ஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1436 ஸபர் பிறை 06
SUNDAY November 30 2014

Print

 
உலக மகா நடிகை எலிசபெத் டெய்லரின் சாதனை

உலக மகா நடிகை எலிசபெத் டெய்லரின் சாதனை

உலகப் பிரபலங்களாகத் திகழும் வாய்ப்பு பெரும்பாலும் அரசியல் தலைமைகளுக்கே இதுவரை கிட்டியுள்ளதை அறிந்திருக்கிறோம். ஆனால் அபூர்வமாக உலக அழகு ராணிகள் என்ற பட்டத்தோடு, சினிமா நடிகைகளாகவும் திகழ்ந்த மேல்நாட்டு பெண்கள் சிலருக்கும் இந்தப் பிரபலம் கிடைத்திருக்கிறது.

அந்தச் சிலரில், கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவுக்கு அடுத்தபடியாக, அழகிலும் நடிப்பிலும் வெகு பிரசித்தமாகி, அந்நாளில் ஆண்கள் பலரின் தூக்கத்தைக் கெடுத்து சொப்பனாவஸ்தையில் உழல வைத்தவர், அண்மையில் தமது 79 ஆவது வயதில் காலமான ஹொலிவூட் நடிகை எலிசபெத் டெயலர்!

சராசரிப் பெண்களினதும் வாழ்க்கை முறைமைகளிலிருந்து வேறுபட்ட ஒரு அசாதாரண நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு எலிசபெத் டெய்லர் சரியான உதாரணமாகக் கருதப்படுகிறார். நடிகையாகும் ஆசையோடு தனது இளமைக் காலத்தையெல்லாம் அதற்கான தேடுதலோடு கழித்து கடைசிவரை ஏமாந்த ஒரு பிரிட்டிஷ் பெண்ணுக்கு மகளாகப் பிறந்தவர் எலிசபெத்.

தனது நெடுநாள் கனவை தனக்குப் பிறந்த மகளாவது நிறைவேற்றுவாளென்ற நம்பிக்கையோடு குழந்தையையும் தூக்கிக் கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றார் அம்மா. அதன்படியே பல முயற்சிகளுக்கும் சிபாரிசுகளுக்கும் மத்தியில் ஒன்பது வயதிலேயே ஹொலிவூட்டில், தமிழகத்து நாயகன் கமல்ஹாசனைப் போல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் எலிசபெத்.

தொடர்ந்து பல படங்களில் நடித்து, 12 வயதிலேயே புகழ்பெற்ற எம்.ஜீ.எம்.ஸ்ரூடியோவில் ஓர் ஒப்பந்த நடிகையாகியும் விட்டார். நடிப்பில் திறமை காட்டினாலும், இதர விடயங்களில் அந்நிறுவன நிர்வாகிகளுடன் ஒத்துழைக்காத காரணத்தால் இவருக்கு கதாநாயகி வேடங்கள் கொடுக்காமல் தவிர்த்து வெறுப்பேற்றிவந்தனர்.

18 வயதில் இவருக்கு முதல் திருமணம் நடந்தது. மணமகன் அமெரிக்காவின் மிகப்பெரிய ஹில்டன் ஹோட்டல்கள் குழுமத்தின் தலைவர். ஆனால் ஏனோ அந்த மணவாழ்வு ஓருவருட காலம் கூட நிலைக்கவில்லை. உடுத்த உடையைக் கழற்றிவிட்டு அடுத்தடுத்து புத்தாடைகளைப் புனைவதைப் போல வரிசையாய் அவர் மணம் செய்துவந்த கணவன்மாரில் முதலாவது ஆள் என்ற பெருமை மட்டும் அவருக்கு வந்தது.

அவரை விவாகரத்துச் செய்த கையோடு அடுத்த திருமணம். அவரைவிட இருமடங்கு வயதான பிரிட்டிஷ் நடிகர் எடிபிஷருடன் முதல் குழந்தையைக் கருவுற்றபோது அவர் கர்ப்பிணியென்றும் பாராமல் மிகவும் கஷ்டமான பாலைவனப் படமொன்றில் அகோர வெயிலில் நீண்டநேரம் அலைந்து நடிக்க வைத்தார்கள், இதன் பிறகாவது இந்த நடிப்புத் தொழிலை வேண்டாமென்று வெறுத்து ஒதுங்கி விடுவார் என்று கருதி. அதற்கெல்லாம் அசரவுமில்லை, பின்வாங்கவுமில்லை எலிசபெத் டெய்லர்.

