ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
தமிழருக்கு தீர்வொன்றை காணும் நிலைப்பாட்டில் புதிய அரசு உறுதி

தமிழருக்கு தீர்வொன்றை காணும் நிலைப்பாட்டில் புதிய அரசு உறுதி

வடக்குக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்தும் ஆராய்வு

இலங்கையின் சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருக்கின்றது. வடக்குக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்தும் தமது புதிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் நடந்த தேர்தலானது மாற்றத்திற்காக இடம்பெற்ற தேர்தல் எனவும் இந்த மாற்றத்தின் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்த பிரதமர் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் எனவும் தெரிவித்துள்ளார்.

இதில் செய்யப்பட வேண்டிய பணிகளில் மிக முக்கியமான பணி ராஜபக்ஷ அரசாங்கம், அரசியல்மயப்படுத்திய பொலிஸ் திணைக்களத்தை அதில் இருந்து விடுவிப்பது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல், கடந்த அரசாங்கம் சீனாவின் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுடன் செய்து கொண்ட சில மோசடி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து புதிய அமைச்சரவைக்கு தகவல்கள் தெரியவந்துள்ளதை அடுத்து புதிய அரசாங்கம் கடும் போராட்டத்தை எதிர்நோக்கி வருகிறது.

ராஜபக்ஷ அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக மேற்கொண்ட சில திட்டங்கள் விலை மனுகோரப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை கடந்த அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு முன்வைக்கவில்லை.

கொழும்பு காலி முகத்திடலுக்கு எதிரில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் சுற்றுச் சூழல் ஆய்வின் பின் ஆரம்பிக்கப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]