்கத்தக்கதான விடயங்களைச் செய்து வருதை இலகுவாகவே அனுமானிக்க முடிகிறது. மிகவும் தரம் தாழ்ந்து இவ்விரு தரப்புகளும் செய்து வரும் அநாகரிகமான செயற்பாடுகளை மக்கள் கூர்ந்து அவதா னிக்க வேண்டும். இத்தகைய அரசியல்வாதிகளுக்கு இத் தேர்தலில் மக்கள் நல்லதொரு பாடம் புகட்ட வேண்டும். அத்துடன் இத்தகைய பக்கச் சார்ப்பான ஊடகங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பலரும் இன வாதத்தைக் கக்கி வருவதுடன், எதிரணியினரை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து கேவலப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்விடயத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலத்தில் இருந்த மிக மோசமான நிலை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களது சில கடு மையான உத்தரவுகள் காரணமாக தளர்வு கண்டிருக்கிறது. அதேபோன்றுதான் சில ஊடகங்களும் ஊடக தர்மத்தின் எல்லை கடந்து தமது பணியைச் சில கட்சிகளுக்காகவும், சில அரசியல்வாதிகளுக்காகவும் ஆற்றி வந்த பணியை இப்போது அடக்கி வைத்துள்ளன. இதற்கும் தேர்தல் ஆணையாளரது உத்தரவே காரணம் என்பதை அறிய முடிகிறது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் தாம் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதுவும், அதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாள்வதும் இயல்பான விடயமே. ஆனால் அதற்காக இனவாதத்தையும், வன்முறைகளையும் கையி லெடுத்துச் செயற்படுவது என்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. நாட்டிலுள்ள பிரதான தேசி யக் கட்சிகளைப் பொறுத்த வரையில் அவற்றில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பண பலம் பொருந்தியவர்களாகவும், போதிய அரசியல் அனுபவம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் சிறு கட்சிகளும், சிறுபான் மைக் கட்சிகளும் இந்த நிலையில் இல்லை. பிரதான கட்சி களுடன் இணைந்து போட்டியிடும் சிறு மற்றும் சிறுபான் மைக் கட்சிகள் சில இதற்கு விதிவிலக்கு எனினும் அவற் றுக்கும் சில பிரச்சினைகள் காணப்படுகின்றது.

இந்நிலையில் வடக்கு கிழக்கில் போட்டியிடும் பிரதான கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங் கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிக ளுடன் மேலும் சில சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் என்பன தமக்குள் ஒருவிதமான போட்டித் தன் மையை ஏற்படுத்திச் செயற்படுவதை அவதானிக்க முடிகி றது. சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இக்கட்சிகள் தமது அரசியல் இருப்பிற்காக தமக்குள் கருத்து முரண்பாடுகளை ஏற்ப டுத்திக் கொள்வதை மக்கள் விரும்பவில்லை.

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னரைப் போன்று இலகுவான வெற்றியை இம்முறை கண்டுவிட முடி யாது. அக்கட்சிக்குப் போட்டியாக அங்கு பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் களத்தில் உள்ளன. அதே போன்று கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளில் போட்டியிடுவோர் எனப் பல முனைப் போட்டி அங்கு காணப்படுகிறது. தேசிய ரீதியிலும் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக களத்தில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னாள் இராணுவத் தள பதியின் தலைமையிலான கட்சி என்பவனவும் சில ஆச னங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன.

இவ்வாறு தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் இம்முறை பல முனைகளில் போட்டி நிலை காணப்படுவதால் வேட் பாளர்களினதும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளினதும் பிரசார நடவடிக்கைகளும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்தே காணப்படுகிறது. இதனாலேயே ஒரு கட்சிக்கு மற்றக் கட்சியும், ஒரு அரசியல்வாதிக்கு மற்றைய அரசியல்வாதியும் சேறு பூசும் நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது. வேட்பாளர்களில் பலர் தமதும், தமது கட்சியினதும் வெற்றிக்காக எதனையும் செய்யத் துணிந்தவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த நிலை ஆரோக்கியமானதல்ல. இங்கிருந்தே பிரச்சி னைகள் ஆரம்பமாகின்றன. ஊடகங்களில் பிரசாரம் தேடு வதற்காக பொய்யானதும், கற்பனை வடிவிலானதுதான அறிக்கைகளை இவர்கள் விட்டு வருகின்றனர். சில ஊடகங் களும் இவற்றை அப்படியே பிரசாரம் செய்து வருகிறது. இவை நிறுத்தப்பட வேண்டும். இறுதி நேரப் பிரசார நடவடிக்கைகள் கெளரவமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். வேட்பாளர்களும், ஊடகங்களும் தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதி தெருச் சண்டியன் போன்றோ அல்லது இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய்பவராகவோ இருப்பதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இத்தகைய சிந்தனை உள்ளவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். அத்துடன் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளினால் வழங்கப்படும் சிறு சிறு சலுகைக ளுக்காக மக்கள் சோரம் போய் விடக் கூடாது. ஆறு வரு டங்கள் தமக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதுடன், தமது தொகுதியை அபிவிருத்தி செய்து தமது தேவைகளை நிறைவேற்றக் கூடியவர்களையே மக்கள் தெரிவுசெய்ய வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]