நமது இந்திய நடிகைகளைப் பார்த்தோமானால், கல்யாணமாகிப் போனாலும் சரி, ஒரு பிள்ளைக்குத் தாயாகிப் போனாலும் சரி, அவர்களுக்கு படவாய்ப்புகள் இல்லாமல் போகும். அவர்களும் முகவரி தெரியாமல் மாறிப்போய் விடுவார்கள். அல்லது கதாநாயகனுக்கு அம்மா அல்லது அண்ணி வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாவார்கள். அதற்கெல்லாம் மாறாக ஒரு குழந்தைக்கு தாயான பின்னர்தான் எலிசபெத்தின் புகழ் உச்சாணிக்கொப்புக்கு ஏறியது. தொடர்ந்து அவர் கதாநாயகியாக நடித்த படங்களெல்லாம் அடுத்தடுத்து வெற்றிபெற்றன. அமோக வசூலைத் தந்தன.

வெறும் அழகியாக, கவர்ச்சிக்கன்னியாக இல்லாமல் ஏற்கும் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து அதனுடன் ஒன்றிவிடும் ஓர் உன்னதமான நடிகையாகவும் ஜொலித்த காரணத்தால் அடுத்தடுத்த இரு ‘ஒஸ்கார்’ விருதுகள் அவர் நடித்த படங்களுக்குக் கிடைத்தன. அந்நாளில் முதன்முதலில் 70 மி.மீ.அகலத்திரைப்படமாக வெளிவந்து பிரமிக்க வைத்த பிரமாண்டமான தயாரிப்பான கிளியோபாட்ரா படத்தில் கிளியோ பாட்ரா வேடத்தில் இவர் தோன்றிய போது, எகிப்து நாட்டைச் சேர்ந்த அந்த உலகப் பேரழகி இவரைப் போலவே இருந்திருப்பாரென ரசிகர்கள் நம்பினார்கள்.

அதில் கதாநாயகன் யூலியஸ் சீசரின் உற்ற தோழன் மார்க் அன்ரனியாக தோன்றிய நடிகர் ரிச்சட் பேர்ட்டன், காதல் காட்சிகளில் இவருடன் ஒன்றி நடித்து இவரது மனதைக் கவர்ந்தார். அந்தப் படம் வெளியான தினத்தில் எலிசபெத் தமது பழைய கணவரை விவாகரத்துச் செய்துவிட்டு அதிரடியாய் இவரைத் திருமணம் செய்துகொண்டு விட்டார்.

விரும்பியது கிடைப்பதற்காக வெறியோடு உழைப்பது, அல்லது போராடுவது என்பது வேறு. ஆனால் எதை விரும்பினாலும் அது இரு மடங்கென்று, மும்மடங்கென்று அதிகமாகக் கிடைக்கும்போது, அவை எல்லாவற்றிலும் ஒருவிதமான சலிப்பு அல்லது வெறுப்பு ஏற்படுமே, வாழ்வில் ஒரு கட்டத்தில் எலிசபெத் டெய்லருக்கு அதுதான் வந்தது.

கொள்ளை கொள்ளையாய் பணம், வானளாவிய புகழ், சமூகத்தில் பெரிதான செல்வாக்கு, ஆள், அம்பு, சேனையென்று இராஜ அந்தஸ்து எல்லாமே கிடைத்தன. இப்படி எல்லாம் நிறைந்திருந்தும் மன நிம்மதி மட்டும் இல்லை. உள்ள குறைகேட்க, உணர்வுகளையும் சுகதுக்கங்களையும் பகிர்ந்துகொள்ள யாருமேயில்லை.

தமது அறுபதாம் வயதிலிருந்து எந்தக் கணவரினதும் துணையின்றி சுமார் 15 வருடகாலம் இரவென்றும் பகலென்றும் பாராது வருத்திய தனிமையின் கொடுமை தாங்காமல் போதை மாத்திரைகளுக்கும் மதுவுக்கும் அடிமையானார். அவற்றிலிருந்து மீள்வது போராட்டமாக இருந்தது. அவரைப் பராமரித்த வைத்தியர்களுக்கும் அது சோதனையாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தமக்குத் தோன்றிய வாறு தமது பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாத்தியங்களையெல்லாம் தர்மஸ்தாபனங்களுக்கும் உலகெங்கிலுமுள்ள அனாதை ஆசிரமங்களுக்கும் எழுதிவைத்தார். வறிய வளர்முக நாடுகளிலுள்ள அன்னை தெரேசாவின் அனாதைகள் இல்லங்களுக்கு உதவுவதற்கென்று தனியான நிதியமொன்றையே அவர் ஏற்படுத்தியிருந்தது பின்னர் தெரியவந்தது.

இறுதியில் 15 ஆண்டுகள் கணவன் என்று எவரது துணையுமின்றி வாழ்ந்தார். கணவன் என்ற காதலுறவு இறுதிக் காலத்தில் ஒரு அத்தியந்த தோழமையாகி வாஞ்சையோடு உதவும் ஒரு பொதுவான பாக்கியம் கடைசிவரை அவருக்குக் கிட்டவில்லை. அவர் துணையின்றி இருந்த நீண்டகாலம் அந்தக் கடைசி 15 ஆண்டுகளும்தான்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]