ஜய வருடம் தை மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ர.ஆகிர் பிறை 11
SUNDAY February 02 2014

Print

 
மாணவி மரணம் தற்கொலை அல்ல! திடுக்கிடும் கடிதம்!

மாணவி மரணம் தற்கொலை அல்ல! திடுக்கிடும் கடிதம்!

பகிடிவதை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 23 வயதான எஸ்.எஸ்.அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் தனது சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாமென எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். மேலும் தனக்குச் சொந்தமான காணியை அநாதை ஆசிரமத்திற்கு வழங்குமாறும் மாணவி தனது கடிதத்தில் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனுநீதியின்படி அமாலியின் மரணம் தற்கொலை அல்ல!

அமாலியினதும் பெற்றோரினதும் இலட்சியங்கள், கனவுகள் இன்று பகிடிவதை என்ற அரக்கனின் கையில் சிக்கிய பூமாலையாக போய்விட்டது மனுநீதியின்படி அமாலியின் மரணம் தற்கொலை அல்ல! இந்த மாணவி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த போது மிகக் கொடூரமாக பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இதனால் மிகுந்த வேதனையடைந்து காணப்பட்டார்.

மேலும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அமாலி ஒரே தடவையில் 16 மாத்திரைகளை உட்கொண்டிருந்தார். இதன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அத்துடன் மன நலம் குன்றியவராகவும் காணப்பட்டார்.

பின்னர் வீடு திரும்பிய அவர் மிகவும் வேதனையடைந்த நிலையில் வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனால், அவர் வாழ்வா? சாவா? என்ற மன போராட்டத்துடனேயே சில நாட்கள் காணப்பட்டமையை எவரும் கண்டுகொள்ளவில்லை. முடிவில் தனது நிம்மதிக்கு மரியாதைக்கும் தற்கொலை ஒன்றே உரிய பரிகாரம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

இதன்படி, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் சில விடயங்களையும் மன்றாட்டமாக தனது பெற்றோர் உறவினரிடம் கேட்டிருந்தார். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் தனக்குச் சொந்தமான காணியை அனாதைகள் ஆச்சிரமத்திற்கு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருந்தார்.

அமாலியின் வாழ்க்கையின் இருண்டு போன முடிவு இன்று பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அவரதும் அவரது பெற்றோரினதும் இலட்சியங்கள், கனவுகள் இன்று பகிடிவதை என்ற அரக்கனின் கையில் சிக்கிய பூமாலையாக போய்விட்டது. ஆனால் மனுநீதிப்படி இதனை ஒரு தற்கொலையல்ல கொலையாகவே பார்க்கப்பட வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]